தமிழீழம் என்ற கோரிக்கையை முதன்முதலில் முன்வைத்த வி. நவரட்ணம் ஐயா அவர்களின் நூறாவது பிறந்தநாள் 2010, ஒக்ரோபர் 18 ஆம் திகதியான நேற்றாகும். இவரே 1960 ஆம் ஆண்டுகளின் இறுதியில் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் நிறுவுனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு 95 வயதாக இருந்தபோது 2005 ஆம் ஆண்டும் ஜூலை மாதத்தில் தமிழ்நெட் இணையத்தளம் இவரைப் பேட்டி கண்டிருந்தது. ஆனால் இவர் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி காலமானார். மேற்படி 2005 ஆம் ஆண்டின் பேட்டியில், தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே அரசாங்கத்தின் கீழ் வாழ முடியாது, தமிழர்களுக்கென்று தனிநாடு மட்டுமே இதற்கான தீர்வு என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.
இவரது கட்சி 1970 ஆம் ஆண்டின் தேர்தலில் போட்டியிட்டபோது சிறியளவு ஆதரவே இருந்தது. ஆனால் சில வருடங்களுக்குள்ளாகவே இவரது கட்சிக்கு தமிழர்கள் தமது ஆதரவைத் தெரிவித்திருந்தன. 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது இவரது கட்சிக் கொள்கையின் நகல் என்றும் நவரட்ணம் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
நவரட்ணம் அவர்கள் 1910 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 18 ஆம் திகதியன்று ஊர்காவற்றுறையிலுள்ள கரம்பனில் பிறந்தார். இவர் இலங்கை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று 58 ஆண்டுகளாக சட்டத்தரணியாக இருந்தார், 1963 முதல் 1970 ஆம் ஆண்டு வரையில் ஊர்காவற்றுறை தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவராவார்.
தந்தை செல்வா தலைமையில் 1949 ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சி உருவாக்கப்பட்டபோது திரு நவரட்ணம் மற்றும் டாக்டர் ஈ.எம்.வி நாகநாதன் ஆகியோர் அக்கட்சியின் கூட்டு செயலாளர்களாக இருந்தார்கள். ஆனால் 1970 ஆம் ஆண்டில் தனிக் கட்சி உருவாக்கித் தேர்தலில் நின்றபோது அவரது கட்சி உறுப்பினர்கள் அனைவருமே தோல்வியைத் தழுவினர். ஆனால் ஆறு ஆண்டுகளுக்குள் நவரட்ணம் அவர்களின் அரசியலை அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஆதரித்தன.
1991 ஆம் ஆண்டில் இவர் கனடா, மொன்றியலில் இருந்த காலகட்டத்தில் "தமின் இனத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் " (“The Fall and Rise of The Tamil Nation” என்ற நூலை எழுதினார். இதன் இரண்டாம் பதிப்பு 1995 இல் வெளிவந்தது. தமிழர் இறைமை என்பது பேரம் பேச முடியாதது என்பது இந்நூலின் முக்கிய கருவாகும்.
2005 ஆம் ஆண்டு பேட்டியின்போது, சுதந்திரத்தின் ஒருதலைப் பட்சமான பிரேரணையை ஈழத் தமிழர்கள் முன்மொழிய வேண்டும் என்று தனது கருத்தைத் தெரிவித்தார். சிறி லங்கா என்பது இலங்கை அல்ல. 1972 ஆம் ஆண்டு சட்டத்துடன் வந்த சிறி லங்கா என்பது சட்டவிரோதமானது. சுதந்திரத்துக்குப் பின்னர் வந்த அனைத்து அரசியலமைப்புக்களும் தமிழர்களை அடிமைப்படுத்தும் நோக்குடனேயே அமைக்கப்பட்டன என்றார் அவர்.
