இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்கும் முகமாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் மூவரைக் கொண்ட நிபுணர் குழுவை இன்று அறிவிக்கவுள்ளார்.
பெரும்பாலும் இந்த குழுவில் இந்தோனேசிய இராஜதந்திரி ஒருவரும், ஆஸ்திரிய இராஜதந்திரி ஒருவரும் உள்ளடங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த குழுவின் சரியான வேலைத்திட்டங்கள் கடமைகள் என்னவென்பது இதுவரையில் வெளியாகவில்லை. எனினும், இராஜதந்திர தரப்புக்களின் தகவல் படி, இந்த குழு, போர்க்குற்ற விசாரணைகளுக்கு முன்னோடியாக அமைக்கப்படும் குழுவாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பின் படி, சுமார் 7000 பொது மக்கள் முதல் நான்கு மாதங்களில் கொல்லப்பட்டனர்.
அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை வெற்றிக் கொண்டதாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இந்த தொகை மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு கடந்தவாரம் விஜயம் செய்திருந்த பான் கீ மூனின் அரசியல் துறை உதவி செயலாளர் லின் பெஸ்கோ குறித்த நிபுணர்குழு இலங்கை அரசாங்கத்துக்கும் உதவக்கூடியதாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.
எனினும், இதனை நிராகரித்துள்ள இலங்கை அரசாங்கம் இந்த குழுவுடன் தாம் எந்த ஒரு தொடர்பையும் பேணப்போவதில்லை என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த நிபுணர்குழு அமைப்பு தொடர்பில் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று அவசர கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.