பக்கங்கள்

01 ஜூன் 2010

மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது!


மலேசியாவில் உண்ணாவிரதம் இருந்த ஈழத்தமிழர்களை காப்பாற்ற பல்வேறு உலக தமிழ் அமைப்புகளுக்கும், நக்கீரன் மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. பினாங்கு துணை முதல்வர் ராமசாமி, ஐ.நா.வின் அகதிகளுக்கான அதிகாரிகளை சந்தித்து, ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தார். உள்துறை அமைச்சகத்திடமும் அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தார். அதேபோல மாற்று செயல் அணி அமைப்பைச் சேர்ந்த கலைவாணர் முகாமில் உண்ணாவிரதம் இருந்து வந்த ஈழத்தமிழர்களை நேரில் சந்திக்க பலமுறை முயற்சித்தும், அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பிறகு திங்கள்கிழமை மலேசிய பிரதமர் அலுவலகத்துக்கு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களின் அவல நிலைகளை பேக்ஸ் மூலமாக செய்திகளாக அனுப்பினார். தொடர்ந்து மலேசிய ஆணையர் டத்தோ அப்துல் ரகுமானை சந்தித்து, ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும்படி வலியுறுத்தினார்.
இதன்பிறகு மலேசிய பிரதமரின் அந்தரங்க செயலாளரை சந்தித்து, ஈழத்தமிழர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி 8 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவர்களின் உயிர்களையும் காக்க வேண்டும் என்ற கோரிக்கையை மனுவாக முன் வைத்தார்.
அதன்பிறகு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பிரதமரின் அந்தரங்கச் செயலாளரின் உத்தரவின் பேரில் உண்ணாவிரதத்தை கைவிடச் செய்தார். பிரதமர் அலுவலகத்தில் இருந்து கலைவாணர் நக்கீரன் செய்தியாளரிடம் கூறும்போது,
மலேசியா ஆணையர் டத்தோ அப்துல் ரகுமானை சந்தித்து, கோரிக்கையை எழுப்பி, அது ஓரளவு சரியாகும் நிலையில், ஐ.நா.வின் அகதிகளுக்கான அதிகாரிகள், முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் புலிகளின் இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தவறான செய்திகளை அரசுக்கு தெரியப்படுத்தி விட்டனர்.
இதனால் ஈழத்தமிழர்களின் கோரிக்கை ஏற்கப்படாமல் இருந்தது. இப்போது நாங்கள் உண்மை நிலையை மலேசியா ஆணையர் அப்துல் ரகுமானுக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் பேக்ஸ் மூலமாக அனுப்பி இருந்தோம். அதன்பிறகு செவ்வாய்கிழமை காலை 11.30 மணி முதல் 1 மணி வரை பிரதமரின் அந்தரங்க செயலாளரை சந்தித்து, உண்மை நிலையை விளக்கி கூறினோம். முதல் கட்டமாக 75 ஈழத்தமிழர்களை நாடு கடத்தும் முயற்சி கைவிடப்பட்டது. அடுத்து இதே மலேசியாவில் அவர்கள் இருக்கும் வரை அகதிகளுக்கான அனைத்து உதவிகளையும் கொடுத்து தங்க வைக்க வேண்டும் என்று கூறினோம். அதையும் ஏற்றுக்கொண்டார்கள்.
இதனிடையே நார்வே, கனடா நாட்டின் தூதர்களிடம் தொடர்பு கொண்டு 75 பேரையும் அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொண்டோம். அவர்களும் வரும் வியாழன் அன்று இதுகுறித்து முடிவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர். நாளை முதல் 75 ஈழத்தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்றும்படி கையெழுத்து இயக்கம் தொடங்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.