மேலும் அவரது கருத்துக்கள் சில வருமாறு:
ஒஸ்லோவில் எதுவுமே நடக்கப் போவதில்லை. பிரபாகரன் வஞ்சிக்கப்படுவார் என்று நான் எண்ணவில்லை. இடைக்கால சுயாட்சி அமைப்பால் சிலவற்றை சாதிக்கலாம் என்று விடுதலைப் புலிகள் எண்ணியிருக்கலாம். ஆனால் இதன்மூலம் எதுவுமே நடக்கப்போவதில்லை என்பதே எனது கருத்தாகும். சில குறுக்குவழிகள் இருக்கக்கூடும் என்று இந்த நடைமுறையில் ஈடுபட்டுள்ளவர்கள் நினைக்கக்கூடும். ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை. கடந்த காலங்களில் எத்தனை ஒப்பந்தங்கள் போடப்பட்டன? ஆனால் ஒன்றுகூட அமுலுக்கு வரவில்லை. புலிகள் இப்போது ஒரு வரிசையில் செல்கிறார்கள். எனக்கு இதுபற்றி பெரிதாக விளங்கவில்லை. ஆனால் எதுவும் சாதகமாக இருக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை.
மேற்கொண்டு பேச்சுவார்த்தைகள் எதிலும் ஈடுபடுவதிலும் அர்த்தமில்லை. அவை அனைத்துமே தமிழர்களை ஏமாற்றவே உள்ளன. நாங்கள் சமஷ்டி ஆட்சியைக் கேட்டோம். ஆனால் இதுகுறித்து நாங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளுமே தோல்வி கண்டன. ஆகவேதான் நான் தமிழர் சுயாட்சிக் கழகத்தை ஆரம்பித்தேன்.
உடனிருக்க வேண்டிய தேவை இருப்பின், சிங்கள் மற்றும் தமிழ் இன நாடுகள் இருதரப்பு ஒப்பந்தங்களைப் போட்டுக் கொள்ளலாம். ஆனால் கூட்டுக்குழு போன்ற தொடர்ச்சியான சூழ்ச்சிப் பொறிகள் எவையும் இருக்கக்கூடாது. இந்தியா அல்லது பிற நாடுகள் எவையுமே எங்களது அபிலாஷைகள் குறித்து எமக்கு கட்டளையிடக்கூடாது. நாங்களே எங்கள் தேவைகளைக் கவனிக்க வேண்டும்.
இந்தியா பற்றிக் கூறியுள்ள நவரட்ணம் அவர்கள், இரண்டு இந்தியாக்கள் உள்ளன. புதுடில்லி இந்தியாவிலிருந்து வேறுபட்டது. புதுடில்லிக்கு தனது நண்பர்கள் யார் என்பது தெரியாது. தமிழர்களை அடிமைப்படுத்தி தனக்கு நன்மைகளை அடையலாம் என அது நினைக்கிறது என்றார். இந்தியாவின் முக்கிய ஊடகங்கள் எழுதுபவற்றை வாசிக்கும்போது எனது இரத்தம் கொதிக்கிறது.
சர்வதேச சமூகத்துக்கும் சிங்கள அரசியல் போக்கு குறித்து அவ்வளவாகத் தெரியாது. அண்மையிலேயே அவை ஓரளவுக்கு உணரத் தொடங்கியுள்ளன. சர்வதேசம் கடந்த கால வரலாற்றை உற்றுக்கவனிக்க வேண்டும். ஆனால் உலகை ஏமாற்றக் கூடிய அளவுக்கு சில தமிழர்கள் சிங்கள அரசாங்கத்துடன் தொடர்ந்து பிரச்சாரம் செய்வது சிங்களத்துக்குக் கிடைத்த அதிர்ஷ்டமாகும்.
