தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி வந்தார்.
கன்னியாகுமரியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ’’பிரணாப் முகர்ஜி இந்திய குடியரசுத் தலைவரானால் அதில் அதிகமாக மகிழ்ச்சியடைவது இலங்கை அதிபர் ராஜபட்ஷே தான்.
கடந்த 2009-ம் ஆண்டில் பிரணாப் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது முள்ளிவாய்க்கால் பகுதியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை தடுத்து நிறுத்த எதுவும் செய்யாதவர் பிரணாப் முகர்ஜி. மேலும் தற்போது தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக ராஜபட்ஷேவுடன் சேர்ந்து போர் நிறுத்தம் செய்வதற்கு ஏற்பாடு செய்ததாக சொல்லி மக்களை திசை திருப்புகிறார்.
ஆகவே தமிழ்நாட்டைச் சார்ந்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பிரணாப் முகர்ஜிக்கு வாக்களிப்பதற்கு முன்னால் நன்கு யோசிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை தொடர்பாக அங்கு வசிக்கும் மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அந்த மக்களிடம் குடி கொண்டுள்ள நியாயமான அச்சத்தை நீக்க எத்தகைய முயற்சியையும் மத்திய அரசு இதுவரை செய்யவில்லை.
எனவே அந்த மக்களின் அச்சத்தை போக்க உரிய நடவடிக்கை எடுத்து அதற்குப் பின்னர் அணுமின் நிலையத்தை செயல்பட வைக்க வேண்டுமே தவிர அவசர நடவடிக்கைகள் அரசு இறங்க கூடாது. மத்திய அரசின் இந்த செயல்பாடு மிகப்பெரிய தவறு. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தமிழக முதல்வர் இடிந்தகரைக்கு வந்து நேரில் சந்தித்து பேச வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
மேலும், இந்த போராட்டம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்த அனைத்து வழக்குகளும் உடனடியாக திரும்ப பெறப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
பேச்சிப்பாறை அணை நீரை கூடங்குளத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும். குமரி மாவட்ட விவசாயிகள் கூடங்குளத்துக்கு பேச்சிப்பாறை அணை நீரை கொண்டு செல்ல போராடி வருகிறார்கள். அவர்களின் இந்த நியாயமான போராட்டத்துக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.
குமரி ரயில்வே பிரிவை திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைத்ததன் விளைவாக இந்த மாவட்ட மக்கள் எல்லா வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இங்கு தமிழ் தெரியாதவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதால் மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே, குமரி ரயில்வே பிரிவை மதுரை கோட்டத்துடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழர்களை சிங்கள கடற்படையினர் தொடர்ந்து 30 ஆண்டுகளாக வேட்டையாடி வருகின்றனர். இதனை மத்திய அரசோ, இந்திய கடற்படையோ வேடிக்கை தான் பார்த்துக்கொண்டிருக்கிறது.
கேரள மாநிலத்தைப் பொருத்தவரை அந்த மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அங்குள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு மத்திய அரசுக்கு எதிராக போராடுகிறது. ஆனால் இத்தகைய ஒற்றுமை தமிழக கட்சிகளிடம் இல்லை என்பது வேதனையளிப்பதாகும்’’என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.