இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் சேர்ந்து இயங்குவதாகக் கூறப்படும் ஆயுததாரிகள் தமிழ் நாட்டிலிருந்து வந்த வியாபாரிகளைக் கடத்திச் சென்றுள்ளனர். தமிழ் நாட்டிலிருந்து வந்து புடைவை வியாபாரத்தில் ஈடுபடுவதற்காக யாழிலுள்ள லொட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த 20 வியாபாரிகள் இவ்வாறு வெள்ளை வான் கும்பலால் கடத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை காலை நடந்துள்ளது. நேற்று மாலை வரை இவ்வியாபாரிகள் எந்தவொரு நீதிமன்றிலும் அல்லது போலீஸ் நிலையத்திலும் ஆஜர் செய்யப்படவில்லை. அவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் கிடைக்கவில்லை.
இலங்கை குடிவரவுத் துறையினரின் அனுமதி பெற்றே இந்த வியாபாரிகள் தமது புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். கஸ்தூரியார் வீதிச் சந்தி மற்றும் கன்னாதிட்டி வீதிச் சந்தி ஆகியவற்றில் உள்ள லொட்ஜ்களில் தங்கியிருந்த இவர்கள், தாம் கொண்டுவந்திருந்த புடைவைகளை சைக்கிள்களில் கட்டி கிராமம் கிராமமாகச் சென்று விற்று வந்துள்ளனர்.
கடந்த காலத்தில் யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு ஏ9 சாலை திறக்கப்பட்டிருந்த போதும்கூட, தமிழ்நாட்டு வியாபாரிகள் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான வியாபாரங்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.