இலங்கையில் அசின் நடத்திய இலவச கண்சிகிச்சை முகாமில் பங்கேற்று பார்வையிழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டுமென அசினுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நஷ்ட ஈடு தராவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை அசின் சமீபத்தில் ரெடி இந்திப் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றார். அப்போது படப்பிடிப்போடு நில்லாமல், இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் அவரது மனைவி ஷிராந்தி ஆகியோரின் விருந்தினராக அலரி மாளிகையில் தங்கினார். மேலும் இலங்கை அரசின் நல்லெண்ணத் தூதராக, வட மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகள், தமிழர் அடைத்து வைக்கப்பட்டுள்ள முள்வேலி முகாம்களையும் பார்வையிட்டார்., 'தமிழர்களை இலங்கை அரசு சிறப்பாக பார்த்துக் கொள்வதாகவும், அங்குள்ள தமிழர்கள் விஜய், சூர்யா போன்ற தமிழ் ஹீரோக்களைப் பார்க்க ஆவலுடன் இருப்ப'தாகவும் தெரிவித்தார்.
மேலும் வவுனினியா உள்ளிட்ட பகுதிகளில் அரசு ஏற்பாடு செய்திருந்த இலவச கண் சிகிச்சை முகாம்களுக்கான மொத்த செலவையும் தாமே ஏற்பதாகவும் அறிவித்தார். 10 ஆயிரம் தமிழர்களுக்கு கண்சிகிச்சை தருவதாகவும், அதற்காகும் செலவை முழுவதுமாக ஏற்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இது தமிழர் மத்தியில் பெரும் சலசலப்பை உண்டாக்கியது.
நடிகர்- நடிகைகள் இலங்கை செல்லக்கூடாது என்று நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட திரைப்பட துறையின் கூட்டு நடவடிக்கை குழுவை மீறி அசின் இலங்கை சென்றது தவறு என்றும், பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சே அரசின் போர்க்குற்றத்தை மறைக்கும் செயல்களில் ஒன்று அசினின் இலங்கை விசிட் என்றும் விமர்சிக்கப்பட்டது.
நடிகர் சங்கத்திடம் அசின் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சங்கத்தின் தலைவர் சரத்குமார் பகிரங்கமாக அசினை ஆதரிப்பதால், இதுவரை அசின் மன்னிப்பு கேட்கவில்லை.
பார்வை இழப்பு:
இந்த நிலையில் இலங்கையில், அசின் செலவில் நடந்த முகாமில் சிகிச்சை பெற்ற 10 பேர் முற்றாக பார்வை இழந்துள்ளனர். அவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அசின் மீது வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குருமூர்த்தி சார்பில் வக்கீல் பாலமுருகன் கொச்சியில் உள்ள அசின் வீட்டு முகவரிக்கு நோட்டீசும் அனுப்பி உள்ளார்.
அதில், "இலங்கையில் தமிழர்களுக்காக கண் சிகிச்சை முகாம் நடத்தினீர்கள். இலங்கை அரசிடம் தனிப்பட்ட ஆதாயத்துக்காகவும், விளம்பரத்துக்காகவுமே இதனைச் செயதுள்ளீர்கள். அந்த முகாமில் கண் அறுவை செய்து கொண்ட 10 பேர் பார்வை இழந்தனர். மேலும் 12 பேருக்கு வேறு விதமான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன.
இதற்கு நீங்களும் (அசினும்) சிகிச்சை அளித்த மருத்துவ குழுவும் பொறுப்பு ஏற்கவேண்டும். தவறுக்காக அசின் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். அதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். நோட்டீஸ் கிடைத்த ஒரு வாரத்துக்குள் இதை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் சட்டப்படி வழக்கு தொடரப்படும்.
உங்களுடைய கவனக்குறைவாலும், பொறுப்பற்ற தலைமையாலுமே பார்வை இழப்பு சம்பவம் நடந்துள்ளது..." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.