பக்கங்கள்

20 அக்டோபர் 2019

ராஜீவ் காந்தியின் யாழ்,மருத்துவமனைப் படுகொலைகள்!

ராஜீவ் காந்தி உத்தரவில் நடந்தேறிய யாழ் வைத்தியசாலை படுகொலையின் 32 ஆம் ஆண்டு நனைவு நாள் , இந்திய இராணுவம் ஈழத்தமிழர்கள் மீது நடத்திய கொடிய படுகொலைகளில் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்கள், நோயாளர்கள், என 68க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை சம்பவம் முக்கியமானதாகும். 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த இந்திய இராணுவத்தினர் அங்கு கடமையில் இருந்த வைத்திய நிபுணர் அ.சிவபாதசுந்தரம், வைத்திய கலாநிதி கே. பரிமேலழகர், வைத்திய கலாநிதி கணேசரத்தினம் , பிரதம தாதி உத்தியோகத்தர் திருமதி பா.வடிவேல், உட்பட தாதிகள், மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் என 68பேரை ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்றனர். தாம் வைத்தியர்கள் என்றும் தங்களை சுடவேண்டாம் என வைத்தியநிபுணர் சிவபாதசுந்தரம் இந்திய பேரினவாத இராணுவத்திற்கு தலைமை தாங்கி வந்த இராணுவ அதிகாரியை மன்றாடிய போதும் ஈவிரக்கமற்ற இந்திய இராணுவத்தினர் வைத்தியநிபுணர், வைத்தியர்கள் என அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொன்றனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் கூறுகையில் “1987 ஒக்ரோபர் இருபத்தோராம் திகதி மாலை 4.30 மணியளவில் வைத்தியசாலையினுள் வந்த இந்திய இராணுவத்தினர் மறுநாள் காலை 10.00 மணி வரை வைத்தியசாலையில் மக்கள் மீது தாக்குதலை நடத்தினார்கள். தாக்குதலிற் காயப்பட்டவர்கள் சத்தமிடும் போது அவர்கள் மீது கைக்குண்டினை எறிந்ததுடன், துப்பாகியாலும் சுட்டார்கள். மறுநாள் காலை 6.00 – 7.00 மணிக்கிடையில் வைத்தியசாலையின் இருபத்தாறாவது நோயாளர் விடுதிப்பக்கமிருந்து சம்பவ இடத்திற்கு வந்த வைத்தியர் சிவபாதசுந்தரம் அவர்களும், இரண்டு தாதியினரும் இந்தியச் இராணுவத்தினருடன் கதைத்து எஞ்சியிருக்கும் பொதுமக்களைக் காப்பாற்ற முயற்சித்தார்கள். ஆனால் இராணுவத்தினர் ஓடிச் சென்று துப்பாக்கியினை எடுத்து வைத்தியரையும் கூடச்சென்றவர்களையும் சுட்டதில் அவர்கள் அனைவரும் உயிரிழந்தார்கள். காலை 10.00 மணியளவில் ஏனைய வைத்தியர்கள் எடுத்த முயற்சியினால் சம்பவத்தில் காயமடைந்து உயிருடனிருந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். சம்பவத்தில் உயிரிழந்த மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிமார்கள், மேற்பார்வையாளர், ஊழியர்கள் உட்பட இருபத்தொரு மருத்துவமனை பணியாளர்களும், நோயளார் விடுதிகளிற் சிகிச்சை பெற்றுவந்த நாற்பத்தேழு நோயாளர்களுமாக மொத்தம் அறுபத்தெட்டுப் பேர் உயிரிழந்தார்கள். உயிரிழந்த அனைவரது உடல்களையும் வைத்தியசாலை பின்வாசற்பக்கமுள்ள பிண அறைக்கு அருகிற் போட்டு இந்தியப்படையினர் எரியூட்டினர்.” எனத் தெரிவித்தார். 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் இருபத்தோராம், இருபத்திரண்டாம் திகதியில் கடமையின்பால் உயிர்நீத்த வைத்தியர்கள் உட்பட இருபத்தொரு ஊழியர்களையும் அவர்களுடன் உயிரிழந்த நோயாளர்கள் நாற்பத்தேழு பேரையும் யாழ்.மருத்துவமனை ஒவ்வொரு வருடமும் நினைவுகூர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒரு ராஜீவ் காந்தியின் உயிரைப்பற்றி பெரிதாக பேசும் இந்தியர்கள் பெறுமதி மிக்க வைத்தியநிபுணர்கள் வைத்தியர்கள் , கல்விமான்கள் என நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவிப்பதற்கு இந்திய இராணுவத்திற்கு உத்தரவிட்ட இந்தியாவின் போர்க்குற்றம் பற்றி பேசுவதில்லை.இந்த படுகொலைகளுக்கு உத்தரவிட்டவர் ராஜீவ் காந்தியே..!

