வடக்கு மாகாணத்தில் புலிகளின் கலையாத தடங்களைக் கண்டு மனக்கலக்கம் கொள்பவராகவே இலங்கை ஜனாதிபதி இருக்கிறார் என்பதை அவரது சமீபத்திய நடவடிக்கைகளும், அறிவிப்புகளும் வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு தமிழகத்தின் தினமணி நாளிதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மையில் லண்டன் சென்ற இலங்கை ஜனாதிபதி, அங்கு வாழும் புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்புக் காரணமாகத் தனது நிகழ்ச்சிகளை இரத்து செய்துவிட்டு நாடு திரும்பியதன் தொடர்ச்சியாகத் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத் தேர்தலை 2013 செப்ரெம்பருக்குப் பின்னர் நடத்தபோவதாக அறிவித்திருக்கிறார்.
இதற்கு முக்கியக் காரணமாக வாக்காளர் பட்டியல் உள்ளது. தற்போதுள்ள வாக்காளர் பட்டியல் 30 ஆண்டுகள் பழமையானது. தற்போது வடக்கில் அமைதி நிலவுவதால், மக்கள் படிப்படியாக மீளக்குடியமர்ந்துவருகின்றனர்.
எனவே புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரித்த பின்னரே முறையாகத் தேர்தல் நடத்தமுடியும் என்ற நிலைப்பாட்டை அரச தரப்பு எடுத்துள்ளது. இது விவரமற்ற பேச்சா அல்லது திட்டமிட்ட சதியா என்பதுதான் சந்தேகம்.
கடந்த மூன்று ஆண்டுகளில், வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல்கயின்போது மக்கள் தமிழ் தேசியக் கூட்டடைப்புக்கு வாக்களித்தனர்.கடந்த ஆண்டு உள்ளுராட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போதும் தமிழர்கள் வாக்களித்தார்கள்.
இப்போது மட்டும் மஹிந்தவுக்கு ஏன் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்கிற திடீர் அக்கறை?
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களைக் கொண்ட வடக்கு மாகாணத்தில் தமிழர்கள்தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றனர்.
ஆகவே வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றால், அங்கே ஒரு தமிழர் முதலமைச்சர் பதவிக்கு வருவார் என்பது நிச்சயம்.
அங்கே இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசு இல்லாத நிலையில்,இலங்கை அரசே நேரடியாக நிர்வாகம் செய்யும் தற்போதைய அதிகாரம் புதிதாக தமிழ் முதலமைச்சர் ஒருவர் வந்தால் குன்றிப்போகும்.
மாகாண அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். இந்த அச்சம்தான் தேர்தலைத் தள்ளிப்போட வைக்கிறது.
இலங்கையில் தமிழர்கள் அரசியல் சக்தியாக மாறிவிட்டால், "மேலை நாடுகளின் தீயசக்திகள்'', வடக்கு மாகாணத்தைப் பயன்படுத்தி இலங்கையைப் பிளவுபடுத்தும் என்ற பொய்க் கருத்துகள் இப்போது கசியவிடப்படுகின்றன.
இத்தகைய கருத்து, குறிப்பாக லண்டன் சென்று எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க முடியாமல் ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் உருவாக்கப்பட்டது.
அதாவது, புதிய தேர்தல் ஒன்றின்மூர் வடக்கு மாகாணத்தில் தமிழ் முதலமைச்சர் ஒருவர் தெரிவுசெய்ய்பட்டால் கனடா, லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் அதனை வாய்பாகப் பயன்படுத்திவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்.
மஹிந்த சொல்லும் காரணத்தை உண்மையென்றே வைத்துக்கொண்டாலும், ஒரு தமிழரின் தலைமையில் வடக்கு மாகாணத்தில் ஆட்சி அமையும்போது மட்டுமே, புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் தாயகம் திரும்புவார்களே தவிர, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவேண்டும் என்பதற்காக தாயகம் திரும்ப மாட்டார்கள்-என்று அந்த தலையங்கம் விரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.