பக்கங்கள்

17 ஏப்ரல் 2021

நடிகர் விவேக் மரணம்!என்னதான் நடந்தது?

நடிகர் விவேக்கின் திடீர் மரணம் தமிழ் சினிமாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவரது மரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விவேக் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் கோலோச்சி வந்தார்.இயக்குநர் பாலச்சந்தர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட விவேக் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகர் விவேக். மக்கள் தடுப்பூசி போட அச்சப்படக்கூடாது என்று தைரியம் கூறினார் விவேக்.இதனை தொடர்ந்து உடல் சோர்வுடன் இருந்த நடிகர் விவேக், நேற்று காலை வழக்கமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சியையும் மேற்கொள்ளவில்லை. பின்னர் காலை 11 மணியளவில் சென்னை விருகம்பாக்கம் வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார் விவேக்.அப்போது திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட நடிகர் விவேக் திடீரென மயங்கி சரிந்து விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் மற்றும் எக்மோ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தொடர்ந்து நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர்கள், விவேக் இன்னும் ஆபத்தான கட்டத்தில் தான் இருக்கிறார் என்றனர்.மேலும் அவரின் உடல் நலக்குறைவுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினர். நடிகர் விவேக்கிற்கு ஏற்கனவே ரத்தக்கொதிப்பு இருந்தது என்றும் அவரது இதயத்தின் இடதுபுற ரத்தக்குழாயில் 100% அடைப்பு இருந்தது என்றும் கூறினர்.மேலும் நடிகர் விவேக்கிற்கு கார்டியோஜெனிக் ஷாக் எனும் இதய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் உடலுக்குத் தேவையான போதுமான இரத்தத்தை இதயத்தால் பம்ப் பண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது கடுமையான மாரடைப்பை ஏற்படுத்தி விட்டது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து விவேக்கின் உடல்நிலையை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். ஆனால் 24 மணி நேரத்திற்குள்ளேயே இன்று காலை 4.35 மணிக்கு சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக்கின் உயிர் பிரிந்தது.விவேக்கின் இதயத்துடிப்பு மற்றும் நுரையீரல் செயல்பாட்டை தூண்டும் வகையில் தொடர்ந்து எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் விவேக்கின் இதயத்துடிப்பு முற்றிலும் குறைந்து இன்று காலை நின்று போனது. அவரது உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் நடிகர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

15 ஏப்ரல் 2021

புளியங்கூடல் பற்றிய காணொளி-வெளியீடு கப்பிற்றல் தொலைக்காட்சி!

புளியங்கூடல் கிராமம் பற்றிய தகவல்களை வழங்கியிருப்போர் மதிற்பிற்குரிய கணேசலிங்கம் அண்ணா மற்றும் செந்தூரன் அவர்கள்.

27 மார்ச் 2021

நாளை மாபெரும் சைக்கிள் பேரணிக்கு நாம் தமிழர் அழைப்பு!

சென்னையில், மார்ச் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை, நாம் தமிழர் கட்சி சைக்கிள் பேரணி நடத்தி மக்களிடம் ஆதரவு கேட்க உள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடைபெற இருக்கின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்பதும், அதன் வேட்பாளர்களில், சரிபாதி தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவதும் தாங்கள் அறிந்ததே.அதில் ஒரு சிறப்பம்சமாக, தியாகராய நகர் தொகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் சகோதரி சிவசங்கரி போட்டியிடுகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறையின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.சகோதரி சிவசங்கரியை ஆதரித்தும், தமிழகம் முழுவதும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் ஆதரித்து வருகிற மார்ச் 28ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் பாசறையானது, மாபெரும் மிதிவண்டிப் பரப்புரைப் பேரணியை நடத்த உள்ளது.மிதிவண்டிப் பரப்புரைப் பேரணியானது, அன்றைய தினம் காலை 6.30 மணி அளவில் ஆரம்பித்து, சௌந்தர பாண்டியனார் அங்காடி, எம்ஜிஆர் நினைவு இல்லம், நடேசன் பூங்கா, துரைசாமி சுரங்கப்பாதை, மேற்கு மாம்பலம், அசோக்நகர் , வடபழனி, கோடம்பாக்கம் வழியாக மீண்டும் பனகல் பூங்காவினை காலை 8.30 மணி அளவில் சென்றடைந்து நிறைவடைகிறது. இந்த நிகழ்வில் நண்பர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

19 மார்ச் 2021

தமிழர்களுக்கு எதிரான உச்சக்கட்ட கொடூரமே முள்ளிவாய்க்கால் படுகொலை!

2009 ஆம் ஆண்டில், இலங்கையின் உள்நாட்டுப் போரின் கடைசி சில மாதங்களில், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர் என பிரித்தானிய நாடாளுமன்ற தொழிற்கட்சியின் உறுப்பினர் சியோபைன் மெக்டோனாக் தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் ஒன்று (Back bench Debate) நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்திற்கான முன்னெடுப்புக்களை பிரித்தானியத் தமிழர் பேரவையினர், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவினூடாக (APPG forTamils) முன்னெடுத்திருந்தனர். கடந்த 11ஆம் திகதி பெப்ரவரி மாதம் 
நடைபெறவிருந்த இந்த விவாதமானது நாடாளுமன்றத்தில் வேறு ஒரு அவசர நிகழ்வால் மாற்றப்பட்டு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளின் மிக உச்சகட்டமான முள்ளிவாய்க்கால் படுகொலையின் கொடூரத்தை நாம் அனைவரும் அறிவோம். இலங்கையின் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும், அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச (தற்போதைய ஜனாதிபதி) பாதுகாப்பு செயலாளராக இருந்தனர். 1980 களில் இருந்து, தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினரான இலங்கையில் குறைந்தது 60,000 மற்றும் 100,000 வழக்குகள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச பொது மன்னிப்பு சபை மதிப்பிடுகிறது. இந்த புள்ளிவிவரங்கள் துன்பத்தின் அளவு, உண்மைகளைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் தீர்வுக்கான அவசரத் தேவையை வலியுறுத்துகின்றன. உள்நாட்டுப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட கற்பழிப்பு, சித்திரவதை மற்றும் கொலை ஆகியவற்றின் கொடுமை, பெண்களின் உரிமைகளை பெருமளவில் மீறிய கதைகள், அவை நாம் ஒருபோதும் மறக்க முடியாத கதைகள். எனினும், இன்றுவரை, சர்வதேச குற்றங்களுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. இதேவேளை, இலங்கையில் மனித உரிமைகள் மீண்டும் மீறப்படுகின்றன. கடுமையான போர்க்கால துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பலர் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் ஏழு அமைச்சரவை பதவிகள் உட்பட ஒன்பது அமைச்சர் பாத்திரங்களை வகிக்கின்றனர், மேலும் பாதீட்டில் கால் பகுதியை நிர்வகிக்கின்றனர். மனித உரிமை மீறல் குற்றவாளிகளாக கருதப்படும் பாதுகாப்புப் படையின் உறுப்பினர்களில் ஒருவரான சார்ஜென்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மன்னிப்பு வழங்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரான மிரட்டல் மிகச் சிறந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு வலுவான நடவடிக்கை எடுக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவை அழைப்பு விடுத்தது. இது தமிழர்களின் மனித உரிமைகள் பற்றியது மட்டுமல்ல. கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களை கட்டாயமாக தகனம் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசு வலியுறுத்தியது. இதன் மூலம் நாட்டில் உள்ள கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களின் மத நம்பிக்கைகளை புறக்கணித்தது எனவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, பிரித்தானியா முழுவதும் அரை மில்லியன் தமிழர்கள் உள்ளனர். அவர்கள் ஒரு கடின உழைப்பாளி, மரியாதைக்குரிய மற்றும் அர்ப்பணிப்புள்ள சமூகம், அவர்கள் எனக்கு மிகுந்த மரியாதை செலுத்துகிறார்கள். அயராது உழைக்கும் ஏராளமான தமிழர்களுக்கு நாங்கள் கடன்பட்டிருக்கிறோம். நான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி செலுத்துகிறேன், நல்லிணக்கத்திற்கான பாதை நீண்ட காலமாக இருந்தாலும், அவை அடையப்படும் வரை நாங்கள் நீதி மற்றும் மனித உரிமைகளுக்காக போராடுவோம் என்று சத்தமாகவும் தெளிவாகவும் கூறுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

13 மார்ச் 2021

மறுபடியும் இரட்டை இலை, உதயசூரியனுக்கு ஓட்டு போட்டால்நாசமாகத்தான் போவீங்க-சீமான்!

