பக்கங்கள்

18 ஜூலை 2012

போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாமென மக்களை மிரட்டுகிறது படை!

நெல்லியடியில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என மக்களுக்கு இராணுவம் மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறை நோக்கிச் செல்லும் போக்குவரத்து பஸ்கள் அனைத்தும் வல்லை இராணுவ காவலரணில் சோதனைக்குட் படுத்தப்படுத்தப்படவதாகவும், இதன்போது நெல்லியடியில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என படையினர் மக்களிடம் மிரட்டும் பாணியில் அறிவித்து வருவதாகவும் தெரியவருகின்றது. வல்லை இராணுவ காவலரணில் போக்குவரத்து பஸ்கள் சோதனைக்காக நிறுத்தப்பட்டு பயணிகளிடம் அட்டையாள அட்டைகளும் இராணுவத்தினரால் சோதனைக்குட்படுத்தப்படுவதாக சம்பவத்தை எதிர்கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை அட்டையாள அட்டைகள் கொண்டுவராத பயணிகள் கடுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது. நெல்லியடியில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது அதில் கலந்து கொள்ளக் கூடாது எனவும் அங்கு தாக்குதல்கள் நடாத்தப்படவுள்ளது என அவர்கள் பயணிகளிடம் தூய தமிழில் கூறிவருவதாக தெரியவருகின்றது. இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நெல்லியடி பஸ் நிலையப்பகுதியில் நில ஆக்கிரமிப்பு மற்றும் நிமலரூபனின் படுகொலை ஆகியன தொடர்பில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நெல்லியடிப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பெருமளவிலான பொலிஸ் பிரசன்னமும் காணப்படுவதாகவும் புலனாய்வுப் பிரிவினரது நடமாட்டமும் அதிகமாக இருப்பதாக தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.