பக்கங்கள்

12 ஜூன் 2010

விழுப்புரம் புகையிரதப் பாதை குண்டுவைத்து தகர்ப்பு,ப.சிதம்பரம்தான் இலக்கா?


தமிழ்நாட்டின் விழுப்புரத்தில் ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.

விழுப்புரம் பொலிஸ் டி.ஐ.ஜி. மாசானமுத்து, ரயில்வே பொலிஸ் டி.ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், மாவட்ட பொலிஸ் சூப்பிரண்ட் பகலவன் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் பிரிவினரும் அங்கு சென்றனர்.

பொலிஸ் அதிகாரிகள் ஆய்வு செய்த போது, சக்தி வாய்ந்த குண்டு வைத்து ரயில் தண்ட வாளம் தகர்க்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

ரயில் தண்டவாளம் சுமார் 3 1/2 அடி நீளத்துக்குத் துண்டாகி தூள், தூளாக சிதறி இருந்தது. குண்டு வெடித்த வேகத்தில் அந்த பகுதி மின் இணைப்பு கம்பிகளும் சேதமடைந்தன. தண்டவாளம் சேதமடைந்திருந்த இடத்தில் 3 அடி ஆழத்துக்குப் பள்ளமும் ஏற்பட்டிருந்தது.

நாசவேலைக்குப் பயன்படுத்திய குண்டு சக்தி வாய்ந்த வெடி பொருட்களால் தயாரிக்கப்பட்டிருந்தது. டி.என்.டி. வெடி பொருள் கலவையால் குண்டு தயாரிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த வெடி குண்டு இயக்கப்பட்ட விதம் குறித்து பொலிசார் ஆய்வு செய்தனர்.

அப்போது மின் இணைப்பு கொடுத்து குண்டு வெடிக்க வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் வயல் உள்ளது. அந்த வயலில் விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்ச உதவும் மோட்டர் உள்ளது.

அந்த மின் மோட்டரில் இருந்து மின் இணைப்பைப் பெற்று, மர்ம மனிதர்கள் குண்டை வெடிக்க வைத்துள்ளனர்.

சென்னையில் இருந்து சென்ற தென்னக ரெயில்வே குழு தண்டவாளத்தை சீரமைத்தது. இதையடுத்து சுமார் 6 மணி நேரம் கழித்து அந்த வழித்தடத்தில் மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

சிதம்பரத்துக்கு வைக்கப்பட்ட குறியா?

மத்திய மந்திரி ப.சிதம்பரம் காரைக்குடியில் இன்று மாலையில் அம்பேத்கார் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

இதற்காக சென்னை எழும்பூரில் இருந்து நேற்று இரவு 10.30 மணிக்கு புறப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி செல்ல திட்டமிட்டு இருந்தார்.

அவரது பாதுகாப்புக்காக இரவு 9.30 மணிக்கே கமாண்டோ படையினர் எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்து விட்டனர்.

ஆனால் டில்லியில் இருந்து ப.சிதம்பரம் வந்த விமானம் காலதாமதமாக இரவு 10.50 மணிக்குதான் சென்னை வந்தது. இதனால் ப.சிதம்பரம் மலைக்கோட்டை ரெயிலில் செல்ல முடியவில்லை. இரவில் நுங்கம்பாக்கம் வீட்டில் தங்கினார்.

ப.சிதம்பரம் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்த மலைக்கோட்டை ரெயிலும் இரவு 1.30 மணியளவில்தான் குண்டு வெடித்த இடத்தை கடந்து செல்லும். எனவே ப.சிதம்பரத்துக்கு குறிவைக்கப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.