ஒன்னு சொல்றேன்.. மறுபடியும் இரட்டை இலை, உதயசூரியனுக்கு ஓட்டு போட்டால், நாசமாகத்தான் போவீங்க" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் காட்டமாக முழங்கினார். பேசினார். சீமான் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.. தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.. செல்லும் இடமெல்லாம் சீமானின் பேச்சுக்கு மக்கள் கைகளை தட்டி வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல சீமானும், தன்னுடைய பேச்சில் அதிமுக, திமுகவை சரமாரியாக விமர்சித்து வருகிறார். கிருஷணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்றும் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் சொல்லும்போது, "கழக ஆட்சிகளை, கட்சிகளை முழுதுமாக அப்புறப்படுத்தாமல், நாட்டு மக்களை வாழ வைக்க முடியாது... தமிழக அரசிற்கு உள்ள, 6 லட்சம் கோடி கடனை யார் தள்ளுபடி செய்வது என்ற கேள்விக்கு இப்போ வரைக்கும் பதில் இல்லை... ஊழல் மிகவும் குறைவாக உள்ள நாடு டென்மார்க். அதற்கு காரணம் வெளிப்படை நிர்வாகம்.. அந்த மாதிரிதான் நாங்கள், தமிழகத்திலும் வெளிப்படை நிர்வாகத்தை கொடுக்க விரும்புகிறோம்.கல்வியில் சிறந்த நாடாக தென்கொரியா உள்ளது. அந்த நாட்டை தாண்டி, தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும்... தரமான கல்வி, மருத்துவத்தை இலவசமாக வழங்குவோம். கல்வி, மருத்துவம், குடிநீர் வினியோகம் ஆகியவற்றை தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்து உள்ளது.. இப்போதைய ஆட்சி யாளர்களின் பொருளாதார கொள்கை முடிவு.முதல்வர், அமைச்சர், எம்எல்ஏ, எம்பி அரசு அதிகாரிகள் குழந்தைகள், அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும்.. அரசு மருத்துவமனையை பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் சட்டம் கொண்டு வருவோம்... எங்களை நம்பி, ஓட்டு போட்டால் நீங்கள் நல்லா இருப்பீங்க.. ஆனால், மறுபடியும் இரட்டை இலை, உதயசூரியன் என்றால் நாசமாக போவீங்க..திராவிட அரசியல் என்பது, திராவிட கோட்பாடு என்பது தமிழர்களை சாதி, மதம் என பிளந்து, பிளவுபட்டு ஆளுவது.. ஆனால், தமிழ் தேசிய அரசியல் என்பது சாதி, மத பிளவுகளை இணைத்து, ஒன்றுபட்டு, ஒன்றுதிரட்டி, அரசியல் வலிமை பெற்று, அதிகாரத்தை கைப்பற்றி ஆளுவது.. இது இரண்டுக்கும் வேறுபாடு இருக்கு.. கட்சி வேற கட்சிதான்.. கோட்பாடு ஒன்றுதான், கொள்கை ஒன்றுதான்.திமுகவில் எந்த இடத்தில் அதிமுக கொள்கை மாறுபடுகிறது? அதிமுகவில் இருந்து திமுக எந்த இடத்தில் மாறுபடுகிறது? இங்கியும் ஊழல், அங்கியும் ஊழல்.. இங்கியும் லஞ்சம், அங்கியும் லஞ்சம்.. இங்கியும் திருட்டு, அங்கேயும் திருட்டு.. இங்கியும் இருட்டு, அங்கேயும் இருட்டு.. இங்கியும் டாஸ்மாக், அங்கியும் டாஸ்மாக், அதனால ரெண்டு கட்சியும் இதுவரை பாஸ்மார்க்..!அப்போ இந்த கருத்தியலுக்கு மாற்று தமிழியம்தான், தமிழ்தேசிய அரசியல்தான்.. தயவுசெய்து இந்த முறை, இந்த முறை பழகிடுச்சுன்னு மட்டும்
சொல்லாதீங்க.. சிந்தனையை மாற்றி பாருங்கள்.. இந்த முறை விவசாய சின்னத்துக்கு ஓட்டு போட்டு பாருங்கள்" என்றார்.

12 மார்ச் 2021

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரது கூடாரத்தை அகற்றியது பொலிஸ்!

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மட்டக்களப்பு – மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நடைபெறுகின்ற நிலையில், இன்று அதிகாலை போராட்டம் நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரமும், பதாகைகளும் அகற்றப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பொலிஸாரினால் இந்த அகற்றல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், கறுப்புக் குடைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டததை முன்னெடுத்தனர். இதேவேளை, கூடாரம் மற்றும் பதாகைகள் அகற்றப்படடமை தொடர்பாக, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்வதற்குச் சென்றவேளை, கூடாரம் உள்ளிட்டவற்றை தாமே அகற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக அருட்தந்தை க.ஜெகதாஸ் தெரிவித்துள்ளார். நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாகவே குறித்த கூடாரம் உள்ளிட்டவை அகற்றப்பட்டதாக, குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாக அருட்தந்தை குறிப்பிட்டுள்ளார். எனினும், நீதிமன்றக் கட்டளை தொடர்பாக எந்தவித அறிவிப்புகளும் தமக்கு வழங்கப்படாமல், எவ்வித முன்னறிவித்தலும் வழங்கப்படாமல் தன்னிச்சையாக இந்தச் செயற்பாடு இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இது சட்ட விரோதமான செயலென பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவுசெய்துள்ளதாக அருட்தந்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில், சாத்வீக ரீதியான, அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் நீதி கோரிய போராட்டம் அனைத்துத் தடைகளையும் தாண்டி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவிக்கையில், நாங்கள் போராட்டம் நடத்தும் கூடாரங்களை அகற்றிச் சென்றமையானது இந்த நாட்டில் நீதி செத்துவிட்டது என்பதையும் அநீதி தலைவிரித்தாடுவதையும் காட்டுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

09 மார்ச் 2021

பிரபாகரனின் தம்பி நான்,சமரசத்திற்கு இடமில்லை,சீமான் அதிரடிப்பேச்சு!

