நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயச் சுற்றாடலில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர். இதனையடுத்து இந்தப் பகுதி இளைஞர்கள் மேற்கொண்ட முயற்சியால் குறித்த திருடன் பிடிக்கப்பட்டு ஊர்காவற்றுறைப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருட்டு சம்பவம் தேர்த்திருவிழா அன்று இரவு இடம்பெற்றது. ஆலயச் சூழலில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பொருள்களை வாங்கி கொண்டு நின்ற ஒருவர் அங்கு காசாளரின் மேசையில் இருந்த பணப்பையை மிகவும் தந்திரமாகச் சுருட்டிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் வர்த்தக நிலையத்தைப் பூட்டுவதற்கு முன்னர் பணப்பையை எடுக்கச் சென்ற சமயம், அந்த பணப்பை காணாமல் போயிருந்தமை தெரியவந்தது. அந்தப் பணப் பையில் சுமார் ஐந்து லட்சம் ரூபா பணம் இருந்ததாக சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.
இந்தத் திருட்டு தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட திருடனை மடக்கிப் பிடிக்கும் முகமாக ஆலயச் சூழலில் இளைஞர் குழு ஒன்று உடனடி நடவடிக்கை யில் ஈடுபட்டது.
நயினாதீவு இறங்கு துறையிலும் நேற்றுமுன்தினம் அதிகாலை முதல் இளைஞர்கள் குறித்த திருடனைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். கடுமையான முயற்சியால் சம்பந்தப்பட்ட திருடன் நேற்றுமுன்தினம் நண்பகல் நயினாதீவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டான்.
இந்த பணப்பையைத் திருடியதாகக் கூறப்படும் குறித்த திருடன் ஊர்காவற்றுறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பொலிஸார் திருடனை விசாரணைக்காக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.