சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன.
மலையக சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவதன் மூலமாகவே தமிழ்ப் பிரதிநிதித்துவமொன்றை பெற்றுக்கொள்ள முடியும் என்ற அழுத்தம் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கொடுக்கப்பட்டு வந்தது. அதனையடுத்தே இத் தீர்மானம் எடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான முயற்சியாக, இக் கட்சிகளை கூட்டிணைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சேவல் சின்னத்தில் போட்டியிடுவதென்ற பொதுவான கோரிக்கை விடுக்கப்பட்டுவந்த நிலையில் இன்று தீர்மானம் எட்டப்பட்டிருக்கிறது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருக்கும் இடையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையையடுத்து இவ்விடயம் முடிவுக்கு வந்துள்ளது.
அதனடிப்படையில், ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி, ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து சேவல் சின்னத்தில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணி இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாதபோதும் இத்தீர்மானத்துக்கு அக்கட்சியினர் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.