இலவசங்களையும் கவர்ச்சித் திட்டங்களையும் அறிவிக்கப் போவதில்லை. மக்களுக்கு இலவசங்களே தேவைப்படாத அளவிற்கு வாழ்க்கைத்தரத்தை மாற்றுவோம் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். திருவொற்றியூர் தொகுதியில் முதல் பிரச்சாரத்தை தொடங்கிய சீமான், ஓடி ஆடி வேலை செய்யக்கூடிய தெம்பு இருக்கும் போதே அதிகாரத்தை கொடுங்கள் சிறப்பான ஆட்சியை தருகிறோம் என்று கூறி வாக்கு சேகரித்தார். சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி. ஒரே மேடையில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து விட்டு பிரச்சாரத்திற்கு கிளம்பி விட்டார் சீமான்.சென்னை திருவொற்றியூரில் களம் காண்கிறார் சீமான். விவசாயி சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்த சீமான், முதல் பிரச்சாரத்திலேயே அதிரடியான வாக்குறுதிகளை அளித்தார். மிக்சி தருகிறேன், டிவி தருகிறேன் என்று இலவசங்களை கவர்ச்சி திட்டங்களை அறிவிக்க மாட்டேன் என்று கூறினார்.உங்களை நம்பி இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தரமான இலவசக் கல்வியை அளிப்போம். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கும் வகையில் உத்தரவாதத்தை கொடுப்போம் என்றார்.இலவசங்களை மக்கள் எதிர்பார்க்காத அளவிற்கு அவர்களின் வாழ்வை உயர்த்த முயற்சி செய்வோம். தண்ணீர் விற்பனைக்கு தடை செய்வோம். தரமான மருத்துவம் ,கல்வி ,கல்விக்கு ஏற்ற வேலை வாய்ப்பினை அளிப்போம் என்றார், அனல்மின் நிலையத்தை உருவாக்கி வாழும் இடத்தை அழித்து சாம்பலாக்கி கொண்டிருக்கிறார்கள். காட்டுப்பள்ளியில் 6000 ஏக்கர் இடத்தை அதானி வாங்கி மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக்கட்ட முடிவு செய்துள்ளார். பிரபாகரனின் தம்பி நான்; எதற்கும் சமரசம் செய்யாமல் சண்டை போடும் துணிவு கொண்டவன்.உடம்பில் ஆடி ஓடி வேலை செய்ய தெம்பு இருக்கும் போதே கொண்டு போய் அதிகாரத்தில் அமர வைத்து விடுங்கள் நாங்கள் சிறப்பான ஆட்சியை உங்களுக்குக் கொடுக்கிறோம். சக்கர நாற்காலியில் அமர்ந்த பிறகு பதவி கொடுத்தால் வேலை செய்ய முடியாது எனவே இப்போதே ஜெயிக்க வைத்து விடுங்கள் என்று வாக்கு சேகரித்தார் சீமான்.

08 மார்ச் 2021

மக்கள் நலனே முக்கியம் என்பதால் திருவொற்றியூரில் போட்டி​-சீமான்!

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாதது ஏன் என்று சீமான் விளக்கி உள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்காக தற்போது நாம் தமிழர் கட்சி டாப் கியரில் சென்று கொண்டு இருக்கிறது. திமுக, அதிமுக இன்னும் முழுமையாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிக்கவில்லை. ஆனால் நாம் தமிழர் கட்சியோ கூட்டணி பற்றியெல்லாம் யோசிக்காமல் துணிச்சலாக தேர்தலை தனியாக சந்திக்க உள்ளது. இதற்காக நேற்று நாம் தமிழர் கட்சி தங்கள் வேட்பாளர்களை அறிமுகம் செய்தது. சட்டசபை தேர்தலுக்கான 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சி நேற்று அறிவித்தது.ஒரே மேடையில் 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்தார். ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. லோக்சபா தேர்தல் போலவே 50% பெண் வேட்பாளர்களை சட்டசபை தேர்தலிலும் களமிறக்குவேன் என்று குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் நேற்று 50% பெண் வேட்பாளர்களை சீமான் அறிவித்தார்.234 வேட்பாளர்களில் 117 ஆண் வேட்பாளர்கள் ,117 பெண் வேட்பாளர்கள் நாம் தமிழர் சார்பாக சீமானால் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட போகிறேன் என்று சீமான் முன்பு கூறி இருந்தார்.இதனால் கொளத்தூர் தொகுதியில் சீமான் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் கொளத்தூர் தொகுதிக்கு பதிலாக திருவொற்றியூர் தொகுதியை சீமான் தேர்வு செய்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாதது ஏன் என்று சீமான் விளக்கி உள்ளார். அதில், கொளத்தூரில்தான் போட்டியிடலாம் என்று இருந்தேன்.ஆனால் மக்கள் நலன்தான் முக்கியம். ஒருவரை வீழ்த்துவது முக்கியம் இல்லை. ஒருவரை வீழ்த்துவதை விட மக்களுக்கு என்ன செய்கிறேன் என்பதே முக்கியம். இதனால் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடாமல் திருவொற்றியூர் தொகுதியை தேர்வு செய்து இருக்கிறேன், என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.

28 பிப்ரவரி 2021

உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் அம்பிகை செல்வகுமார்!

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமிழீழத்தை சேர்ந்த  அம்பிகை செல்வகுமார் எனும் பெண் பிரித்தானியாவில் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். தியாக தீபம் திலீபனின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளைக் காட்சிப்படுத்தியவாறு, அவர் தனது போராட்டத்தை தொடங்கியுள்ளார். ஈழத் தமிழர்களுக்கு விடுதலை, நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தமது குடும்பம் நீண்ட காலமாகவே ஜனநாயகக் களத்தில் குரல் கொடுத்து வந்ததாக அம்பிகை செல்வகுமார் கூறியுள்ளார். ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மீண்டும் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இனவழிப்பை சிறிலங்கா அரசாங்கம் தொடர்வதற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் இணைந்து தீர்மானத்தை முன்வைக்கவுள்ள செய்தி, மன வேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தாய்நிலத்தில் நீதிக்காக ஏங்கித் தவிக்கும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி தான், சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் அம்பிகை செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

26 பிப்ரவரி 2021

ராஜீவ் காந்தி மீதான குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்தவர் தா.பாண்டியன்!

ராஜீவ் காந்தி வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட போது அங்கிருந்த தா.பாண்டியன் கடுமையாக காயமடைந்திருந்தார். எனினும் தனது இறுதி மூச்சுவரை 7 தமிழர்களின் விடுதலைக்காக பாடுபட்டார். சிறுநீரக கோளாறால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தா.பாண்டியன் உயிரிழந்தார். அவர் இந்திரா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை பிரதமர்களின் பேச்சை மொழி பெயர்த்தவர். அந்த வகையில் 1991-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு வந்திருந்தார்.21 ஆம் தேதி மே மாதம் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்த போது அவர் ஒரு பேரணியை நடத்தினார். பின்னர் தனது காரில் பிரச்சார மேடைக்கு வந்தார். அங்கிருந்து பிரச்சார மேடை இருக்கும் இடத்தை நோக்கி வந்த போது ஏராளமானோர் அவருக்கு மாலை அணிவித்தும் கைகுலுக்கியும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.அப்போது விடுதலை புலிகளின் தற்கொலைப் படையை சேர்ந்தவர் என குற்றம்சாட்டப்படும் தாணுவும் ராஜீவ் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அவர் கால்களில் விழுவது போல் குனிந்து தனது உடலில் மறைத்து வைத்திருந்த ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். அப்போது ராஜீவ் காந்தி, அவரை சுற்றியிருந்த 15 பேரும் கொல்லப்பட்டனர்.இந்த படுகொலை சம்பவத்தில் காவலர்கள், கமாண்டோ வீரர்கள், போலீஸார் என பலர் காயமடைந்தனர். அவ்வாறு காயமடைந்தவர்களில் தா.பாண்டியனும் ஒருவர். படுகாயமடைந்த தா.பாண்டியன் ராஜீவ் காந்தியின்பிரச்சார பேச்சை மொழிப்பெயர்ப்பு செய்வதற்காக வரவழைக்கப்பட்டார்.இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் இலங்கை அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தார். பிரச்சினைக்கு அமைதியான அரசியல் தீர்வைக் காண இலங்கை அரசின் மீது அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவுக்கு தா பாண்டியன் அழைப்பு விடுத்தார். அது போல் 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு கடிதமும் தா.பாண்டியன் எழுதியிருந்தார்.

10 பிப்ரவரி 2021

சுமந்திரனின் உரை தொடர்பில் கஜேந்திரகுமார் கண்டனம்!

