திமுகவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள டெசோ மாநாட்டில் கலந்துகொள்ளும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாதம் நடைபெற உள்ள இந்த மாநாட்டின் அதிகாரப்பூர்வ அழைப்பாளர் ராதா கிருஷ்ணன் திமுக தலைமையின் சார்பாக இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி பொது செயலாளர் நல்லையா குமரகுருபரன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
"டெசோ மாநாட்டில் கலந்துகொள்ள திமுகவின் அழைப்பு எமக்கு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் இலங்கையிலும், தமிழகத்திலும் எழுந்துள்ளன.
இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள், தமது சொந்த அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படுகின்றனவா, இல்லையா என நாம் தேடி பார்ப்பது இல்லை. அது தமிழக அரசியல் கட்சிகளின் வேலை. எம்மை பொறுத்தவரையில், தமிழக அரசியல் கட்சிகளின் எல்லாவித நடவடிக்கைகளும் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை ஏற்படுத்துகின்றன. எனவே இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளின் எந்த ஒரு நடவடிக்கையையும் விமர்சிப்பதில்லை என்பது நமது கட்சியின் நிலைப்பாடு ஆகும்.
எனினும், இம்மாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பில் நாம் இதுவரையில் எந்தவித முடிவையும் எடுக்கவில்லை. எமது கட்சியின் தலைமைக்குழு இது சம்பந்தமான முடிவை எதிர்வரும் தினங்களில் எடுக்கும்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.