இன்றைய யுத்தமற்ற சூழலில் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டிய தேவை கிடையாது என்கிற தோரணையில் ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவால் பி.பி.சி சிங்களச் செய்திச் சேவைக்கு கடந்த செவ்வாய்க் கிழமை வழங்கப்பட்ட பேட்டியால் தமிழ் அரசியல் தலைவர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி இது குறித்துக் கருத்துக் கூறுகையில் ஐ.தே.கவின் சாயம் வெளுத்து விட்டது, தமிழர்களுக்கு பொருளாதார அபிவிருத்திதான் வேண்டுமே ஒழிய அரசியல் தீர்வு தேவை இல்லை என்று சிங்கள கட்சிகள் நினைக்கின்றன, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் பற்றிய சிங்கள கட்சிகளின் பேச்சுக்கள் எல்லாம் வெறும் வாய்ச் சொற்கள்தான், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐ.தே.கவுக்கும் இடையில் எவ்விதமான வித்தியாசமும் கிடையாது, என்றார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான முருகேசு சந்திரகுமார் கருத்துக் கூறுகையில் கடந்த முப்பது வருட கால யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர்தான் தமிழர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கி உள்ளார்கள், தமிழர்களுக்கு ஜனநாயக உரிமைகள் வேண்டும், தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வேண்டும் என்றார்.
மீள்குடியேற்றத்துறைப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருத்துக் கூறுகையில் அதிகாரப் பரவலாக்கம் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழர் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுத் தருவார் என்கிற நம்பிக்கை உண்டு என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.