பல்வேறு சவால்கள் மற்றும் நெருக்கடிகள் மத்தியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி துரோகமிழைத்துவிட்டார் சுமந்திரன். இவ்வாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் இன்றுமாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, ஐந்து நாட்களாக சுமார் ஒரு இலட்சம் மக்களின் பங்களிப்புடன் – இறுதிநிகழ்வில் சுமார் 60000 மக்கள் நேரடியாக கலந்துகொண்ட ஒரு நடைபயணம் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை இடம்பெற்றது. தமிழ் கட்சிகளும் சிவில் சமுகமும் போனமாதம் ஐநா மனித உரிமை ஆணையாளருக்கும், மனித உரிமை பேரவையின் தலைவருக்கும், உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பிய கடிதத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபயணம் இடம்பெற்றது. இந்தகடிதம் வெறுமனே ஒருசில அரசியல்கட்சிகளினதும் அமைப்புகளினதும் கோட்பாடல்ல மாறாக அது ஒட்டுமொத்த தமிழ் மக்களினது ஏகோபித்த கோரிக்கையாக காணப்படுகின்றது என்பதை நிலைநாட்டுவதற்காக நிரூபிக்கும் நோக்கத்துடனேயே இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வு மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது, ஒட்டுமொத்த சர்வதேசசமூகத்தினதும் பார்வையை ஈர்க்கக்கூடிய அளவிற்கு- மியன்மாரில் இடம்பெறும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் போல – இந்தியாவில் இடம்பெறுகின்ற போராட்டங்கள் போன்று மிகவும் காத்திரமான ஒரு செய்தியை சர்வதேச சமுகத்திற்கு கொடுக்கக்கூடிய அளவிற்கும்,விசேடமாக அந்த கடிதத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அமைந்திருந்தது. அதுதான் அந்த போராட்டத்தின் உண்மையான நோக்கம். அந்த போராட்டத்தின் உண்மையான நோக்கம் அதுவாயிருக்க-நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் வெறுமனே பத்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து – அந்த கோரிக்கைகள் வெறுமனே அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாக இருக்கின்றது என்பதையும் தெரிவித்து அந்த கோரிக்கைகள் தான் போராட்டத்தின் நோக்கமாக உள்ளது -அந்த போராட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளாக இருக்கக்கூடிய வடக்குகிழக்கு தமிழ் மக்களினது தாயகம் என்ற கோட்பாட்டையோ அல்லது தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசம் என்ற கோட்பாட்டையோ சுயநிர்ணயஉரிமை என்ற கோட்பாட்டையோ அல்லது தமிழின அழிப்பிற்கு ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக இன்னொரு சர்வதேச குற்றவியல் விதிமுறைகள் ஊடாக நீதி கேட்பதையும் வலியுறுத்தாமல் ஒட்டுமொத்த போராட்டத்தையும்; கொச்சைப்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்திருந்தார். நாங்கள் அந்த முயற்சியை ஒரு சாதாரண தவறாக கருதமுடியாது. சுமந்திரன் கடிதம் எழுதினபொழுதும் பங்குபற்றியவர்.அவருடைய கட்சியும் அவரும் பேச்சுவார்த்தைகளில் தங்களை ஈடுபடுத்தியிருந்தனர்,போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டவேளை அவருக்கு அதன் சரியான நோக்கம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலும்,நேற்றைய தினம் அந்த போராட்டத்தின் அடிப்படை நான்கு கோட்பாடுகளை வலியுறுத்தாமல் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி என்பதை-விசேடமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாகவிசாரணை என்பதை வலியுறுத்திதான் அந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்பதை முற்றுமுழுதாக மூடிமறைத்து – வெறுமனே சிறிலங்கா அரசாங்கத்தை நம்பி – சிறிலங்கா அரசாங்கத்திற்குத்தான் அந்த கோட்பாடுகளை – வெறுமனே அந்த பத்துக்கோட்பாடுகளையும் முன்வைப்பதாக சொல்லப்பட்டது. எம்மை பொறுத்தவரை அந்த போராட்டத்திலே எத்தனையோ சவால்கள் எதிர்ப்புகள் நெருக்கடிகள் இடையூறுகள் காணப்பட்ட நிலையிலேய கலந்துகொண்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி அவர்களுக்கு செய்த மாபெரும் துரோகமாக நாங்கள் அதனை பார்க்கின்றோம். நாங்கள் சுமந்திரனின் கருத்தினை வலுமையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

28 ஜனவரி 2021

தமிழின அழிப்புக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு!

வடக்கு கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று திரளுமாறு வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது. இது குறித்து வடக்கு கிழக்கு சிவில் சமூகம் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது. வடக்கு கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று திரளுமாறு வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் அழைப்பு விடுக்கின்றோம். வடகிழக்கு பூர்வீக குடிகளான நாம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எங்களது சுயநிர்ணய உரிமைகளுக்காக போராடி வருகின்றோம். ஆனால் தமிழர்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்காத இலங்கை அரசு தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை யாவரும் அறிவோம். யுத்தம் நிறைவடைந்து கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வடக்கு கிழக்கை இராணுவ மயமாக்கிவரும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன் வடக்கு கிழக்கு பூர்வீக குடிகளான தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி அவர்களது இருப்பை இல்லாமல் செய்வதற்காக பல வகையிலும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது. இதன் அடிப்படையில் தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக பௌத்த மயமாக்கல் திட்டங்களை இலங்கை அரசாங்கமானது முனைப்போடு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் மூலம் வடக்கில் குருந்தூர் மலை ஐயனார் கோயில், வெடுக்குநாறி மலை சிவன் கோயில், நிலாவரை, கிழக்கில் கிண்ணியா பிள்ளையார் கோயில், குசனார் முருகன் ஆலயம், வேற்றுச்சேனை சித்திவிநாயகர் ஆலயம் உட்பட்ட பல ஆலயங்களில் தமது பாரம்பரிய கலாசார சமய வழிபாடுகளை செய்ய முடியாதவாறு ஆலயங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதோடு அங்கு பௌத்த ஆலயங்களை நிறுவுவதற்கும் முயற்சிகள் நடைபெறுகிறன. மேலும் வடக்கு கிழக்கில் உள்ள சுமார் 200 ற்கும் மேற்பட்ட பாரம்பரிய இந்து ஆலயங்களை கையகப் படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறன. அத்துடன் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதுடன் அவர்களை தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றனர். இது அவர்களின் பேச்சுரிமை அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். அத்தோடு தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றங்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளை அபகரித்து சிங்கள குடியேற்றம் ஒன்றை உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. மட்டக்களப்பில் உள்ள பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்குடன் பால் தரும் பசுக்களை திட்டமிட்ட வகையில் படுகொலை செய்யும் நடவடிக்கைகளும் நடந்தேறி வருகின்றன. இதன் ஒரு கட்டமாக காடுகள் அழிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர். இஸ்லாமிய மக்களின் மத ரீதியான பாரம்பரிய சமய சடங்கான ஜனாசாக்களை புதைக்கும் செயற்பாடுகளை இல்லாமல் செய்து ஜனாசாகளை எரியூட்டி வருகின்றனர். இதற்கு எதிராக போராடும் முஸ்லிம் சமூகத்தையும் அடக்கி ஆள முனைகின்றனர். உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் பலதரப்பட்ட இஸ்லாமிய மக்களை பயங்கரவாத தடைச் சட்டத்தினை பயன்படுத்தி தடுத்து வைத்துள்ளனர். இதே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் பலரையும் கைது செய்து பல வருடங்களாக தடுத்து வைத்துள்ளனர். இதே போன்று சிறைகளில் விசாரணைகள் இன்றி தமிழ் அரசியல் கைதிகளாக பலர் உள்ளனர். ஆனால் பல குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ள அரசாங்கம் இந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வருகிறது. வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தங்களது காணாமல் ஆக்கப்பட் உறவுகளை தேடி வருடக்கணக்கில் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கான நீதியை வழங்காது அரசாங்க ஏமாற்றி வருகிறது. அத்துடன் மலையக தமிழ் மக்கள் தங்களது நாளாந்த வாழ்வாதாரத்திற்காக 1000 ரூபாய் சம்பள உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாது அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது. இவ்வாறு தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும் வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை எதிர்வரும் 3 ம் திகதி முதல் 6ம் திகதி வரை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். உரிமைகளை இழந்து நீதி மறுக்கப்பட்ட சமூகமாக வாழும் தமிழ் பேசும் மக்களாகிய எமது அவலக் குரல்கள் சர்வதேசத்தின் மனசாட்சிகளை தட்டும் அளவுக்கு எமது போராட்டத்தை அகிம்சை வழியில் முன்னெடுக்க வேண்டி உள்ளதால் அனைத்து தமிழ் பேசும் மக்களையும் இப்போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேசம் நீதியை பெற்று தரவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து சர்வதேச மனித உரிமைகள் பேரவைக்கு வடக்கு கிழக்கு தமிழ் அமைப்புகள் ஓரணியில் இணைந்து கையொப்பம் இட்டு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்ற கோரியும் அந்த கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் எதிர்வரும் 03.02.2021 தொடக்கம் 06.02.2021 வரை மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளமையால் மேற்படி போராட்டத்திற்கு வடக்கு கிழக்கில் உள்ள சிவில் அமைப்புக்கள் பல்சமய ஒன்றியங்கள் அரசியல் கட்சிகள் என அனைவரது ஆதரவையும் கோரி நிற்கின்றோம். மேற்படி போராட்டத்திற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். எனவே அரசியல் கட்சிகள் உட்பட வடக்கு கிழக்கில் உள்ள அனைவரும் மேற்படி போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி கலந்து கொள்ளுமாறு வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 டிசம்பர் 2020

