பக்கங்கள்

20 அக்டோபர் 2019

ராஜீவ் காந்தியின் யாழ்,மருத்துவமனைப் படுகொலைகள்!

ராஜீவ் காந்தி உத்தரவில் நடந்தேறிய யாழ் வைத்தியசாலை படுகொலையின் 32 ஆம் ஆண்டு நனைவு நாள் , இந்திய இராணுவம் ஈழத்தமிழர்கள் மீது நடத்திய கொடிய படுகொலைகளில் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்கள், நோயாளர்கள், என 68க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை சம்பவம் முக்கியமானதாகும். 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த இந்திய இராணுவத்தினர் அங்கு கடமையில் இருந்த வைத்திய நிபுணர் அ.சிவபாதசுந்தரம், வைத்திய கலாநிதி கே. பரிமேலழகர், வைத்திய கலாநிதி கணேசரத்தினம் , பிரதம தாதி உத்தியோகத்தர் திருமதி பா.வடிவேல், உட்பட தாதிகள், மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் என 68பேரை ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்றனர். தாம் வைத்தியர்கள் என்றும் தங்களை சுடவேண்டாம் என வைத்தியநிபுணர் சிவபாதசுந்தரம் இந்திய பேரினவாத இராணுவத்திற்கு தலைமை தாங்கி வந்த இராணுவ அதிகாரியை மன்றாடிய போதும் ஈவிரக்கமற்ற இந்திய இராணுவத்தினர் வைத்தியநிபுணர், வைத்தியர்கள் என அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொன்றனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் கூறுகையில் “1987 ஒக்ரோபர் இருபத்தோராம் திகதி மாலை 4.30 மணியளவில் வைத்தியசாலையினுள் வந்த இந்திய இராணுவத்தினர் மறுநாள் காலை 10.00 மணி வரை வைத்தியசாலையில் மக்கள் மீது தாக்குதலை நடத்தினார்கள். தாக்குதலிற் காயப்பட்டவர்கள் சத்தமிடும் போது அவர்கள் மீது கைக்குண்டினை எறிந்ததுடன், துப்பாகியாலும் சுட்டார்கள். மறுநாள் காலை 6.00 – 7.00 மணிக்கிடையில் வைத்தியசாலையின் இருபத்தாறாவது நோயாளர் விடுதிப்பக்கமிருந்து சம்பவ இடத்திற்கு வந்த வைத்தியர் சிவபாதசுந்தரம் அவர்களும், இரண்டு தாதியினரும் இந்தியச் இராணுவத்தினருடன் கதைத்து எஞ்சியிருக்கும் பொதுமக்களைக் காப்பாற்ற முயற்சித்தார்கள். ஆனால் இராணுவத்தினர் ஓடிச் சென்று துப்பாக்கியினை எடுத்து வைத்தியரையும் கூடச்சென்றவர்களையும் சுட்டதில் அவர்கள் அனைவரும் உயிரிழந்தார்கள். காலை 10.00 மணியளவில் ஏனைய வைத்தியர்கள் எடுத்த முயற்சியினால் சம்பவத்தில் காயமடைந்து உயிருடனிருந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். சம்பவத்தில் உயிரிழந்த மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிமார்கள், மேற்பார்வையாளர், ஊழியர்கள் உட்பட இருபத்தொரு மருத்துவமனை பணியாளர்களும், நோயளார் விடுதிகளிற் சிகிச்சை பெற்றுவந்த நாற்பத்தேழு நோயாளர்களுமாக மொத்தம் அறுபத்தெட்டுப் பேர் உயிரிழந்தார்கள். உயிரிழந்த அனைவரது உடல்களையும் வைத்தியசாலை பின்வாசற்பக்கமுள்ள பிண அறைக்கு அருகிற் போட்டு இந்தியப்படையினர் எரியூட்டினர்.” எனத் தெரிவித்தார். 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் இருபத்தோராம், இருபத்திரண்டாம் திகதியில் கடமையின்பால் உயிர்நீத்த வைத்தியர்கள் உட்பட இருபத்தொரு ஊழியர்களையும் அவர்களுடன் உயிரிழந்த நோயாளர்கள் நாற்பத்தேழு பேரையும் யாழ்.மருத்துவமனை ஒவ்வொரு வருடமும் நினைவுகூர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒரு ராஜீவ் காந்தியின் உயிரைப்பற்றி பெரிதாக பேசும் இந்தியர்கள் பெறுமதி மிக்க வைத்தியநிபுணர்கள் வைத்தியர்கள் , கல்விமான்கள் என நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவிப்பதற்கு இந்திய இராணுவத்திற்கு உத்தரவிட்ட இந்தியாவின் போர்க்குற்றம் பற்றி பேசுவதில்லை.இந்த படுகொலைகளுக்கு உத்தரவிட்டவர் ராஜீவ் காந்தியே..!

நன்றி:தாரகம் இணையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.