பக்கங்கள்

06 ஜூன் 2010

ஜூன் எட்டில் ராஜபக்சவிற்கு எதிராக நாடெங்கும் தெருமுனை கூட்டங்கள்.-சீமான்.


செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:
ஈழத்தில் தமிழினத்தை கொன்றொழித்த சிங்கள அதிபர் வரும் 8 ஆம் தேதி இந்தியா வர இருக்கின்றார்,அவருக்கு இந்திய அரசு ரத்தினக் கம்பள வரவேற்பு அளிக்க இருக்கின்றது என்னும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றது.
ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கு அதிகமான தமிழர்களைக் கொன்றொழித்த,20 லட்சம் தமிழர்கள் இடப்பெயர்வுக்கு காரணமான,3 லட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் சிக்கித் தவிப்பதற்குக் காரணமான ஒரு நபர் எவ்வித விசாரணையும் இன்றி ராஜ மரியாதையுடன் இந்தியா வருகின்றார்.
உலகம் முழுவதும் அவர் மீது குற்றப்பட்டியல் வாசிக்கின்றது.அவர் மீது விசாரணை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்கின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் பிரிவின் தலைவராக இருக்கும் நவநீதம் பிள்ளை,''இலங்கை அரசின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். என வலியுறுத்தி இருக்கின்றார்.
சர்வதேச மனித உரிமை அமைப்புகளான 'ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்', 'ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்', போன்றவை இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றி பல்வேறு ஆதாரங்களுடன் கூடிய அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.ஐ.நா.பொதுச்செயலாளர் பான்.கி.மூன் மவுனம் சாதித்தாலும் தற்பொழுது இலங்கையில் நடைபெற்ற யுத்த அத்துமீறல்கள் குறித்து விசாரணை மன்றம் ஒன்றை உருவாக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.ஆனால் இதுவரை இந்தியா எந்த வித விசாரணையையும் கோர வில்லை.குறைந்த பட்சம் கண்டனத்தையும் தெரிவிக்க வில்லை.ஏனென்றால் போரை நடத்தியதே இந்தியா தான்.ஆகவே தமிழர்களைக்கொன்றொழித்த தனது நண்பருக்கு இந்தியா வரவேற்பு அளிக்கின்றது.உலகின் மிகப்பெரிய கொடுங்கோலர் ஒருவர் எவ்வித கேள்வியும் இன்றி உயரிய மரியாதையுடன் இந்தியா வருவதை நினைக்கும் பொழுது நாதியற்ற இனமா நம் தமிழினம் என்னும் குரல் உலகம் முழுவதும் நம் தமிழர்களிடையே எழுகின்றது. நாதியற்ற இனமல்ல நம் தமிழினம் என்பதை ஊருக்கும் உலகுக்கும் எடுத்துச்சொல்லவும் ராஜபக்‌ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வலியுறுத்தியும் வரும் 8 ஆம் தேதி தரணியெங்கும் வாழும் தமிழர்கள் நாம் தெருமுனைக்கூட்டங்களை நடத்துவோம்.ராஜபகஷேவின் இனப்படுகொலையை உலகுக்கு அம்பலப்படுத்துவோம்.ராஜபக்‌ஷேவை தண்டித்தே தீர சூளுரை ஏற்போம் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.