தமிழீழ ஆதரவாளர்"அழைத்தார் பிரபாகரன்"அப்துல் ஜப்பார் காலமானார்!

தமிழின் முதல் கிரிக்கெட் வர்ணனையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (வயது 81) உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். 1980களில் கிரிக்கெட் போட்டிகளுக்கான தமிழ் வர்ணனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அப்துல் ஜப்பார். முதன் முதலாக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தமிழகம்- கேரளா அணிகளுக்கு இடையேயான போட்டியை தமிழில் வர்ணனை செய்தார்.1982-ம் ஆண்டு சென்னையில் இங்கிலாந்து- இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டியையும் தமிழில் வர்ணனை செய்தார் அப்போது ஜப்பார். அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர், அப்துல் ஜப்பாரை நேரில் அழைத்து பாராட்டினார். பின்னர் 1999-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக ஐபிசி தமிழ் வானொலிக்காக பயணியாற்றினார். 2004-ம் ஆண்டு லண்டனில் உலகக் கிரிக்கெட் போட்டிகளை தமிழில் வர்ணனை செய்தார். 2007-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ESPN - STAR CRICKET தொலைக்காட்சிக்காக, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20:20 உலகக்கோப்பை கிரிக்கெட்டை தமிழில் வர்ணனை செய்தார். மொத்தம் 35 கிரிக்கெட் மற்றும் ஹாக்கி போட்டிகளின் வர்ணனையாளராக சிறப்பாகச் செயல்பட்டு உலகத் தமிழரின் நன்மதிப்பைப் பெற்றவர் அப்துல் ஜப்பார்.அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனையை பெரிதும் நேசித்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், சமாதான காலத்தில் அப்துல் ஜப்பாரை தமிழீழத்துக்கு அழைத்து விருந்து அளித்து உபசரித்தார். 'அழைத்தார் பிரபாகரன்' எனும் நூலில் தமிழீழ பயணம்,தேசியத் தலைவர் பிரபாகரனுடனான சந்திப்புகளை எழுதியவர் அப்துல் ஜப்பார். பன்முகத்தன்மை கொண்ட தமிழ் ஆளுமையான அப்துல் ஜப்பார் இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவர் ஐரோப்பாவில் இயங்கி வந்த தமிழ் தேசியத் தொலைக்காட்சியான ரி.ரி.என் தொலைக்காட்சியிலும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.அவரது மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு பேரிழப்பாகும்.


அரசுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கும் வகையில் கூட்டமைப்பின் ஆவணம்!

அரசாங்கத்துக்கு மீண்டும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படுகறது. அவர்களால் மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கு வழங்கத் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் நாம் ஒருபோதுமே கையொப்பமிடமாட்டோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைப் பணிமனையில் அவர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். “இத்தகைய விடயங்களை பிடிகொடுக்காமல் நாசூக்காக செய்வதற்கு பழக்கப்பட்டவராக சுமந்திரன் இருந்தாலும் அவரின், இத்தகைய போக்குகளை ஆரம்பத்திலிருந்தே எங்களைப் போன்றவர்கள் புரிந்து கொண்டு மக்களுக்கு அம்பலப்படுத்தி வந்திருக்கின்றோம். ஆனாலும் அத்தகைய செயல்பாடுகளையே அவர் இன்றைக்கும் செய்து வருகின்றார். வரவு – செலவுத் திட்ட விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த இறுதி நாளில் சுமந்திரன் என்னோடும் எமது கட்சியின் செயலாளரோடும் கதைத்திருந்தார். அப்போது, ஜெனிவா அமர்வில் இந்த முறை இரண்டு வருட கால அவகாசம் முடிவடைகின்ற நிலையிலே அந்த உறுப்பு நாடுகளுக்கு இலங்கை தொடர்பாக எப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுத்து மூலமான மகஜரை தயாரித்துள்ளது. இதனை ஒரு பொது மகஜராக, ஏனைய தமிழ்க் கட்சிகளும் பொது அமைப்புக்களும் புத்துஜீவிகளும் ஏற்று கையொப்பமிட்டு அனுப்பக்கூடிய ஆவணமாக வெளிவருவது தான் பொருத்தமாக இருக்குமென்று கூறி எம்மிடம் அதன் பிரதியொன்றை வழங்கினார். இதன் பின்னர் எம்முடைய அமைப்பு எங்கள் சட்ட ஆலோசகர்களிடமும் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் செயலாற்றுபவர்களுடனும் பேசியதன் பிற்பாடு நாங்கள் அந்த வரைபை நிராகரிக்கும் நிலைப்பாட்டிற்குத் தள்ளப்பட்டுள்ளோம். 7 பக்கங்கள் கொண்டதாக அந்த அறிக்கை இருக்கின்றது. அதில், பெரும்பாலானவை கூட்டமைப்பு முன்னர் எடுத்த விடயங்களை நியாயப்படுத்துகின்றன. மேலும், இப்படியெல்லாம் செய்தும்கூட தமிழ் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆவணத்தை மிகவும் கவனமாக நாங்கள் படித்தோம். அதை முழுமையாக நாம் தொகுத்துப் பார்த்தபோது மீண்டும் ஒருமுறை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குகின்ற கோணத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணமாகத் தான் நாங்கள் அதனைப் பார்க்கின்றோம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது ஒரு சர்வதேச விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் ஊடாகத்தான்பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான பொறுப்புக் கூறல் கிட்டும் என்ற விடயத்தை நாங்கள் இங்கு மட்டுமல்ல ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலிலும் ஆணித்தரமாக பதிவிட்டு வந்திருக்கின்றோம். ஆகவே, அந்தப் பிண்ணணியில் சுமந்திரனும் கூட்டமைப்பும் தயாரித்த அந்த அறிக்கையில் நாங்கள் கையொப்பம் இட முடியாது. இந்த நிலைமை சுமந்திரனுக்கே நன்றாகத் தெரியும்” என்றார்.

11 டிசம்பர் 2020

ஒரு இலட்சத்து 47 ஆயிரம் தமிழர்கள் எங்கே?நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார் கஜேந்திரன்!

