பக்கங்கள்

18 மே 2018

மன்னாரில் போராளி ஒருவரை கடத்த முயற்சி!

நள்ளிரவில் சிவில் உடையில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி முன்னாள் போராளி ஒருவரைக் கைது செய்ய முயன்றனர். அவர்களுடன் போராளி போராடியதில் அவர்கள் தமது முயற்சியைக் கைவிட்டுத் தப்பிச் சென்றனர். துப்பாக்கிச் சூட்டில் அவருக்கு காயம் ஏற்படாத போதும் சம்பவ இடத்தில் குருதிக் கறைகள் காணப்படுகின்றன. இந்தச் சம்பவம் நேற்று இரவு மன்னார் உயிலங்குளத்தில் நடந்துள்ளது. சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. வெள்ளை நிறக் காரில் சிவில் உடையில் வந்த குழு முன்னாள் போராளியின் நண்பரைக் கடத்தித் தமது வாகனத்தில் மறைத்து வைத்துள்ளனர். வாகனம் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த முன்னாள் போராளி வாகனத்தை அவதானித்துள்ளார். அப்போது அந்த வாகனத்தில் இருந்து பதுங்கியவாறு இறங்கிய மூவர் முன்னாள் போராளியை நோக்கிச் சரமாரியாகச் சூடு நடத்தியுள்ளனர். சுதாகரித்துக் கொண்ட முன்னாள் போராளி அவர்களை நெருங்கி அவர்களுடன் இழுபறிப்பட்டுள்ளார். அதை எதிர்பார்க்காத அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். கடத்தி வைத்திருந்த நண்பரையும் அவர்கள் விட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் கொண்டுவந்திருந்த கை விலங்கு ஒன்றையும் விட்டுச் சென்றுள்ளனர். சம்பவ இடத்தில் குருதிக் கறை காணப்படுவதால் சிவில் உடையில் வந்தவர்கள் காயமடைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமைகளை அவதானித்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது. வந்தவர்கள் பொலிஸார் எனில் காரணத்தைக் கூறிக் கைது செய்யுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டது. பொலிஸார் சம்பவ இடத்துக்கு உடனடியாக வரவில்லை. சுமார் 2 மணித்தியாலத்துக்குப் பின்னரே சம்பவ இடத்துக்கு வந்தனர் என்று கூறப்படுகிள்றது. சிவில் உடையில் தப்பிச் சென்றபோது அவர்களின் வாகனத்துக்குப் பின்புறம் பொலிஸ் வாகனத்தை ஒத்த வாகனம் ஒன்றும் சென்றது என்று அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். எனினும் பொலிஸார் சம்பவம் தொடர்பில் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.