பக்கங்கள்

04 ஜூலை 2012

தமிழ் அரசியல் கைதி மகர சிறையில் மரணம்!


வவுனியா சிறைச்சாலையிலிருந்து மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர் இன்று (04) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. 29 வயதான என்.ரூபன் என்ற கைதியே உயிரிழந்துள்ளதாக மகர சிறைச்சாலை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்தக் கைதி, இன்று (04) அதிகாலை இராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. வவுனியா சிறைச்சாலையிலிருந்து மகர சிறைச்சாலைக்கு 28 தமிழ் அரசியல் கைதிகள் மாற்றப்பட்டிருந்தனர். இவர்களில் 10 பேர் மகர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நான்கு பேர் ராகம போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறது. உயிரிழந்த கைதியின் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. வவுனியா சிறைச்சாலையில் மூன்று சிறை அதிகாரிகள் சிறைப்பிடித்திருந்த தமிழ் அரசியல் கைதிகளிடமிருந்து விசேட அதிரடிப்படையினர் அந்த அதிகாரிகளை மீட்டிருந்தனர். இதன்பின்னர், தமிழ் அரசியல் கைதிகள் மகர சிறைச்சாலைக்கு மாறப்பட்டதுடன், அவர்களில் 10 பேர் சிறைச்சாலை வைத்தியசாலையிலும், நான்கு பேர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.கைதிகள் மீது கொடூர சித்திரவதைகள் புரியப்பட்டதாகவும் பல கைதிகள் மருத்துவ வசதிகள் வழங்கப்படாத நிலையில் உயிருக்கு போராடுவதாகவும் முன்னர் செய்திகள் வெளிவந்திருந்தமை தெரிந்ததே!இக்கைதியும் சித்திரவதையினாலும் போதிய மருத்துவ வசதிகள் வழங்கப்படாமலுமே மரணமடைந்திருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.