பக்கங்கள்

23 செப்டம்பர் 2019

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடக அறிக்கை!

நீதிமன்ற தீர்ப்பை மீறி இந்து ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்ட பௌத்த பிக்குவின் பூதவுடல்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
23-09-2019
ஊடக அறிக்கை.

புத்த பிக்குவின் உடல் சைவக் கோவிலின் வளாகத்தில் எரியூட்டப்பட்டமை, சட்டத்தரணி சுகாஸ் மற்றும் பொது மக்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தும் இடம்பெறவுள்ள கண்டனப் போராட்டத்திற்குப் பூரண ஆதரவு.
முல்லைத்தீவு மாவட்டம் நாயாற்றுப் பகுதியில் அமைந்துள்ள நீராவியடி பிள்ளையார் ஆலய வளவை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த புத்த கோவிலின் பிக்கு உயிரிழந்த நிலையில் இவரது உடலை பிள்ளையார் ஆலய வளவினுள் தகனம் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினால் நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது. எனினும் நீதிமன்ற உத்தரவை மீறி ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில் பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. ஞனசாரதேரர் தலைமையிலான சிங்கள பௌத்த சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு முன்னிலையில் நீதி மன்றின் உத்தரவை மீறி பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணிப் பகுதியில் தகனம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களது செயலைத் தடுப்பதற்கு குறித்த பொலிஸ் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறக நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி தகனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் மக்களை குறித்த பொலிஸ் அதிகாரியும், பொலீசாரும் இணைந்து அச்சுறுத்தியதுடன், பிக்குகளின் அடாவடித்தனமான செயற்பாட்டிற்கும் உறுதுணையாகச் செயற்பட்டிருந்தனர். நீதி மன்ற உத்தரவை மீறி பிக்குவின் உடலைத் தகனம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோதமான நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கு அங்கு திரண்டிருந்த தமிழ் மக்களுடன் இணைந்து சட்டத்தரணிகள் முயன்றபோது சட்டத்தரணி சுகாஸ் உட்பட நான்கு பேர் பிக்குகளினால் கடுமையாகத் தக்கப்பட்டுள்ளனர். சைவசமயத்தவர்களின் புனிதத் தலங்களில் ஒன்றான நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணியருகில் பிக்குவின் உடலம் எரிக்கப்பட்டமைக்கும், சட்டதரணி சுகாஸ் மற்றும் பொது மக்கள் மூவர் தாக்கப்பட்டமைக்கும் எமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நாளை செவ்வாய்க்கிழமை (24-09-2019) காலை 11.00 மணிக்கு முல்லைத்தீவு பழைய ஆஸ்ப்பத்திரியடி (உண்ணாப்பிலவு) முன்பாக ஒன்று கூடி பேரணியாக கச்சேரி செல்ல தமிழர் மரபுரிமைப் பேரவை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கண்டனப் போராட்டத்திற்குப் பூரண ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அனைத்துத் தமிழ் மக்களையும் மேற்படி போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.