இலங்கை அதிபர் ராஜபக்சே மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார். இந்த பயணத்தின் போது இந்தியாவுக்கும் இலங்கைகும் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த புதிய ஒப்பந்தங்களை கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வரும் 18ம் தேதி தமிழகமெங்கும் ஆர்பாட்டங்கள் நடத்துகிறது. இது குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில், ‘’ஈழத் தமிழர்களுக்கெதிரான ஐந்தாம் கட்டப்போரை இலங்கையும், இந்தியாவும் புதிய முறையில் தொடங்கியுள்ளன என்பதற்கான அடையாளம் தான் மன்மோகன் சிங் ராஜபக்சே இடையிலான உடன்பாடுகள்.
இந்தியாவும், இலங்கையும் போர்படைகளைப் பரிமாற்றிக் கொள்ளவும் சிங்களப் படையினர்க்கு இந்தியா உயர்தரப் பயிற்சி அளிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
சிங்களக் காவல்துறையில் புதிதாக சேர்க்கப்படும் ஆட்களுக்கு இந்தியாவில் உயர்தரப் பயிற்சி அளிக்கப்படும். இந்தியா தனது செயற்கைக் கோள் தகவல் மையத்தை இலங்கையில் நிறுவும்.
பலாலி விமானப் படைத்தளத்தை மேலும் வலுப்படுத்தித் தர இந்தியா ஒப்புக் கொண்டள்ளது.
இத்தனை போர்த் தயாரிப்புகளும் எந்தப் பகை நாட்டிற்கு எதிராக? இலங்கையில் இந்தியாவும் சிங்கள அரசம் ஈழத் தமிழர்களைத்தாம் ஒரே பகை சக்தியாகக் கருதுகின்றன.
வடக்கு, கிழக்கு மாநிலங்கள் முழுவதையும் பல்லாயிரக்கணக்கான படை முகாம்கள் சூழ்ந்துள்ளன. சிங்களப் படையாளுக்குத் தெரியாமல் ஒரு தமிழர் சிறுநீர் கழிக்கக் கூட வெளியே போக முடியாது.
தமிழர்களின் வீடுகளையும் விளைநிலங்களையும் சிங்களர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். இதன்பிறகும் ஏன் புதிய போர்த் தயாரிப்புகள்? ஈழத் தமிழர்களை முற்றிலும் சிதைத்து உதிரிகளாக மாற்றுவதற்காகவே இந்தத் தயாரிப்பு.
இந்தியா தனது துணைத் தூதரகங்களை யாழ்ப்பாணத்திலும் அம்பன்தோட்டாவிலும் திறக்க உடன்பாடு போட்டுள்ளது. அந்தச் சுண்டைக்காய் நாட்டிற்குக் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் போதாதா? தமிழர் தாயகப் பகுதிகளில் தூதரகப் பெயரில் படைசார் உளவுப் பிரிவுகளை நிறுத்துவது தான் இந்தியாவின் நோக்கம்.
வடக்கில் வசந்தம் என்ற பெயரில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து சிங்களர் வேளாண் பண்ணைகள் அமைக்கும் திட்டத்தை இந்தியா, ஏற்கெனவே இலங்கைக்கு வழங்கியுள்ளது. அதற்கான ஒப்பந்தம் இப்போது போடப்பட்டுள்ளது.
போர் விதவைகளின் மறுவாழ்வுக்கு உதவுவதற்கு இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது. இத்திட்டம் சிங்களப் படையாட்களின் மனைவிமார்களுக்கு உதவிடத்தானே தவிர, போரால் விதவையான தமிழ்ப் பெண்களுக்கு உதவிட அல்ல.
தமிழகத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு மின்சாரம் தர இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் நெய்வேலி மின்சாரத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடிய ஆபத்து உள்ளது.
பண்பாட்டுப் பரிமாற்றம் என்ற பெயரில் சிங்களப் பண்பாட்டையும் புத்தமதத்தையும் ஈழத்தில் திணிப்பதும் சிங்களக் குடியேற்றங்களை அங்கு அதிகப்படுத்துவதும் தான் நடக்கும்.
எனவே இந்திய அரசம் இலங்கை அரசம் போட்டுள்ள ஒப்பந்தங்கள் ஒவ்வொரு தமிழரையும் சிங்கள இராணுவக் கண்காணிப்பின் கீழ்வைத்து, உரிமைக்குக் குரல் கொடுப்போரை நசுக்கவே பயன்படும்.
இந்த ஒப்பந்தங்களை நீக்க வலியுறுத்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் 18.06.2010 வௌ்ளிக்கிழமை தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.