சிறீலங்கா அரசின் உதவியாளராக செயற்பட்டுவரும் செல்வராஜா பத்மநாதனின் ஏற்பாட்டின் அடிப்படையில் புலம்பெயர் நாடுகளில் இருந்து சென்று சிறீலங்கா அரசுக்கு தகவல்களை வழங்கி விருந்துண்டு வந்த குழுவினர் யார் என்பது தொடர்பில் பல விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சிறீலங்கா அரசுடன் செல்வராஜா பத்மநாதன் இணைந்து செயற்பட்டுவருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரின் ஏற்பாட்டின் அடிப்படையில் பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் சுவிற்சலாந்து ஆகிய நாடுகளில் இருந்து 9 பேர் அடங்கிய குழு ஒன்று சிறீலங்கா சென்று சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரீஸ் ஆகியோரை சந்தித்து வந்துள்ளனர்.
சிறீலங்கா சென்ற இந்த குழுவினர் யாழ் மற்றும் வன்னிப் பகுதிகளுக்கு சென்று அந்த மாவட்டங்களின் இராணுவ கட்டளை அதிகாரிகளையும் சந்தித்துள்ளதுடன், சிறிலங்கா அரசுக்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் கட்டமைப்புக்கள் தொடர்பான தகவல்களையும் வழங்கியுள்ளதாக பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
போர்க் குற்றவாளி என அனைத்துலக சமூகம் புறம்தள்ள முயற்சிக்கும் கோத்தபாயாவுடன் விருந்தில் கலந்துகொண்ட இந்த குழுவின் செயற்பாட்டின் பின்னனியில் யாழ் மற்றும் கொழும்பில் இருந்து செயற்படும் பல ஊடகங்களின் பங்களிப்புக்களும் இருக்கலாம் என்ற அச்சங்களும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.