இறுதிக்கட்டப் போரில் ஒரு இலட்சத்து 47 ஆயிரம் தமிழர்கள் இராணுவத்தினரிடம் அகப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்றையதினம் வரவு - செலவுத் திட்டத்தின் நிதி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு வினா எழுப்பினார். "இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். இந்தத் தினத்தில் பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர், சிறைகளில் வாடும் பிள்ளைகளை நினைத்துக் கதறும் பெற்றோர் என வடக்கு, கிழக்கு எங்கும் அவலக்குரலே கேட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த நாளில் வடக்கு, கிழக்கு எங்கும் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடி அலைந்து திரிந்து கொண்டிருக்கும் அந்த மக்களின் போராட்டத்தோடு நாங்கள் கைகோர்க்கும் அதே நேரத்தில் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறைகளிலே அடைத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காகவே காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் இலங்கை அரசால் உருவாக்கப்பட்டது. அந்த அலுவலகத்தின் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏமாற்றப்பட்டு தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். காணாமல்போனவர்கள் இறந்து விட்டார்கள் என்று உறவினர்களை ஒப்புக்கொள்ள வைத்து அவர்களுக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கும் முயற்சிதான் நடைபெறுகின்றது. வடக்கு, கிழக்கில் முழுமையான இனவாதக் கோணத்திலேயே நிதி அமைச்சின் திட்டங்கள் அமைந்துள்ளன. தொல்பொருள் திணைக்களம் என்பது உலக நாடுகளிலே கலாசார அமைச்சுக்களின் கீழ் உள்ளன. ஆனால், இலங்கையில் அது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கோடிக் கணக்கான நிதியை நிதி அமைச்சு மூலம் ஒதுக்கிக் கொடுத்து, தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தை சிங்கள மயமாக்குகின்ற, பௌத்த மயமாக்குகின்ற செயற்பாடுகள் தான் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

04 டிசம்பர் 2020

பாராளுமன்றில் தனித்து மோதிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

பிரபாகரனை கொல்ல வேண்டும் என்பதற்காக இலட்சக் கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றதே, போர் குற்றம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “இறுதி யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசினேன். நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரைச் சந்தித்தேன். விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த பொதுமக்களை மீட்க நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர். அவர்களை வெளியேற்றி அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். அப்போதைய அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் நான் பத்து தடைவைகளுக்கும் அதிகமாக இதுகுறித்துப் பேசினேன். பொதுமக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்துப் பேசினோம். கடல் மார்க்கமாக அவர்களை ஏனைய பக்கங்களுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லாத காரணத்தினால் தாமதமானது. பின்னர், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சகல பொதுமக்களையும் மீட்டுள்ளதாகவும், புலிகளின் கட்டுப்பாட்டில் எந்தவொரு பொதுமகனும் இல்லை, அனைவரையும் மீட்டுள்ளோம் எனவும் தொலைக்கட்சியில் அறிவிப்பு விடப்பட்டது. அதனைக் கேட்டு நான் அச்சப்பட்டேன். ஏனெனில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போதே நான்கு இலட்சத்து அறுபதாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் இருந்தனர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அரச தரப்பின் கணக்கெடுப்பு, அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் கணக்கெடுப்பு என அனைவரதும் எண்ணிக்கைக்கு அமைய அதிகளவில் மக்கள் இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருக்கையில் பொதுமக்களை எப்படியேனும் வெளியேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் எனது தொடர்புகளைப் பயன்படுத்தி, நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பயன்படுத்தி அரச தரப்புடன் பேசி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தேன். ஆனால், அது நடக்கவில்லை” என்றார். அப்போது குறுக்கிட்டு ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய அமைச்சர் சரத் வீரகேசர, “நீங்கள் சபையை தவறாக வழிநடத்துகின்றீர்கள். மூன்று இலட்சம் மக்களை பிரபாகரன் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினார். நாங்கள் அவர்களைக் காப்பாற்றினோம்” என்றார். இதன்பின்னர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா, “நாங்கள் ஒவ்வொரு தாக்குதலின் போதும் அதிகளவான பொதுமக்களைப் பாதுகாத்தோம். நீங்கள் பொய்களைக் கூறி சபையை தவறாக வழிநடத்த வேண்டாம். நாம் மக்களை மீட்ட நேரங்களில் நீங்கள் அந்தப் பகுதிகளுக்கு வரவில்லை” என்றார். இந்நிலையில், மீண்டும் உரையாற்றிய கஜேந்திரகுமார், “போராட்டம் தொடங்கிய வேளையில் நான்கரை இலட்சம் பொதுமக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்தனர். ஆனால், 17 ஆயிரம் பொதுமக்களே அங்கு இருந்ததாக அரசாங்கம் கூறியது. உணவு மற்றும் மருந்துகளை வெறுமனே 17 ஆயிரம் மக்களுக்கு மட்டுமே அனுப்பினார்கள். இதுதான் உண்மை. மூன்றரை இலட்சம் மக்கள் பின்னர் முகாம்களுக்கு வந்தனர். ஆகவே, இலக்கங்களில் அரசாங்கம் பொய்களைக் கூறிக்கொண்டுள்ளது. இறுதி யுத்தத்தில் சிக்கிய ஒன்றரை இலட்சம் மக்களுக்கு என்னவானது என்றே தெரியவில்லை. 164ஆயிரம் மக்களை அரசாங்கம் கணக்கில் எடுக்கவில்லை 54 இராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச நாடுகளுக்கான வீசா வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் சபையில் கூறினார். ஏன் அவர்களுக்கு வீசா வழங்கப்படவில்லை என சிந்தித்துப்பாருங்கள். குறித்த 54 அதிகாரிகளும் அப்பாவிகள் என்றால் அதனை நிரூபிக்க வேண்டும். ஆனால், அவர்கள் குற்றவாளிகள். இதனால்தான் இந்த நிலைமை உருவாகியுள்ளது. நீங்கள் இந்த நிலைமைகளை நினைத்து வெட்கப்பட வேண்டும். இப்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் இந்த அமைச்சை இனவழிப்பு அமைச்சு, தமிழர்களுக்கு எதிராக அமைச்சு என்றே நினைக்கின்றோம். அமைச்சிற்குப் பொறுப்பான சரத் வீரசேகர சற்று முன்னர் இந்த சபையில் ஒன்றைக் கூறினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் என்றார். இதனை நினைத்து வெட்கப்பட வேண்டும். அதேபோல், மஹிந்த சமரசிங்க அண்மையில் இதே சபையில் ஒன்றைக் கூறினார், பொதுமக்களைப் பாதுகாக்க சர்வதேச நாடுகள் வந்த வேளையில் அதனை அனுமதிக்க முடியாது என மஹிந்த ராஜபக்ஷ கூறியதாகத் தெரிவித்தார். பிரபாகரன் தப்பித்து விடுவார் என்ற காரணத்திற்காக தமிழ் மக்களை வெளியேற்ற இடமளிக்க முடியாது என்றாராம். இதுதான் போர்க் குற்றம். ஒரு நபரைக் கொலைசெய்ய வேண்டும் என்பதற்காக இலட்சக் கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றமையே போர்க் குற்றமாகும். இன்றும் நாட்டில் உள்ள பாதுகாப்பு தளங்களில் அளவுக்கு அதிகமானவை வடக்கு கிழக்கிலேயே உள்ளது, இவர்களின் எதிரிகள் தமிழர்கள் என்பதே இவர்களின் நிலைப்பாடாகும். விடுதலைப் புலிகளின் பெயரைக் கூறி தமிழர்களை இன அழிப்புச் செய்துள்ளீர்கள். தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் நடவடிக்கையே முன்னெடுக்கப்பட்டது. நேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். இதுவே, நாளை உங்கள் இனத்திற்கு எதிராகத் திரும்பும். இதனை நன்றாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அரக்கத்தனமான ஆட்சியை நடத்தும் உங்களுக்கு நான் இதனை மீண்டும் கூறி பதிவு செய்துகொள்கிறேன். தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் அரசாங்கம் தோற்றுவிட்டது. இது நாட்டின் சகல வளர்ச்சிக்கும் பாதிப்பாக அமையும்” என்றார். இதன்போது குறுக்கிட்ட சரத் வீரகேகர, “இவர் முழுமையாக பொய்களைக் கூறுகின்றார். புலம்பெயர் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இவர் பேசிக்கொண்டுள்ளார். நாம் பொதுமக்களைப் பாதுகாத்தோம். உலகத்தில் பொதுமக்களை மீட்ட மிகப்பெரிய நடவடிக்கையாகும். சர்வதேசமே அதனை ஏற்றுக்கொண்டது. எமது இராணுவத்திற்கு தங்கப்பதக்கம் கொடுக்க வேண்டும் எனவும், உலகிற்கே நாம் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் சர்வதேச நிபுணர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பிரபாகரன் முன்னிலையில் வாக்குறுதி எடுத்தவர்கள். அவர்களைத் தடுக்க வேண்டும் என்பது சரியானது” என்றார். இதையடுத்து உரையாற்றிய கஜேந்திரக்குமார், “நீங்கள் கூறுவதெல்லாம் உண்மையென்றால் ஏன் சர்வதேச விசாரணைக்குத் தயங்குகின்றீர்கள். நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொள்ளவதை விடவும் தைரியம் இருந்தால் சர்வதேச விசாரணைக்குச் செல்லுங்கள். ஏன் அதற்கு அஞ்சுகின்றீர்கள்” எனத் தெரிவித்துள்ளார். இதன்போது, ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, “கஜேந்திரகுமார் எம்.பி.யின் உரையில் நாடாளுமன்றத்திற்குப் பொருத்தமில்லாத சகல கருத்துக்களையும் நீக்க வேண்டும். இவர்கள் பிணங்களை விற்று வாழ்பவர்கள். சர்வதேச டொலர்களுக்காக இவர்கள் பேசிக்கொண்டுள்ளனர்” என்றார். இதனையடுத்து சபையில் சிங்கள உறுப்பினர்களிடையே கடும் விமர்சனம் ஏற்பட்டதுடன் பின்வரிசையில் இருந்த சிங்கள உறுப்பினர்கள் கடும் வார்த்தைகளில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரை விமர்சித்தனர்.

