பக்கங்கள்

29 அக்டோபர் 2010

சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமையை பாதுகாக்கவே நீதிமன்றத்தை நாடினோம்.

விகிதாசார பிரதிநிதித்துவ அரசியல் முறையில் கைவைக்கும் உத்தேச உள்ளூராட்சி திருத்த சட்ட மூலமானது இரு பெரும் கட்சிகள் மாத்திரம் தங்களுக்கிடையில் ஆசனங்களைப் பகிர்ந்து கொள்ளவே வழிவகுப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமானது அதனைத் தடுத்து நிறுத்தி சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கிலேயே நீதிமன்றத்தை நாட வேண்டி ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
உத்தேச உள்ளுராட்சி திருத்த சட்ட மூலத்தை எதிர்த்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் கருத்து வெளியிடுகையிலேயே நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,
குறித்த சட்ட மூலமானது சிறுபான்மை மக்களையும் சிறிய கட்சிகளையும் பாதிக்கும் வகையிலேயே வரையப்பட்டுள்ளமையும் இதன் மூலம் இரு பெரும் கட்சிகள் மாத்திரமே நன்மையடையப் போவதும் மிகத் தெளிவான விடயங்களாகும். ஆனாலும் துரதிஷ்டவசமாக சிறுபான்மை மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்திற்கும் மாகாண சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட்டவர்களே இதனை நிறைவேற்றுவதற்குத் துணை போவதானது கவலைக்குரிய விடயமாகும்.
குறிப்பாக ஸ்ரீP லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹ_ம் எம்.எச்.எம். அஷ்ரப் தனது அரசியல் சாணக்கியத்தாலும் முஸ்லிம் சமூகத்தின் வாக்குப் பலத்தினாலும் பெற்றுக் கொடுத்த 5 வீத வெட்டுப்புள்ளி குறைப்பின் நன்மைகளை எதிர்காலத்தில் அனுபவிக்க முடியாத துரதிஷ்ட நிலைக்கு இட்டுச் செல்லும் இச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு அக் கட்சியே இன்று துணை போயிருப்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
நாட்டிலுள்ள சகல மாகாண சபைகளினதும் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னர்தான் இதனை பாராளுமன்றத்தில் சட்டமாக்க முடியும் என ஏற்கனவே அளிக்கப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறிப்பிடுகிறது. அத்துடன் இந்த சட்ட மூலமானது சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளினதும் சுயாதீனக் குழுக்களினதும் தேர்தல்களில் போட்டியிடும் அடிப்படை உரிமையை பாதிப்பதுடன் மக்களின் வாக்குரிமையையும் கேள்விக்குட்படுத்துகிறது.
வட்டார எல்லைகளை மீள்நிர்ணயம் செய்வது தொடர்பாக குறிப்பிடும் இச் சட்ட மூலத்தில் அதனை தீர்மானிக்கும் அதிகாரம் தனியான ஒரு அமைச்சருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளமை சந்தேகங்களை தோற்றுவிக்கிறது. அந்தந்த பிரதேசங்களில் வாழுகின்ற மக்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் பொறுப்பையும் அதிகாரத்தையும் தனி மனிதர் ஒருவரின் கையில் ஒப்படைப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். அரசியலமைப்பின் பிரகாரம் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் எல்லை நிர்ணய ஆணைக்குழு இருக்கத்தக்கதாக அதனையும் மீறி அமைச்சர் ஒருவருக்கு அதிகாரம் வழங்கப்படுவதன் மர்மம் என்ன என்று கேட்க விரும்புகிறோம். இது விடயத்தில் அவ்வப்பிரதேச மக்களினதும் இனங்களினதும் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு அவர்களின் சம்மதத்துடனேயே எல்லை மீள்நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இச் சட்ட மூலம் நடைமுறைக்கு வருமானால் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஆபத்துக்கள் குறைவு எனும் வாதம் முன்வைக்கப்பட்டாலும் கூட வடக்குக் கிழக்குக்கு வெளியே சிதறி வாழும் சிறுபான்மை மக்களின் ஒட்டுமொத்த அரசியல் பிரதிநிதித்துவமும் இதன் மூலம் இல்லாதொழிக்கப்படுகிறது என்பதையும் இங்கு கவனத்திற் கொள்வது அவசியமாகும்.
இச் சட்ட மூலம் விரைவில் பாராளுமன்றத்திற்குக் கொண்டு வரப்படுமானால் இது தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூக நலன்களை முன்னிறுத்தி தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்க விரும்புகிறோம். இதுவிடயமாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் நாம் தீர்மானித்துள்ளோம்.
எமது இயக்கம் காத்தான்குடியை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்தாலும் கூட முழு நாட்டிலும் சிதறி வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் அரசியல் நலன்களைப் பாதிக்கும் இவ் விடயத்தின் பாரதூரத்தை உணர்த்துவதற்காகவும் அது தொடர்பில் நீதிமன்றத்திடமிருந்து நியாயமான தீர்ப்பு ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காகவுமே வழக்குத் தொடர்ந்துள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.