பக்கங்கள்

27 அக்டோபர் 2010

தமிழ்நாட்டிலுள்ள ஈழ அகதி தற்கொலை முயற்சி!

தமிழ்நாடு, பூந்தமல்லியிலுள்ள சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த ஈழ அகதி ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். ரமணன் என்பவரே 24 தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு இவ்வாறு தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் பி.பி.சி இடம் தெரிவித்தார். தற்போது ரமணன் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈழ அகதிகளில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பானவர்கள் மற்றும் குறிப்பிட்ட சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களை கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ள பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு ஆகிய முகாம்களில் தடுத்து வைத்துள்ளனர். இவ்வாறாக சுமார் 30 பேர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆயுதங்களைக் கடத்திச் செல்ல முற்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டே ரமணனும் பூந்தமல்லியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தனது பெற்றோருடன் மீளச்சேர தன்னை விடுவிக்க வேண்டும் என்று ரமணன் முன்னர் மேன்முறையீடு செய்திருந்தார். ஆனால் அந்த மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார் என்றும் அவரது வக்கீல் குறிப்பிட்டுள்ளார்.
பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 30 பேரையும் உடனடியாக விடுவிக்கவேண்டிய தேவையையே இந்த தற்கொலை முயற்சி காண்பிப்பதாக ரமணனின் வக்கீல் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.