பக்கங்கள்

23 ஜூலை 2012

காணாமல் போன தமிழ் இளைஞர் யுவதிகளை இறந்துவிட்டதாக கருதி மரணச்சான்றிதழை பெற்றுக் கொள்ள வற்புறுத்தல்!

வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் காணாமல் போன தமிழ் இளைஞர் யுவதிகளை இறந்துவிட்டதாக கூறி மரணச்சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை ஒன்றினை படைத்தரப்பு ஆரம்பித்திருப்பதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினது அலுவலகத்தில் இன்று அவர் நடத்தியுள்ள ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் முல்லைதீவு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு கடந்த சனி மற்றும் வெள்ளிக்கிழமை காணாமல் போனோரது உறவுகளை அழைத்த படையினர் காணாமல் போனவர்கள் காணாமல் போய் மூன்று வருடங்களாகிவிட்டன. இனிமேல் அவர்கள் வீடு திரும்பமாட்டார்கள். எனவே அவர்கள் இறந்துவிட்டதாகவே கருத வேண்டும். அவர்களுக்குரிய மரணச் சான்றிதழை பெற்றுக் கொள்ளுங்கள் என நிர்ப்பந்தித்துள்ளனர். இவர்கள் அனைவரும் வவுனியா ஜோசப் படை முகாமிலிருந்தே வந்திருந்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர். ஏற்கனவே கற்;றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவில் காணாமல் போன தமது உறவுகள் பற்றி வாக்குமூலங்கள் அளித்தவர்களே அழைக்கப்பட்டதாக தெரியவருகின்றது. காணாமல் போனோர் தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்டதுடன் அவர்களிடமிருந்து வெள்ளைத் தாள்கள்களில் ஒப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்தார். ஐ.நாவில் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துமாறான நிர்ப்பந்தங்கள் அதிகரித்துள்ளன. கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் பிரகாரம் காணாமல் போனோரை கண்டறிவதற்கு விசாரணை குழுவொன்றை அமைக்க உத்தரவிடப்பட்டது. எனினும் இதுவரை அவ்வாறு எதுவுமே நடக்கவில்லை. சரண் அடைந்தவர்கள் எனும் போது பலர் குடும்பத்தவர்களால் இறுதி யுத்தத்தின் போது குடும்பத்தவர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள். அவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களுக்கும் மரண சான்றிதழ் வழங்கப்படுவதானால் அவர்களுக்கு என்ன நடந்ததென்பது முதலில் தெரிவிக்கப்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். கடந்த வெள்ளிக்கிழமை மட்டும்30 பேர் இவ்வாறு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.