நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
20 அக்டோபர் 2026
எங்கள் அதிபர் பொன்னுச்சாமி வாத்தியார்!
எங்கள் புளியங்கூடல் மண்ணின் பெருமைக்குரிய உயரிய மாமனிதர் பொன்னுச்சாமி வாத்தியார்,அவர் வேலணை மேற்கு நடராஜா வித்தியாலய அதிபராக இருந்த காலம் என்பது எமக்கு எல்லாம் பொன்னான காலம்,வறுமை கல்விக்கு தடையாக இருக்க கூடாது என்ற உயரிய நோக்கோடு பள்ளிக்கூடம் வராத பிள்ளைகளின் வீடுகளுக்கு சென்று பெற்றோருக்கு அறிவுரை புகட்டி பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பி வைக்க வற்புறுத்துவதோடு பிள்ளைகளுடனும் உரையாடி பள்ளிக்கூடம் வா என்று அன்பான கட்டளை இட்டு செல்லும் அவரது சமூக பற்று என்பது காலத்தால் அழியாத காவியமாக பதியப்பட வேண்டியது,நான் கல்வி கற்ற காலத்தில் எத்தனையோ ஆசிரியர்களையும் அதிபர்களையும் பார்த்திருக்கின்றேன் ஆனாலும் எங்கள் அதிபர் போன்ற குணத்தால் உயரிய மாமனிதரை இதுவரை கண்டதும் இல்லை அறிந்ததும் இல்லை,மாணவர்களிடம் எந்த பாகுபாடுகளையும் காட்டுவதில்லை எல்லோரையும் ஒரே மாதிரியே அணுகுவார்,அவரிடம் அடி வாங்காத மாணவர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை,ஆனாலும் பின்னர் அப்படி எந்த தண்டனையும் கொடுக்காத மாதிரி அரவணைத்துக் கொள்ளவார்,மாணவர்களாகிய நாங்களும் அவை எல்லாம் மறந்து அவரது காலடியில் அவரோடு சேர்ந்து நடந்த காலம் அது,பள்ளிக்கூடம் விட்டதும் அவரோடு சேர்ந்தே வீடு செல்வோம்,சக மாணவர்களோடு சேட்டைகள் செய்து செல்வதற்காக நாம் கொஞ்சம் பின்னால் சென்றாலும் அவரும் நின்று "வா மேனே"என்று முதுகில் கை வைத்து எம்மை அழைத்து சென்ற காலம் அன்று அது எமக்கு பெரிதாக தெரியவில்லை இன்று நினைக்கும் போது மெய்யிர் சிலிர்க்கிறது,எப்படிப்பட்ட ஒரு மாமனிதரோடு நாங்கள் வாழ்ந்தோம் என்பதும் அவரது வீட்டில் தேங்காய் சொட்டும் கஞ்சியும் தந்து குடிக்க வைத்ததும் (அடிக்கடி நடக்கும்) மறந்திட முடியாத பெரும் நெருப்பாய் பற்றி எரியும் நினைவுகள்!எங்கள் அதிபர் மறைந்து பல ஆண்டுகள் ஆகி விட்டாலும் அவரது நினைவுகளை காக்க வேண்டியதும் இனி வரும் தலை முறைகளும் அவரை அறியும்படி செய்ய வேண்டியதும் எமது ஊர் மக்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்,புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் கோயில் நிர்வாகத்தை திறம்பட நிர்வகித்த பெருமைக்குரியவரும் எங்கள் அதிபர் பொன்னுச்சாமி வாத்தியார் என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்,அவரது பெயரும் புகழும் எம்மண்ணில் நிலைத்திருக்க ஊரில் இருக்கும் சமூக சேவகர்கள் முன் வரவேண்டும்,பொன்னுச்சாமி வாத்தியாருக்காக புலம்பெயர் தேசத்து எம் ஊர் உறவுகள் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்பது நிச்சயம்! அவரது பெயரும் புகழும் தமிழ் இருக்கும்வரை வாழ்க!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.