பக்கங்கள்

20 ஏப்ரல் 2016

பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சுவிஸ் குமார் எவ்வாறு தப்பினார்?

vithya_swisskumarபுங்குடுதீவு மாணவி கொலையுடன் தொடர்புடையவர் என பொதுமக்களால் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எவ்வாறு பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்றார் என்பது தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பதினோராம் மற்றும் பன்னிரெண்டாம் சந்தேக நபர்கள் இன்று(புதன் கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் எம்.எம்.றியாழ் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். இதன் போது நீதவான் குறித்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. எனவே இதுவரை நடைபெற்ற விசாரணை தொடர்பிலான அறிக்கையையடுத்த வழக்கு தவணையில் மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் கொடுக்கப்பட்ட நபர் எவ்வாறு பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்றார் என்பது தொடர்பிலான விசாரணை அறிக்கையை அடுத்த தவணையின் போது சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மாகாலிங்கம் சசிக்குமார் யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சுவிஸிற்கு தப்பி செல்வதற்காக கொழும்பில் இருந்த வேளை மீண்டும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் யாழ் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி செல்வதற்கு அப்போதைய வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் சட்டத்துறை விரிவுரையாளர் தமிழ் மாறன் ஆகியோர் உதவினார்கள் என பொது மக்களால் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதில் சட்டத்துறை விரிவுரையாளரான தமிழ் மாறனையும் பொலிசார் கைது செய்ய வேண்டும் என கோரி புங்குடுதீவு மக்கள் தமிழ் மாறனை சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் சுற்றி வளைத்து போராட்டம் நடாத்தி இருந்தனர். அதன் பின்னர் தாம் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துவோம் என பொலிசார் கடற்படை மற்றும் இராணுவத்தினர் உறுதியளித்ததன் பின்னரே மக்கள் தமது போராட்டத்தை கைவிட்டனர். இருந்த போதிலும் தமிழ் மாறன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.