நன்றி:தாரகம் இணையம்.

15 அக்டோபர் 2019

தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவதே சிறந்த முடிவு!


யார் ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உரிய நீதியை வழங்கப் போவதில்லை. எனவே தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் யாழ். மாவட்ட சங்கத் தலைவி சுகந்தினி தெரிவித்தார்.
யார் ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உரிய நீதியை வழங்கப் போவதில்லை. எனவே தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் யாழ். மாவட்ட சங்கத் தலைவி சுகந்தினி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அனைவரும் ஒன்றிணைந்தே போராடி வந்தோம். நாம் யாரையும் பிரித்து பார்க்கவில்லை. இந்நிலையில் ஏனைய பகுதிகளிலுள்ள 8 தலைவிகளும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக அதிகாரிகளைச் சந்திக்க கொழும்பிற்கு சென்றார்கள் அதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில்தான் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திருட்டுத்தனமாக திறக்கப்பட்டது. இதனால் இவர்கள் மீது எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அத்துடன் இந்த அலுவலகத்தை நாம் அனைவரும் எதிர்க்கின்றோம். மேலும் இந்த அரசாங்கத்தின் மீது எமக்கு நம்பிக்கை இல்லாததன் காரணமாகவே சர்வதேச விசாரணையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். எமக்கு இந்த அரசாங்கத்தின் ஊடாக வழங்கப்பட இருக்கின்ற 6 ஆயிரம் ரூபாயை ஏற்கமாட்டோம். உலகில் 43 நாடுகளில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு அவர்களின் உறவுகளைத் தேடி கொடுக்கும் வரை வாழ்வாதார உதவியாக வழங்கப்படுகின்ற நிதியை ஏற்கமாட்டோம். இலங்கை அரசு எமக்கு வழங்குவதாக கூறுகின்ற 6 ஆயிரம் ரூபாய், மீன் வாங்குவதற்கு கூட போதாது. எனவே ஐக்கிய நாடுகள் சபை எமது விடயத்தில் தலையிட்டால் அதற்காக முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருக்கின்றோம். இந்த பேரினவாத அரசினால் 30ஆயிரத்துக்கு மேற்பட்ட உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பங்களிப்பும் தற்போது கிடைக்கப்பெற்று வருகின்றது. அதற்கான கூட்டம் கிளிநொச்சியில் அடுத்து நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏனைய பகுதிகளிலும் நடைபெறவுள்ளன. மேலும் சரியான நிர்வாக கட்டமைப்பிற்குள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அனைவரையும் கொண்டு வந்து, அதனூடாக புதிய வழிமுறைகளை நோக்கி பயணிக்க தீர்மானித்துள்ளோம். இதேவேளை நாட்டின் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாஸ, கோட்டாபய என யார் வந்தாலும் எமக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. எனவே தமிழ் மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்காமல் விடுவது சிறந்தது எனவும் தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான கைச்சாத்து கஜேந்திரகுமார் விசனம்!

ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கான இடைக்கால யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத்தில் கைச்சாத்திடுவோம் என வலியுறுத்தினோம். ஆனால் அது நடக்கவில்லை. எங்களை திட்டமிட்டு ஓரங்கட்டியுள்ளனர் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திகுமார் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நேற்று ஐந்தாவது நாளாக நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஐந்து கட்சிகள் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டதை அடுத்து ஏனைய ஐந்து கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கப்படவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த கோரிக்கை ஆவணத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இந்நிலையில் கூட்டத்தை விட்டு வெளியேறிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது- நான் மக்களுக்கு எச்சரிக்கிறேன். இந்த ஐந்து கட்சிகளையும் நம்பி வரப்போகும் தேர்தலில் முடிவெடுத்தால் இனத்திற்கு கிடைக்ககூடிய பேரம் பேசி உரிமைகளை மட்டுமல்ல அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய சந்தர்ப்பங்களையும் நாம் கைவிடுவதாகவே அமையும். நாம் போலி ஒற்றுமையைக் காட்டி பதவிகளை பெற்று மக்களை ஏமாற்றத் தயாரில்லை. சிங்கள கட்சிகளும், சிங்க பேரினவாத தரப்புக்களும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கத் தயாராக இருந்த மரியாதையைக் கூட இந்தக் கட்சிகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குத் தரவில்லை என்றார்.

