பக்கங்கள்

20 டிசம்பர் 2017

சர்வதேசத்திடம் தீர்வைக்கோரி வவுனியாவில் போராட்டம்!

காணாமல் போனோரின் உறவுகளின் கவனயீா்ப்பு பேரணி இன்று வவுனியாவில் இடம்பெற்றது. அரசாங்கத்தை நம்பி ஏமாந்து போயுள்ளதாக தெரிவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது பிரச்சினைக்கு சர்வதேசமே தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் மேற்கொள்ளப்படும் போராட்டம் தீர்வுகள் இன்றிய நிலையில் 300 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இந்த கருத்தை வெளியிட்டுள்ளனர். தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி, அவர்களது உறவினர்கள் 300 நாட்களையும் கடந்து கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதன்பின்னர் வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணத்தின் மருதங்கேணி மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அவர்களின் உறவினர்கள் போராட்டங்களை ஆரம்பித்து தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றனர். தமது பிரச்சினைகளுக்கு தீர்வை கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், மூன்று தடவைகள் சந்திப்பை மேற்கொண்டிருந்த போதிலும் உரிய தீர்வை வழங்க அவர் தவறியிருந்ததாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.