மட்டக்களப்பு பகுதியில் உள்ள வெலிக்கந்தை புனர்வாழ்வு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகளுக்கும் அங்குள்ள படையினருக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, கண் மண் தெரியாமல் சரமாரியாக இராணுவம் தாக்கியதில் முன் நாள் போராளி ஒருவர் மரணமடைந்துள்ளார். இச் செய்தியை நாம் ஏற்கனவே பிரசுரித்திருந்தோம். ஆனால் தற்போது இது குறித்து மேலதிகச் செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது.தடுப்பு முகாலில் உள்ள பல முன் நாள் போராளிகளை இராணுவம் இழிவாக நடத்திவருகிறது. போஷாக்கு குறைவான உணவுகளைக் கொடுப்பதோடு, ஒரு இளைஞருக்கு தேவையான அளவு உணவைக் கொடுக்காமல், அவர்களை அரைப் பட்டினி போட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்குகிறது இராணுவம். சாப்பாட்டில் அதிகமாக பூச்சி புழுக்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அருவருப்படையும் முன் நாள் போராளிகள் சில வேளை உணவு உண்பதை தவிர்க்கிறார்கள். சிங்கள சமையல் காரர்களைக் கொண்டு இந்த தடுப்பு முகாமில் உணவு சமைக்கப்படுவதாகவும், அவர்கள் அசுத்தமாகவும், அருவருக்கத் தக்க விதத்திலும் உணவை சமைப்பதாகவும் தெரியவருகிறது.இதனை இராணுவத்தினர் வேண்டும் என்றே செய்துவருகின்றனர். தமிழ் இளைஞர்களை போஷாக்கு குறைபாட்டாளர்களாக மாற்றவும், அவர்களை வெளியே விடும்போது இனி ஒரு போராட்டம் வெடிக்காமல் இருக்கவும், அல்லது முகாமில் இருந்து தப்பி ஓட சக்தியற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காகவுமே இராணுவத்தினர் இவ்வாறு செய்துவருவதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாறு பெரும் சித்திரவதைக்கும், பட்டினிக்கும், மன உளைச்சல்களுக்கும் என பல தரப்பட்ட பிரச்சனைகளை தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்கின்றனர். சமீபத்தில் கே.பி உட்பட 8 தமிழ் பிரமுகர்கள் தடுப்பு முகாமிற்குச் சென்றதாகவும் அங்கே அவர்கள் போராளிகளைச் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் போர் உக்கிரமடைந்த இறுதி கால கட்டத்தில் புலிகள் இயக்கத்தில் கடைசிநேரத்தில் இணைக்கப்பட்ட சில தமிழ் இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாமையே இவர்களுக்கு காட்டப்பட்டது. உண்மையான அல்லது பழைய போராளிகளைத் தடுத்துவைத்திருக்கும் இரகசிய முகாம்களை இதுவரை இராணுவம் யாருக்கும் காட்டியது இல்லை என்பதே உண்மையாகும்.உலகளாவிய ரீதியில் பல தமிழ் அமைப்புக்கள் இருந்தும் இவ் விடயத்தில் ஏன் எந்த அமைப்பும் தலையிடவில்லை? ஐ.சி.ஆர்.சி, மன்னிப்புச் சபை, மற்றும் ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புக்கள் முன் நாள் போராளிகளில் காட்டும் அக்கறையில் 100 ல் ஒரு பங்கையாவது தமிழ் அமைப்புகள் காட்டாதது ஏன்? விடுதலைக்காகப் போராடிய அமைப்பை தற்போது சர்வதேசம் ஒரு பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தியுள்ளது, அதற்காக அவ் அமைப்பில் உள்ளவர்கள் மனிதர்கள் இல்லை என்றாகிவிடுமா, அவர்கள் என்ன மிருகங்களா? அவர்களுக்கு மனித உரிமைகள் இல்லையா? இவ் விடயத்தில் தமிழ் அமைப்புகள் தலையிட ஏன் பின்னடிக்கின்றன. தேர்தல்கள் நடைபெறுகின்றது, பல புது அமைப்புகள் உருவாகின்றன, ஆனால் இவ் விடயம் குறித்து எவரும் பேச தயார் இல்லை. காரணம் தம் நிலையை தக்கவைக்கவே ஒவ்வொரு அமைப்பும் முனைகிறது.நீளமான நாக்குளி புழுவை, சோற்றில் புதைத்து வைத்துவிட்டு பின்னர் , போராளிகள் சாப்பிடும் வேளை அதனை எடுத்துக் காட்டி, """இது தான் தமிழீழ உணவு""" என்று சிங்கள இனவெறி இராணுவ சிப்பாய் கூறுகிறான், இப்படியான ஒரு கேவலமான நிலையில் எம் தமிழ் இளைஞர்கள் உள்ளனர். விடுதலைப் புலிகள் கைதுசெய்து வைத்திருந்த இராணுவ சிப்பாய்களை புலிகள் எவ்வாறு நடத்தினர் என்பதை அவர்கள் வாயிலாகவே நாம் அறிந்திருக்கிறோம் ஆனால் இன்றைய நிலை என்ன, உணர்வாளர்களே சற்று யோசியுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.