இப்போக்கு திருச்செல்வத்துடன் தொடங்கியது. சந்திரிக்காவுடன் லக்ஷ்மன் கதிர்காமர் தமிழர்களுக்கு எதிரான போக்கைக் காட்டினார். கதிர்காமர் தன்னை ஒரு மனிதராகப் பார்க்கும்படியும், ஒரு தமிழராக முத்திரை குற்ற வேண்டாம் என்றும் உலகுக்குக் கூறினார். இவர் ஊர்காவற்றுறை, மண்கும்பானில் பிறந்து யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி பயின்றவர். இவரது தமையனாரான ராஜன் கதிர்காமர் ஒருதடவை இலங்கைக் கடற்படைத் தளபதியாக இருந்தவர்.
ராஜன் கதிர்காமர் வித்தியாசமாக யோசித்தார். இவர் யாழ்ப்பாணத் தீவுகள் ஏழையும் சூழவுள்ள கடலை ஆழப்படுத்தி அங்கு ஒரு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தை உருவாக்க எண்ணினார். இவர் ஒரு தமிழராக உணர்ந்து செயற்பட்டார்.
நீலன் திருச்செல்வத்தின் தந்தையாரான திருச்செல்வம் 1965 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் தாம் ஒரு அமைச்சர் பதவியைப் பெற்று, டட்லி சேனாநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிய உடனுமே தமிழர்கள் ஏமாற்றப்படத் தொடங்கிவிட்டனர் என்று நான் நம்புகிறேன். இது 1968 இல் உறுதிப்படுத்தப்பட்டது.
திருச்செல்வம் திருகோணமலையை விட்டுக்கொடுத்தார். அமிர்தலிங்கம் சேருவவிலவை விட்டுக்கொடுத்தார். இவர்கள் எல்லாம் சிங்கள மயமாக்கலுக்கு உதவி செய்தார்கள்.
செல்வநாயகம் உட்பட சமஷ்டிக் கட்சித் தலைவர்கள் எவருமே 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்புக் கூட்டத்தில் பங்கெடுக்கவில்லை.
சேர் பொன் ராமநாதன் தமிழர்கள் வஞ்சிக்கப்படுவதை உணர்ந்தார். ஆனால் அவரது சொந்த மருமகன் மகாதேவாவோ அல்லது அவரது மருமகன் நடேசபிள்ளையோ இதை உணர்ந்து கொள்ளவில்லை. பின்னர் ஜி.ஜி பொன்னம்பலம் இந்த வரிசை அரசியலுக்குள் இழுக்கப்பட்டார். அவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு தமிழர்களாகியமை பிரச்சனையாகியது.
இதன்மூலம் ஏதாவது ஒன்று சாத்தியமில்லை என்றால் அதைப்பற்றி மறந்துவிட வேண்டும் என்று இந்த அரசியல் தலைவர்களில் சிலர் தமிழர்களுக்கு புத்திமதி கூறினர். தமிழர்களின் உரிமைகளுக்கு எதிராக இவர்கள் இவ்வாறு கூறினர்.
பிரபாகரனின் அரசியலில் இதுபோன்ற ஒத்துழைப்பு அநீதிகள் இடம்பெறவில்லை.
சமாதானப் பேச்சுக்களின் போர்வையில் இழுப்பதே சிங்கள தலைவர்களின் தந்திரமாகும். பிரபாகரனின் காலத்தின் பிறகு அல்லது அவருக்கு வயதானவுடன் தமது விருப்புக்களுக்கு உடன்படச் செய்வதன் மூலம் தமது நோக்கங்களை நிறைவேற்ற அவர்கள் விரும்பினர். வயதானவுடன் சிங்கள அரசுடன் கூட்டுச் சேர்ந்த பொன்னம்பலம் மற்றும் சுந்தரலிங்கம் போலவே அவர்கள் பிரபாகரனையும் எண்ணினர். 'எவ்வளவு காலத்துக்குத்தான் பிரபாகரன் இருக்க முடியும். இவருக்குப் பின்னர் ஒரு பிரபாகரன் வரமாட்டார்' என்பதே சிங்களத்தின் வாதம் என்றார் நவரட்ணம் அவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.