கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில் பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. திருமலையில் நேற்று இரவு இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் கூட்டத்தில் முரண்பாடுகளே மேலோங்கியிருந்ததாகவும், கூட்டமைப்பிலுள்ள 4 கட்சிகள் தனியாகவும் தமிழரசுக் கட்சி தனியாகவும் செல்லும் நிலை உருவாகியிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான தமிழ்க் கட்சியாக இருக்கின்ற போதிலும், தனியான அரசியல் கட்சியாக அது பதிவு செய்யப்படவில்லை. தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்., ரெலோ, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவே இதில் இடம்பெற்றுள்ளன. ஒரு கட்சிக்கு இருக்க வேண்டிய உள்ளகக் கட்டமைப்புக்கள் எதுவும் அதற்கு இல்லை. இதனால், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைக் கையாள்வதில் கூட்டமைப்பு பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.
அதேவேளையில் கூட்டமைப்பு தனியான கட்சியாகப் பதிவு செய்யப்படாமையால் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்திலேயே கடந்த தேர்தல்களை கூட்டமைப்பு எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த நிலையிலேயே கூட்டமைப்பை தனியான ஒரு கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்பது உட்பட அதற்கான உள்ளகக் கட்டமைப்பக்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் முன்வைத்திருந்தன.
பொதுவான தலைமைத்துவக் குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். தேர்தல் குழு அமைக்கப்பட வேண்டும், நிதிக் குழு உருவாக்கப்பட வேண்டும், பொதுவான சின்னத்தில் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்தக் கட்சிகளால் முன்வைக்கப்பட்டன. தலைமைத்துவக் குழுவை உருவாக்கும் விடயத்தை கொள்கையளவில் ஏற்றக்கொண்ட தமிழரசுக் கட்சி, ஆனால், அதில் தமக்கு அதிகளவு பிரதிநித்துவம் இருக்க வேண்டும் எனக் கோரிவருவதுதான் பிரச்சினைக்கு அடிப்படையாக உள்ளது. ஏனைய கட்சிகள் சமத்துவப் பிரதிநித்துவம் இருக்க வேண்டும் எனக் கோருகின்றன.
கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தன் தொடர்ந்தும் இருப்பதை ஏற்றுக்கொள்ளும் ஏனைய கட்சிகள், கூட்டமைப்பின் சார்பில் முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காகவே உயர் மட்டக்குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கின்றன. இதனைவிட, தமிழரசுக் கட்சியின் சின்னத்தைத் தவிர்த்து பொதுச் சின்னம் ஒன்றின் மூலமாகவே தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவை வலியுறுத்துகின்றன.
இது தொடர்பாக ஆராய்வதற்காக கொழும்பில் கடந்த வாரங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் இறுதி முடிவு காணப்படாத நிலையில் திருமலையிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் நேற்று இரவு ஆலோசனைக்கூட்டம் இடம்பெற்றது. நேற்று மாலை ஆரம்பமாகிய கூட்டம் நள்ளிரவு வரையில் இடம்பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, அதியநேந்திரன், செல்வராஜா ஆகியோரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், புளொட் சார்பில் த.சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடுமையான வாக்குவாதங்களுடனும் வார்த்தைப் பிரயோகங்களுடனும் இடம்பெற்ற இந்தக் கூட்டம் சுமார் 12.00 மணி வரையில் இடம்பெற்ற போதிலும் உடன்பாடு எதுவும் காணப்படவில்லை. தலைமைத்துவக்குழுவில் சமத்துவப் பிரதிநிதித்துவத்தை ஏற்பதற்கு தமிழரசுக் கட்சியினர் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகத் தெரிகின்றது. முரண்பாடுகள் உச்ச கட்டத்தையடைந்திருந்த நிலையில் கூட்டத்தை இன்று காலை 9.00 மணி வரை சம்பந்தன் ஒத்திவைத்தார். இன்று காலை உடன்பாடு ஒன்றை உருவாக்குவதற்காக இறுதிக்கட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிகின்றது. இந்த முயற்சிகள் சாத்தியமாகவிட்டால், கூட்டமைப்பு பிளவு படுவது தவிர்க்க முடியாததாகிவிடும் என கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இதேவேளையில் புலம்பெயர்ந்துள்ள தமிழ்ப் பிரமுகர்கள் சிலரும், குடாநாட்டில் உள்ள தமிழ்ப் பிரமுகர்கள் சிலரும் இறுதிக் கட்ட சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தவேளையில் கூட்டமைப்பில் ஏற்படக்கூடிய பிளவு தமிழர்களுக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்துவதாக அமையும் என்பதுடன், நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.