பக்கங்கள்

27 ஏப்ரல் 2010

சிவப்பு மழை.திரை முன்னோட்டம்!


ஈழத் தமிழர்களின் பரிதாப நிலைமையை பிரதிபலிக்கும் படம்தான் சிவப்பு மழை.
இலங்கை இளைஞனான சுரேஷ் ஜோகிம், மந்திரியின் மகளான மீரா ஜாஸ்மினையும், ஒரு தொலைக்காட்சி நிருபரையும் கடத்தி செல்கிறார். பதறுகிறது அமைச்சர் வட்டாரமும், அதிகாரிகள் வட்டாரமும். சிறையிலிருக்கும் அலெக்ஸை விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார் ஜோகிம். மறைவிடத்தில் அடைக்கப்பட்ட மீரா ஜாஸ்மின், தப்ப முயல்கிறார். அவரிடம் தனது மனைவியை இலங்கை ராணுவ அதிகாரி அலெக்ஸ் கொடுமையாக கொலை செய்ததை சொல்கிறார் ஜோகிம். அதைக் கேட்டு மனம் மாறும் மீரா ஜாஸ்மின், சுரேஷுக்கு உதவுவதாக சொல்கிறார். அலெக்ஸை கொல்லக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கிறார். சிறையிலிருந்து அலெக்ஸ் விடுதலை ஆகிறார். அவரை சுரேஷ் பழிவாங்கினாரா என்பதற்கு பதில் சொல்கிறது இறுதிக்காட்சி!
12 நாளில் தயாரான கின்னஸ் சாதனை படம் இது. நாயகன் சுரேஷ் ஜோகிம், முதல் வெள்ளித்திரை பிரவேசம் என்றாலும் துணிச்சலான முத்திரை பதிக்கும் நடிப்பு. குறைந்த கதாபாத்திரம் என்றாலும் கொஞ்சமும் குறைவில்லாத நடிப்பின் அடித்தளத்தை நிரூபித்திருக்கிறார் மீரா ஜாஸ்மின். என்ன! விறுவிறுப்பான திரைக்கதைக்கு பிரேக் போடுகிற மாதிரி அமைந்துள்ள இவரின் பாடல் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்!
சுமன், ராஜீவ் மற்றும் போஸ் வெங்கட் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை அழகாக பயன்படுத்தியுள்ளார்கள். விவேக் காமெடியில் கிச்சி-கிச்சி மூட்ட மறந்துவிட்டார். இலங்கை ராணுவ அதிகாரியாக நடித்திருக்கும் அலெக்ஸூக்கு அந்த கோர முகம் அப்படியே பொருந்திப் போயிருக்கிறது. நடிப்பும் பலே.
மந்திரி சுமன், டி.ஜி.பி.ராஜீவ் மற்றும் உதவியாளர் போஸ் வெங்கட்டின் உதவியுடன் மீரா ஜாஸ்மினை விடுவிக்க எடுக்கும் முயற்சிகளும், அதற்காக சுரேஷ் ஜோகிம் வைக்கும் கோரிக்கை, ஏன் எதற்காக போலீஸ் பிடியில் இருப்பவரை விடுவிக்க கோருகிறான் என்ற குழப்பமே படத்தின் திருப்பமாக அமைந்து படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.
முகாம்களில் எடுக்கப்பட்ட காட்சிகள் சிறிதென்றாலும் சிறப்பு. மறுபக்கம் திரைக்கதையின் சரிவு படத்தின் பளபளப்பை குறைக்கிறது. கடத்தல் காட்சிகளில் சுரேஷ் ஜோகிம் மற்றும் காவல் துறையினருக்கும் இடையே நடக்கும் உரையாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மூன்று ஒளிப்பதிவாளர்கள் விஸ்வநாதன், எஸ்.இந்திரஜித், ஜமாலுதீன் பணியாற்றியுள்ளனர். தேவாவின் இசையில் இரண்டு பாடல்கள், சுமாரான பின்னனி இசையுடன். எடிட்டர் வி.டி.விஜயன் அங்கங்கே போட்டிருக்கும் கத்தரி, படத்திற்கு வேகம் சேர்க்கிறது.
எளிதில் அனைவரையும் தொடக்கூடிய கதைக்கரு, சிறு சிறு பிழைகளை கடந்து மக்களின் மனதில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். முதல் படத்திலே உணர்ச்சிகளின் உயிரோட்டத்தை திறமையாக கையாடிய இயக்குனர் வி.கிருஷ்ணமூர்த்திக்கு சபாஷ்!
சிவப்பு மழை - எழுதப்பட்ட சிவப்பு சரித்திரம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.