பக்கங்கள்

22 செப்டம்பர் 2019

சர்ச்சைக்குரிய பிக்குவின் உடல் அடக்கத்திலும் சர்ச்சை!

புற்றுநோயினால் மரணமான பௌத்த பிக்குவின் உடலை நாளை காலை நீதிமன்றம் கூடி உத்தரவு பிறப்பிக்கும் வரை, பூமியில் புதைக்கவோ எரிக்கவோ முடியாது என முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதpவான் உத்தரவிட்டுள்ளார். முல்லைத்தீவு பழைய செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக நேற்று மகரகம வைத்தியசாலையில் மரணமடைந்தார். மரணமடைந்த பௌத்த பிக்குவின் சடலத்தை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்துக்கு கொண்டுவந்து இறுதிகிரியைகளை மேற்கொள்வதற்கு இராணுவம் மற்றும் கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்து பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் நேற்று இரவு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் தடை கோரி முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.சுதர்சன் முன்னிலையில் இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது . இதன்படி நாளை காலை 9 மணிக்கு விகாரை தரப்பினரையும் பிள்ளையார் ஆலய தரப்பினரையும் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நாளையதினம் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றால் கட்டளை ஒன்று ஆக்கும்வரை குறித்த பௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ எரிக்கவோ முடியாது எனவும் - அதுவரையான காலப்பகுதியில் பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்தும் விதமாக பொலிஸார் கடமையில் ஈடுபடவேண்டும் எனவும் முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தநிலையில் இறந்த பௌத்த பிக்குவின் சடலம் பழைய செம்மலை நீராவியடியில் ஆலய வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது . சிங்கள மக்கள் சிங்கள மாணவர்கள் பொதுஜன பெரமுன கட்சியினர் உள்ளிட்டவர்கள் பௌத்த பிக்குவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொலிஸார் ,விசேட அதிரடிப்படையினர் இணைந்து கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.