பக்கங்கள்

07 ஜூன் 2010

தடையை மீறி போராட்டம் நடைபெறும்!-பெ.மணியரசன்.


தடையை மீறி ராஜபட்சேவுக்குக் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் அறிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரக் கொடூரன் ராஜபட்சேவுக்குத் டெல்லியில் இந்திய அரசு சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுப்பதைக் கண்டித்தும், ராஜபட்சேயைத் திரும்பிப் போக வலியுறுத்தியும் 08.06.2010 அன்று சென்னை இலங்கைத் தூதரகம் முன்பும் மாவட்டத் தலைநகர்களிலும் கருப்புக் கொடிக் கண்டன ஆர்ப்பாட்டம் செய்யத் தமிழ் இன உணர்வு அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
ஜனநாயக வழிமுறைப்படி நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தமிழகம் முழுவதும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழக அரசு விதித்துள்ள இந்தத் தடை சிங்கள இனவெறி அரசுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது.
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புகள் ராஜபட்சேயைப் போர்க் குற்றவாளியாக அறிவித்துள்ளன. மனித உரிமைக்கான நிரந்தரத் தீர்ப்பாயம் அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகரில் கூடி திறந்தவெளி விசாரணை நடத்தி ராஜபட்சே கும்பலைப் போர்க் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் செயல்படும் மனித உரிமை கண்காணிப்பகம், ராஜபட்சேயைப் போர்க்குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பிரிவும் ராஜபட்சே கும்பல் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது. இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராகப் போர்க் குற்றங்கள் இழைத்துள்ளது என்று கூறி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கையுடன் நடக்கும் வணிகத்திற்கு அளித்து வந்த வரிச்சலுகையை நீக்கிவிட்டன. பிரித்தானிய நாடாளுமன்றம் விசாரணைக்குழு அமைத்துள்ளது.
இவ்வாறு அப்பாவி ஈழத்தமிழ்ப் பொது மக்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றங்கள் இழைத்துள்ள இலங்கைக் குடியரசுத் தலைவர் ராஜபட்சேவுக்கு எதிராக உலகமே கண்டனம் முழங்கும் போது இந்திய அரசு 08.06.2010 அன்று டெல்லியில் சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
போர்க்குற்றவாளி ராஜபட்சேவுக்கும் அவரை வரவேற்கும் இந்திய அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தடைசெய்வதன் மூலம் தமிழக அரசு இனத்துரோகம் செய்து, தமிழர்களை இலட்சணக்கணக்கில் கொன்ற ராஜபட்சேவுக்குத் துணை போகிறது.
அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையான ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமையைப் பறிக்கும் தமிழக அரசின் ஏதேச்சாதிகாரத்தையும் இனத்துரோகத்தையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்க்கிறேன்.
அதே வேளை தடையை மீறி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறம் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.