கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிடுவதனால் அதிருப்தி அடைந்துள்ள அக்கட்சியின் ஐந்து முக்கிய உறுப்பினர்கள் எமது பட்டியலில் போட்டியிடுவர் என்று ஐ. தே.க. வின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
கூட்டு எதிர்க்கட்சிகளின் உடன்பாடுகளில் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான எமது நட்புறவு தொடரும். ஆனால் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்தனியே போட்டியிடுவோம். தேர்தலின் பின் பெறுபேறுகளின் அடிப்படையில் கூட்டமைப்புடன் கூட்டுச் சேர்வது தொடர்பில் சிந்திப்போம்.
சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான எமது கட்சியின் வேட்பு மனுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கட்சியின் வேட்புமனுக் குழு கூடி பேச்சு நடத்தி இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளும். இன்று செவ்வாய்க்கிழமையும் நாளை புதன்கிழ மையும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும்.
இந்த மூன்று மாகாண சபைகளினதும் முன்னாள் உறுப்பினர்கள் போட்டியிடுவதோடு புதியவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. அதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் அதிருப்தி கொண்ட காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்கள் ஐந்துபேர் தற்போது எம்முடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இவர்கள் ஐவரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே. கட்சிப் பட்டியலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு எமது கட்சியில் சந்தர்ப்பம் வழங்கப்படும். இந்த முறை பிரசாரக் கூட்டங்களை மட்டுப்படுத்தி வீடு வீடாகச் சென்று மக்களைத் தெளிவுபடுத்தும் செயற்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பில் அமைப்பாளர்களைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளோம். என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.