பக்கங்கள்

03 ஜூலை 2012

கோயிலுக்குள் பாதணியுடன் சென்ற சிப்பாயை கண்டித்த பூசகர் மீது தாக்குதல்!

ஆலயத்தினுள் பாதணியுடன் சென்ற இராணுவ சிப்பாயின்; செயலைக் கண்டித்த ஆலய அர்ச்சகர் இராணுவத்தினரால் கண்முடித்தனமாகத் தாக்கப்பட்டு அடிகாயங்களுக்குள்ளான நிலையில் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி எள்ளங்குளம் ஆதி பராசக்தி கோவிலில் இச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் காவல் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்குச் சொந்தமான காணியை கைப்பற்றி வைத்துள்ள இராணுவத்தினர் அதனை தமது விளையாட்டுமைதானமாகவும் மாற்றியமைத்து விளையாடி வருகின்றனர். குறித்த ஆலயத்திற்கு முன்பதாகவே விடுதலைபபுலிகளது வடமராட்சிக்கான மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்தது.தற்போது மாவீரர் துயிலுமில்லம் முற்றாக இடித்தழிக்கபட்டு பாரிய முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் சம்பவ தினம் ஆலய அர்ச்சகர் பூசையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை இராணுவத்தினரால் அடிக்கப்பட்ட பந்து ஆலயத்திற்குள் வந்து வீழ்ந்துள்ளது. இதனை எடுப்பதற்காக ஓடிவந்த இராணுவச் சிப்பாய் பாதணியுடன்; ஆலயத்திற்குள் சென்றுள்ளார் .ஆயினும் இந்து ஆலயங்களின் முறைப்படி பாதணியுடன் செல்வது உசிதமற்றது எனக் கருதிய அர்ச்சகர் குறித்த ஆலயத்திற்குள் நுழைந்த இராணுவ சிப்பாயை கண்டித்துள்ளார். இதன் எதிரொலியாக சில நிமிடங்களில் அங்கு வந்த அப்பகுதிக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி மற்றும் இராணுவத்தினர் மிரட்டியதுடன் அர்ச்சகரை தாக்கியுள்ளனர். இதனால் உடம்பின் பல இடங்களிலும் காயமடைந்த அர்ச்சகர் அப்பகுதி மக்களால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.