ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ள பொலிசார் நேற்று இரவு அப் பல்கலைக்கழகத்தின் மாணவிகள் மூவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற சம்பவம் காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் கொதித்தெழுந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று நண்பகல் தொடக்கம் ரஜரட்டைப் பல்கலைக்கழகம் முற்று முழுதாகப் பொலிசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. நானூறுக்கும் அதிகமான பொலிசார் கலகமடுக்கும் உபகரணங்கள் சகிதமாக பல்கலைக்கழகத்தின் அனைத்து இடங்களிலும் பரவிக் காணப்படுகின்றனர்.
இவ்வாறான நிலையில் நேற்றிரவு விடுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த மூன்று மாணவிகளை அங்கு காவலுக்கு இருந்த பொலிசார் கையைப் பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளனர்.
எனினும் மாணவிகள் மூவரும்; ஒன்றாகச் சேர்ந்து போராடி தம்மைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார்கள். ஆயினும் சம்பவத்துக்கு முகம் கொடுத்த மாணவிகளில் ஒருவர் பெருமளவில் மனப்பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதுடன், பல்கலைக்கழக படிப்பையே வேண்டாம் என்று உதறித்தள்ளி விட்டு இன்று காலையே வீடு திரும்பி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடயமறிந்த மாணவர்கள் கொதித்தெழுந்து பொலிசாருக்கெதிரான பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக மேலும் அறியப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.