பக்கங்கள்

13 ஆகஸ்ட் 2019

சம்பந்தன் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக இந்திய இணையத்தில் செய்தி!

இலங்கையில் அதிபர் தேர்தல் களை கட்டியுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சே அறிவிக்கப்பட்டுள்ளார். கோத்தபாய ராஜபக்சேவுக்கு அமெரிக்கா ஆதரவு தருவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் கோத்தபாய ராஜபக்சேவை சந்திக்க இந்திய பிரதமர் மோடி மறுத்துவிட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.மேலும் கோத்தபாய ராஜ்பக்சே அதிபரானால் நாடு அபிவிருத்தி அடையாது; நாசமாகிவிடும் என முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ராஜபக்சே குடும்பம் ஒரு கொலைகார கும்பல்; அவர்களை நான் ஒருபோதும் ஆதரிக்கப் போவது இல்லை என்றும் சந்திரிகா கூறியுள்ளார்.கோத்தபாயவை எதிர்த்து ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச களமிறங்கக் கூடும் என கூறப்படுகிறது. நவம்பரில் நானே தேசத்தின் அதிபராவேன் என சஜித் பிரேமதாச கூறி வருகிறார். சிங்கள கட்சிகள் அதிபர் தேர்தலில் படுதீவிரமாக இருக்கும் நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்களை அறிவித்த பின்னர் நிலைப்பாட்டை அறிவிப்போம் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
பொதுவாக இலங்கை அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இந்தியாவுடன் ஆலோசனை நடத்திய பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுப்பது வழக்கம். அதனால் இம்முறையும் இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் டெல்லியில் முகாமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே இரா. சம்பந்தன் டெல்லி வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.