07 அக்டோபர் 2019

களத்தில் சிவாஜிலிங்கம்,முதல் ஆளாக கட்டுப்பணம் செலுத்தினார்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக 2001ஆம் ஆண்டு, முதற் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம், அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. ரெலோ இயக்கத்தின் மூத்த உறுப்பினரான இவருக்கு 62 வயதாகிறது. நகர சபை உறுப்பினராகவும், வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும் இவர் பதவி வகித்துள்ளார். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இவர், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், வடக்கு மாகாணத்துக்கு வெளியிலுள்ள குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஈழத் தமிழ் சுயாட்சிக் கழகம் எனும் அரசியல் கட்சியின் தலைவியுமான அனந்தி சசிதரன், சுயேட்சையாகப் போட்டியிடும் சிவாஜிலிங்கத்துக்காக கட்டுப்பணம் செலுத்தினார்.

06 அக்டோபர் 2019

கோத்தாவின் பாதுகாப்புடன் துமிந்த என் தந்தையை கொன்றார்!

துமிந்த-கோத்தா 
கோத்தபாய மற்றும் மஹிந்த ராஜபக்சவினுடைய கொலைப் படலத்தில் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனநாயகமானதும் சுதந்திரமானதுமான நாட்டை ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும். மஹிந்த - கோத்தா ஆட்சிக் காலத்தில் இவை இரண்டுமே காணப்படவில்லை. அவர்களது கொடுமையான ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் உள்ளடங்குகின்றேன். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் நிலைமை எவ்வாறு இருந்தது என்பதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. மஹிந்த ராஜபக்ச பற்றி வீட்டுக்குள் கதைப்பதற்கும் மக்கள் பயந்தனர். சாதாரண மக்கள் மாத்திரமின்றி ஊடகங்களுக்கோ ஊடகவியலாளர்களுக்கோ எவ்வித சுதந்திரமும் காணப்படவில்லை. லசந்த விக்கிரமதுங்க மற்றும் பிரகீத் எக்னலிகொட உள்ளிட்டவர்களின் விவகாரம் இன்று நகைச்சுவை போன்றாகிவிட்டது. கோத்தபாய மற்றும் மஹிந்த ராஜபக்சவினுடைய கொலைப் படலத்தில் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னுடைய தந்தையை துமிந்த சில்வா தான் கொலை செய்தார் என்பது உண்மை. அவர் தைரியமாகச் சென்று என்னுடைய தந்தையை கொலை செய்வதற்கு பாதுகாப்பு வழங்கியவர் கோத்தபாய ராஜபக்சவேயாவார் என்றும் அவர் கூறினார்.

02 அக்டோபர் 2019

தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் தொடர்பில் ஆலோசனை!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வகையான முடிவை எடுக்க வேண்டுமென்பது தொடர்பில், இரா. சம்பந்தனை வடக்கு - கிழக்கின் மதத் தலைவர்கள், பத்தி எழுத்தாளர்கள்,மற்றும் புத்திஜீவிகள் சிலர், இன்று நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் கூடிய குறித்த குழுவினர் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழர் பிரச்சினை தொடர்பில் இரண்டு முதன்மை வேட்பாளர்களும் எழுத்துமூல உத்தரவாதம் ஒன்றை தர மறுத்துள்ள நிலையில், தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும், ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் முடிவெடுத்திருந்தனர். அந்த சந்திப்பின் தொடர்ச்சியாகவே இன்றைய சந்திப்பு நடந்தது. தமிழ் மக்கள் பேரவை இந்த கலந்துரையாடல்களை முன்னெடுத்தது. இன்று, இரா.சம்பந்தனை சந்திக்க தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், தமிழ் மக்கள் பேரவையை சந்திக்க தான் விரும்பவில்லையென இரா.சம்பந்தன் குறிப்பிட்டு அந்த சந்திப்பை தவிர்த்து விட்டார். இதன்பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள சிவில் செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகள் எழுதுபவர்கள், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலர் இணைந்து, சிவில் சமூகமாக இந்த முன்னெடுப்புக்களை மேற்கொள்ள இரா.சம்பந்தனை சந்திக்க கோரியிருந்தனர். திருமலை ஆயரின் மூலமாக விடுக்கப்பட்ட இந்த கோரிக்கையை இரா.சம்பந்தன் ஏற்றுக்கொண்டார். திருமலை ஆயர் உள்ளிட்ட மதத்தலைவர்கள் ஏற்பாட்டாளர்களாக இந்த பேச்சுக்களில் பங்கேற்றனர். இன்று காலை கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்ததுள்ளது. இதன்போது, தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.