புதுடில்லியில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு இன்றாகும். அவ்விழாவில் கௌரவ விருந்தினராக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கிறார். பல லட்சம் இலங்கைத் தமிழர்களின் உயிர்களைக் குடித்த மஹிந்தவுக்கு இந்த கௌரவமா என்று அவருக்கு எதிராக கறுப்புக் கொடிப் போராட்டத்தை நடத்திய ம.தி.மு.க செயலாளர் வைகோவை போலீஸ் கைது செய்துள்ளது. இவ்வெதிர்புப் போராட்டத்தில் மஹிந்தவின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டுள்ளன என்று போலீஸ் தெரிவித்தது.
கைதான வைகோ பத்திரிகை நிருபர்களிடம் பேசியபோது, போர்க்குற்றவாளியான மஹிந்த ராஜபக்ஷவை விசாரணை செய்வதற்காக ஐக்கிய நாடுகளின் முன்னிலையில் கொண்டுசெல்லும் வரை தமது கட்சியின் போராட்டம் தொடர்ந்து வலுப்பெறும் எனத் தெரிவித்தார். மிக முக்கியத்துவம் வாய்ந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் மஹிந்தவை அழைத்துள்ளமை இலட்சக்கணக்கான தமிழர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாகவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மஹிந்தவுக்கு எதிரான சுலோகங்களைக் கூறி அவரின் கொடும்பாவிகளையும் எரிக்க முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பெரியார் திராவிடக் கழக தொண்டர்களும்கூட இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த இந்து மக்கள் கட்சியின் சில தொண்டர்களும் கைதாகியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.