23 நவம்பர் 2020

இனப்படுகொலையை ஐ.நா.தடுக்கவில்லை- ஒபாமா!

இலங்கையில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது. என்று “உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land) என்ற சுயசரிதை நூலில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். “1945 இல் ஐ. நா. சாசனத்தை வாசித்தேன். அதன் நோக்கங்கள் எனது தாயின் லட்சியங்களோடு பொருந்திப் போவதைக் கண்டு வியந்தேன். ஆனால் ஐ. நா. எப்போதும் அந்த உயரிய நோக்கங்களுடன் செயற்படவில்லை என்பதை சொல்லத் தேவையில்லை” என்று ஒபாமா எழுதியுள்ளார். “பனிப்போரின் இடை நடுவில் பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளிடையிலான பிளவுகளால் ஒருமித்த கருத்தை அடைவதற்கான வாய்ப்புகள் அரிதாக இருந்தன. அதனால் சோவியத் ஒன்றியத்தின் டாங்கிகள் ஹங்கேரிக்குள் நகர்ந்தன. ஐ. நா. கைகட்டி பார்த்து நின்றது. அமெரிக்க விமானங்கள் வியட்நாம் கிராமங்களில் நேபாம் குண்டுகளைப் போட்டன.” “பனிப்போருக்குப் பின்னரும் ஐ. நா. பாதுகாப்புச் சபையில் நீடித்த பிளவுகள் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஐ. நாவின் திறனை கொண்டு நடத்தின. “சோமாலியா போன்ற தோல்வி கண்ட அரசுகளை மீளக்கட்டியமைப்பதற்கோ அல்லது இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான படுகொலைகளைத் தடுப்பதற்கோ ஐ. நாவின் உறுப்பு நாடுகளிடையே வழி முறைகளோ அன்றி கூட்டு விருப்பமோ இருக்கவில்லை” – என்று முன்னாள் அதிபர் ஒபாமா தனது நூலில் சுட்டிக்காட்டியிருக்கிறார். இலங்கை “இனப்படுகொலை” என்பதை ஒபாமா “ethnic slaughter” என்ற ஆங்கில வார்த்தையிலேயே குறிப்பிட்டிருக்கிறார்.

07 நவம்பர் 2020

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி!

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட திரு. ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முக்கியப் போட்டிக்களமாகத் திகழ்ந்த பென்சில்வேனியா மாநிலத்தைக் கைப்பற்றியதன்மூலம், அவருக்கு அந்த வெற்றி சாத்தியமானது. வெள்ளை மாளிகையைக் கைப்பற்றத் தேவையான அதிபர் மன்ற வாக்குகள் 270-ஐப் பெற, அந்த வெற்றி அவருக்கு வழிவகுத்தது. இந்த வெற்றியின்மூலம், 'அமெரிக்க அதிபராகத் தெரிவுபெற்ற ஆக வயதானவர்' என்ற பெருமை, திரு. பைடனைச் சாரும் அதேவேளையில், அமெரிக்காவின் 'முதலாவது பெண் துணையதிபர்' என்னும் பெருமையை அவரோடு இணைந்து போட்டியிட்ட திருவாட்டி கமலா ஹேரிஸ் பெறுகிறார். இந்தியத் தாய்க்கும் ஜமைக்காவைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்த கலப்பினத்தவர் திருவாட்டி கமலா ஹேரிஸ். இருப்பினும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த திரு. டோனல்ட் டிரம்ப்பின் பிரசார இயக்கம், தனது வேட்பாளர், தோல்வியை ஒப்புக்கொள்ளத் திட்டமிடவில்லை எனக் கோடிகாட்டியுள்ளது. 1990களுக்குப் பிறகு, ஒரே ஒருமுறை மட்டும் பதவியில் இருந்த முதலாவது அதிபர் என்ற நிலையை, அண்மை முடிவு திரு. டிரம்ப்புக்கு ஏற்படுத்தியுள்ளது. வாக்கு எண்ணிக்கையை ஏற்கெனவே முடித்துவிட்ட மாநிலங்களில் இருந்து பெற்ற அதிகாரபூர்வமற்ற முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு, BBC நிறுவனம் அண்மைத் தகவலை வெளியிட்டது. விஸ்கோன்ஸின் உள்ளிட்ட மாநிலங்களில், இன்னமும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கடந்த சுமார் நூறாண்டுகளில், ஆக அதிகமானோர் வாக்களித்த அதிபர் தேர்தல் இதுதான். இதுவரை, திரு. பைடன், 73 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில், இதுவரை வேறு எந்த வேட்பாளரும் இவ்வளவு வாக்குளைப் பெற்றதில்லை. திரு. டிரம்ப், 70 மில்லியன் வாக்குகளைப் பெற்று அதற்கு அடுத்த நிலையில் உள்ளார். வாக்குகள் எண்ணி முடிக்காதநிலையில் திரு. டிரம்ப், தாமே தேர்தலின் வெற்றியாளர் எனத் தமக்குத் தாமே அறிவித்துக்கொண்டார். பின்னர் அவர், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். இருப்பினும், மோசடிக்கான ஆதாரங்கள் எதனையும் அவர் முன்வைக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை தொடங்கி முதலில் வெளியான முடிவுகளின்படி, அமெரிக்க வாக்காளர்கள், கிருமிப்பரவலைக் காட்டிலும் பொருளியலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதுபோல் தோன்றுவதாக கவனிப்பாளர்கள் கூறியிருந்தனர். ஆனால், அஞ்சல் வாக்குகள் எண்ணத் தொடங்கி ஜனநாயகக் கட்சிக்கான வாக்குகள் அதிகரிக்கத் தொடங்கியதும், கிருமிப்பரவலே இந்தத் தேர்தல் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியது என்பது தெரியவந்தது. திரு. டிரம்ப் கிருமிப்பரவலைக் கையாண்டவிதம் திருப்திகரமாக இல்லை என்பதை முன்வைத்தே, ஜனநாயகக் கட்சி தனது பிரசாரத்தை நடத்திவந்தது. ஆனால், கிருமிப்பரவல் ஓர் அரசியல் உத்தி என்றுகூறிவந்த திரு. டிரம்ப், வாக்களிப்பு நாளுக்குப்பிறகு அது தணியத் தொடங்குமென்று கூறிவந்தார். உண்மையில், கடந்த மூன்று நாள்களாக அமெரிக்காவில், முன்னெப்போதும் இல்லாத அளவில் நூறாயிரத்துக்கு மேற்பட்ட புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. ஆகக் கடைசி நிலவரப்படி, அமெரிக்காவின் ஒருநாள் கிருமித்தொற்று எண்ணிக்கை, 132, 700 ஆக இருந்தது.

