பக்கங்கள்

05 அக்டோபர் 2010

‘‘சரணடையும் புலிகளை சுடுமாறு கோட்டா உத்தரவிட்டதாக பொன்சேகா என்னிடம் கூறினார்’’ -சண்டே லீடர்.

சரணடையும் புலிகள் இயக்க சந்தேக நபர்களை சுட்டுக் கொல்லுமாறு கோத்தாபய தனக்கு உத்தரவிட்டதாக சரத் பொன்சேகாவை அவரது ரீட் அவென்யூ தேர்தல் அலுவலகத்தில் வைத்து கடந்த டிசம்பர் 8ம் திகதி பேட்டி கண்டபோது அவர் தன்னிடம் கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான பிரெட்ரிகா ஜான்ஸ் நேற்று டிரயர் அட்பார் விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவித்தார். சரத் பொன்சேகாவின் வாழ்க்கை, அவரது சுயவிபரங்கள் மற்றும் அவரது தேர்தல் பிரசாரம் பற்றி கேள்வி கேட்பதே எனது நோக்கமாக இருந்தது. எனினும் எனது கடைசி கேள்வி வெள்ளைக்கொடி விவகாரம் பற்றியதாக இருந்தது.
அப்போது கோத்தபாய, பிரிகேடியர் சவிந்திர டி சில்வாவுக்கு தொலைபேசி மூலம் புலி சந்தேக நபர்கள் வெள்ளை கொடியுடன் சரணடைய வரும்போது அவர்களை கொல்லுமாறு உத்தரவிட்டதாக சரத் பொன்சேகா என்னிடம் கூறினார். அதனையடுத்து பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவ்வாறு பிரிகேடியர் சவிந்திர டி சில்வாவிடம் கூறிய சம்பவத்தை தலைப்புச் செய்தியாக போடுவதற்கு தீர்மானித்தேன் என்று சாட்சியமளித்த போது பிரெட்ரிகா ஜான்ஸ் கூறினார்.
மேலும், சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரத்துக்கு ஆதரவு வழங்க சண்டே லீடர் பத்திரிகையின் முகாமைத்துவம் தீர்மானித்ததையடுத்து தான் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் தொடர்பாக சரத் பொன்சேகாவிடம் பேட்டி எடுத்ததாக அவர் கூறினார். பேட்டிக்கு டிசம்பர் 9ம் திகதி சரத் பொன்சேகா நேரம் ஒதுக்கியதாகவும், ஆனால் பின்னர் டிசம்பர் 8ம் திகதி மாலை 6.30 மணிக்கு தன்னை பேட்டி எடுக்க வருமாறு கேட்டுக் கொண்டதாக சாட்சியமளித்த பிரெட்ரிகா ஜான்ஸ் கூறினார்.
இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நாளை பிற்பகல் 1.30 க்கு விசாரணைக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.