நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
29 ஜூன் 2010
தமிழ் மக்களை தமது காலடியில் விழ வைப்பதே சிங்கள அரசின் நோக்கம்.
கே.பி என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனை சிறீலங்காவின் படைப் புலனாய்வாளர்களே இயக்கி வருவதாகவும், அவரூடாக புலம்பெயர் மக்களை தம்மிடம் மண்டியிட வைப்பதே சிறீலங்கா அரசின் நோக்கம் என, அண்மையில் கே.பியுடன் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கொட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து, பிரித்தானியா திரும்பியுள்ள மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் அம்பலப்படுத்தியுள்ளார்.
தனிப்பிட்ட முடிவில் கொழும்பு சென்று பிரித்தானிய திரும்பியுள்ள மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் தமிழ்நெட் இணையத்திற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே பல விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவென கே.பியின் ஏற்பாட்டில் கடந்த 15ஆம் நாள் முதல் 20ஆம் நாளுக்குள் 6 புலம்பெயர் நாடுகளிலிருந்து 9 பேர் கொழும்பு சென்றிருந்தனர். இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களிற்குச் சென்றதுடன், சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கொட்டாபய ராஜபக்ச, நீண்ட காலம் சிறீலங்கா படைப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருக்கும் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவித்தாரன, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரையும் சந்தித்திருந்தனர். கொட்டாபயவுடனான சந்திப்பின்போது அவர் உள்ளே வந்தபொழுது கே.பி அவரைக் கட்டித்தழுவ முற்பட்டதாகவும், அவரது இந்த நடவடிக்கை தமக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் கூறும் மருத்துவர் அருட்குமார், விடுதலைப் புலிகள் தடுத்து வைக்கப்பட்ட பிரிவு - 4 முகாமைப் பார்வையிட அனுமதி மறுத்த படையினர், பிரிவு இரண்டாவது முகாமிற்கு தம்மை அழைத்துச் சென்றதாகவும், அங்கும் படைப் புலனாய்வாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டவர்களே முன்னாள் போராளிகள் போன்று தம்மை சந்திக்க முற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆணவத்துடன் கொட்டாபய ராஜபக்ச தம்முடன் உரையாடியதாகக் கூறும் மருத்துவர் அருட்குமார், வரலாற்றைப் பற்றி யாரும் பேசக்கூடாது எனவும், அரசு செய்யும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு மட்டும் நல்க வேண்டும் என, அடிமை போன்று நடத்த முற்பட்டதாகவும், புலம்பெயர் மக்களின் பணத்தைப் பெற்றுக்கொள்வதிலேயே குறியாக இருந்ததாகவும் தெரிவித்தார். புலம்பெயர் மக்களை கே.பி ஊடாக உள்வாங்க முனைவது, அல்லது புலம்பெயர் தமிழ் மக்களை பிரிவுகளாக உடைத்து சின்னா பின்னமாக்கி மன்டியிட வைப்பது என்பதில் சிறீலங்கா அரசும், படைப் புலனாய்வாளர்களும் திட்டமிட்டிருப்பதை தமது சந்திப்புக்களில் உணர முடிந்ததாக கூறும் மருத்துவர் அருட்குமார், கே.பியை 2006ஆம் ஆண்டே தான் சந்தித்திருப்பதாக சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டினார். இலங்கையின் வளங்களை இந்தியா சுரண்டுவதாக இந்த சந்திப்புக்களில் குற்றம் சுமத்தியுள்ள சிறீலங்கா அரச தரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களை தரக்குறைவாகப் பேசியதாகவும், தமிழர் புனர்வாழ்வு மையம் (ரி.ஆர்.சி) என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி, அதனூடாக புலம்பெயர் மக்களின் நிதியைப் பெற்றுக்கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அருட்குமார் கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.