14 அக்டோபர் 2020

விஜய்சேதுபதிக்கு எதிராக திரண்ட கர்நாடக தமிழ் அமைப்புக்கள்!

சிங்கள தேசிய கொடியை மார்பில் குத்திக்கொண்டு தமிழ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் திரைப்படங்களை இனிமேல் கர்நாடகாவில் ஓட விடமாட்டோம் என்று கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் உலக அளவில் மிகப்பெரிய சுழல் பந்து வீச்சாளராக வலம் வந்தார். தமிழரான அவர் இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடி 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தவர் ஆகும். முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ஸ்ரீபதி என்பவர் பயோகிராபி படமாக இயக்குகிறார். இந்த படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் தமிழ் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.இந்த படம் தொடர்பான மோஷன் போஸ்டர் நேற்று, வெளியாகியது. அதில் முத்தையா முரளிதரனின் பழைய தோற்றத்தைப் போலவே விஜய் சேதுபதியின் முகம் மற்றும் முடி வெட்டு உள்ளிட்டவை பக்காவாக பொருந்தி இருந்தது. இந்த நிலையில்தான், விஜய் சேதுபதிக்கு தமிழ்தேசியவாதிகள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட இனப் போரின்போது இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர் முத்தையா முரளிதரன் என்று பரவலாக குற்றச்சாட்டு உண்டு. தமிழர்களுக்கு ஆதரவாக அவர் குரல் ஒலித்து இருந்தால், உலக அளவில் அதற்கு தனி கவனம் கிடைத்திருக்கும். ஆனால் அவர் சிங்கள அரசுக்கு தோள் கொடுத்தார் என்பது தமிழ் தேசியவாதிகள் குற்றச்சாட்டு.இந்த நிலையில்தான், "விஜய் சேதுபதியால் வெட்கம்" என்று பொருள்படும் வகையில், டுவிட்டரில் விஜய் சேதுபதிக்கு எதிராக, தேசிய அளவில், ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம் அமைப்பு, ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறியுள்ளதாவது: தமிழ் பட நடிகர் விஜய் சேதுபதி, பீட்சா, ரம்மி, 96 போன்ற படங்களில் நடித்து புகழ் அடைந்தவர். தமிழ்படங்களால் வளர்ந்தவர். ஆனால் முத்தையா முரளிதரன் என்ற, இலங்கை கிரிக்கெட் வீரர் ஈழப்படுகொலையை மகிழ்ச்சியான நாள் என பேசியவர்.இனப்படுகொலையாளன் ராஜபக்சவை போற்றிப் புகழ்ந்தவர். அப்பேர்பட்ட தமிழினத் துரோகியின் வாழ்க்கை வரலாற்று கதையில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளது உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் வேலையை காட்டுகிறது. பணத்திற்காக எதையும் செய்ய துணிந்துள்ள, இதுபோன்ற சுயநலவாதிகள், தமிழினத்துக்கு எதிரானவர்களை நாம் கண்டிக்க தவறினால், நாளை எல்லோரும் தமிழர்களுக்கு எதிராக பேசத் தொடங்குவார்கள்.விஜய் சேதுபதி, "800" என்ற படத்திலிருந்து விலக வேண்டும். இல்லை என்றால் தமிழர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். எந்த வேகத்தில் வளர்ந்தாரோ, அதே வேகத்தில் சரிவார். விடுதலைப் புலிகளையும், தமிழர்களையும் இழிவுபடுத்தி யார் பேசினாலும் கர்நாடக தமிழர்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். விஜய்சேதுபதியின் படங்களை கர்நாடகாவில் ஓட விடமாட்டோம். இவ்வாறு கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இது தொடர்பாக அந்த இயக்கத்தின் தலைவர் கோபி ஏகாம்பரம், 'ஒன்இந்தியா தமிழ்' இணையதளத்திடம் வழங்கிய பிரத்யேக பேட்டியின்போது கூறியதாவது: கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம் மட்டுமின்றி, கர்நாடகாவிலுள்ள பிற தமிழ் இயக்கங்களையும் இந்த விஷயத்தில் ஒன்றிணைத்து வருகிறோம். கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம், பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர், கர்நாடக தமிழர் பேரவை உள்ளிட்ட அனைவருமே ஒத்த திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்."முரளிதரன் சாதனை தமிழர் என்பதால் அவர் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறேன், என்று விஜய் சேதுபதி கூறுகிறாரே, இலங்கை அரசுக்கு ஆதரவாக, விஜய் சேதுபதி நடிக்க வேண்டியதன் அவசியம் என்ன?" என்று நாம் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த கோபி ஏகாம்பரம், "முத்தையா முரளிதரன் ஈழப் படுகொலையை கொண்டாடியவர். அந்த இனப் படுகொலையை யாராலும் ஜீரணிக்க முடியாது. அப்படியிருக்கும்போது தமிழருக்கு எதிரான படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது அவர் வன்மத்தைக் காட்டுகிறது. ஈழப் பிரச்சினையில், மக்களின் கோபம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை ஆழம் பார்க்க இந்த படம் எடுக்கப்படுவதாக நாங்கள் நினைக்கிறோம். தமிழகத்திலுள்ள கட்சிகள் எப்படி ஒன்றிணைகிறார்களோ தெரியாது. ஆனால், கர்நாடகாவிலுள்ள தமிழ் அமைப்புகள், ஒன்றிணைந்து எதிர்ப்போம், என்றார் அழுத்தம் திருத்தமாக.

09 அக்டோபர் 2020

தமிழர் தேசத்தை அங்கீகரித்து தனது கடப்பாட்டை இந்தியா நிறைவேற்றவேண்டும்!

13வது திருத்தம் அரசியல் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியல்ல என்றும், தமிழர் தேசத்தை அங்கீகரித்து தனது கடப்பாட்டை இந்தியா நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை இந்தியாவிடம் விடுத்துள்ளார். “தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதே இந்திய - இலங்கை உடன்படிக்கையின் முக்கிய நோக்கமாக இருந்தது.தமிழ் மக்களை, ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ளப்படாதது இந்த உடன்படிக்கையின் மாபெரும் குறைபாடாகும். தமிழ் மக்களை ஒரு தரப்பாக ஏற்றுக் கொள்ளாமல் தவிர்க்கப்பட்டதால், தமிழ் மக்களின் சார்பில் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட இந்தியாவுக்கு இந்த உடன்படிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் கடப்பாடு உள்ளது. தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் ஓர் ஆரம்பப்புள்ளியாகக் கூட அமையவில்லை என்பதால், நாம் 13வது திருத்தச் சட்டத்தை நிராகரிக்கிறோம். இந்திய - இலங்கை உடன்படிக்கையும் 13ஆவது திருத்தச் சட்டமும் முற்றிலும் வேறுவேறானவை. 13வது திருத்தச் சட்டத்தை நாங்கள் நிராகரிக்கிறோமே தவிர இலங்கை – இந்திய உடன்படிக்கையை நிராகரிக்கவில்லை. இந்த உடன்படிக்கையின் சரத்துக்களின்படி தமிழர் தேசத்தை அங்கீகரித்து அந்த ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றி, அதனடிப்படையில் இந்தத் தீவில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வை எட்டுவதற்கு, இந்தியா பொறுப்புக்கூறும் கடப்பாடு உடையது என்பதை வலியுறுத்துகிறோம்" என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.