பக்கங்கள்

22 ஜூலை 2012

ஈழத்து அகதிகளை கையாளும் அதிகாரத்தை க்யூ பிரிவிடமிருந்து பறிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை

புழல் ஈழ அகதிகள் முகாமில் இருந்து வந்த 6 பேரை ஜூலை 1ஆம் தேதி தமிழக காவல் துறையின் க்யூ பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும், காவலர்களும் ஒரு வண்டியில் ஏற்றி சென்னை கடற்கரை சாலை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று, விசாரணை என்ற பெயரில் அவர்களை அடித்துத் துன்புறுத்தினர். அவர்களில் 4 பேரை அன்று நள்ளிரவே விடுவித்துவிட்டு 2 பேரை மட்டும் நீதிபதி முன்பு நிறுத்தி 15 நாள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர். இராமச்சந்திரன் என்கிற ரமேஷ், காந்தி மோகன் என்கிற சுதர்சன் ஆகிய இருவர் மீதும் சாட்டிலைட் டெலிபோன் வைத்திருந்தார்கள், ஆஸ்ட்ரேலியாவிற்கு தப்பிச் செல்ல பணம் திரட்டினார்கள் என்று குற்றம் சாற்றி வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைத்தப் பிறகு, அவர்கள் இருவரையும் விசாரணைக் காவலில் எடுத்து அடித்து, உதைத்து சித்ரவதை செய்துள்ளது க்யூ பிரிவு. விசாரணையின் போது, ஆஸ்ட்ரேலியாவிற்கு செல்வதற்காக சேர்த்த பணம் யாரிடம் உள்ளது என்று கேட்டுத்தான் துன்புறுத்தியுள்ளனர். ஆக, இவரகள் மீது சாட்டிலைட் ஃபோன் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாற்று பொய்யானது என்பதும், ஆஸ்ட்ரேலியாவிற்கு அகதிகளாகச் செல்ல அவர்கள் சேகரித்த பணத்தை அபரிக்கவே இவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்ததும் உறுதியானது. இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட காந்தி மோகன், இராமச்சந்திரன் ஆகிய இருவரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப் படி நேற்று அவர்கள் விடுவிக்கப்பட இருந்த நிலையில், காலை 5 மணிக்கே சிறைக்கு வந்து, மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி, அந்த இருவரையும் செங்கல்பட்டிலுள்ள சிறப்பு முகாமிற்கு கொண்டு சென்று அடைத்துள்ளது க்யூ பிரிவு. இது முழுக்க, முழுக்க சட்டத்திற்குப் புறம்பான, நீதியற்ற நடவடிக்கையாகும். இந்த இருவரும் நீதிமன்றக் காவலில் இருந்தபோதே விசாரணை காவலில் எடுத்து விசாரணை நடத்திய பிறகு, இப்போது மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துவது என்பது சித்தரவதை செய்யவே தவிர, வேறு காரணிகள் இல்லை. ஈழத்து சொந்தங்களை சட்டத்திற்கு புறம்பாகத் தடுத்து வைத்து க்யூ பிரிவு சித்ரவதை செய்கிறது என்கிற குற்றச்சாற்றுக்கு இந்த நிகழ்வே சரியான சான்றாகும். இப்படித்தான் பல ஈழ அகதிகளை சிறப்பு முகாமில் அடைத்து வைத்து துன்புறுத்துகிறது க்யூ பிரிவு. கடந்த காலங்களில் ஈழ அகதிகளிடம் இருந்த பணத்தை பறித்த க்யூ பிரிவு அதனை ஒருபோதும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தது இல்லை. பணம் மட்டுமல்ல, அவர்களிடம் இருந்த கைப்பற்றப்பட்ட பல விலையுயர்ந்த பொருட்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது இல்லை. தமிழக காவல் துறையின் க்யூ பிரிவு செய்துவரும் இப்படிப்பட்ட அராஜகங்களை அரசின் கவனத்திற்குக் கொண்டு வரவே கடந்த 11ஆம் தேதி செங்கல்பட்டு சிறப்பு முகாம் மறியல் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்தி, ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைதானார்கள். ஆனால் அந்த போராட்டத்திற்குப் பிறகும் க்யூ பிரிவின் இப்படிப்பட்ட அராஜக நடவடிக்கை தொடர்கிறது என்றால், ஜனநாயகப் பூர்வமான போராட்டங்களுக்கு இந்த ஆட்சியிலும் மதிப்பில்லை என்றே தெரிகிறது. இந்த நாட்டில் வாழும் தீபெத் அகதிகளும், பர்மா அகதிகளும் சீருடமும் சிறப்புடன் முழு உரிமையுடன் பாதுகாப்பாக வாழ்ந்து வருகையில், நமது ஈழத் தமிழ் சொந்தங்கள் மட்டும் அவமானப்படுத்தப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் அலைக்கழிக்கப்படுகின்றனர். அவர்களை துன்புறுத்துவதற்காகவே சிறப்பு முகாம் என்ற பெயரில் செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் தனிமைச் சிறைக் கூடங்களை க்யூ பிரிவு பயன்படுத்தி வருகிறது. ஈழத் தமிழ் சொந்தங்கள் அரசியல் சம உரிமை பெறும் வரை ஒயமாட்டேன் என்று தமிழக சட்டப் பேரவையிலேயே தமிழக முதல்வர் முழங்கினார், ஆனால் அவருடைய ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட தமிழ்நாட்டிலேயே அவர்கள் கேவலமாக நடத்தப்படுவது முரண்பட்ட நிலையாக உள்ளது. எனவே இதற்கு மேலும் தாமதிக்காமல், இப்பிரச்சனையில் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு சிறப்பு முகாம்களை இழுத்து மூடி, அதில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும், ஈழத்து அகதிகளை கையாளும் அதிகாரத்தை க்யூ பிரிவிடமிருந்து பறிக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

 நாம் தமிழர் கட்சிக்காக,
 செந்தமிழன் சீமான்
 தலைமை ஒருங்கிணைப்பாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.