உலகெங்கும் உள்ள தமிழர்களின் தொடர் கோரிக்கைகள், போராட்டங்களுக்கு மதிப்பளித்து கொழும்பு நகரில் இன்று தொடங்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்வதில்லை என்று இந்தித் திரையுலகின் அனைத்து சூப்பர் ஸ்டார் நடிகர்களும், நடிகைகளும் முடிவு செய்துள்ளதால், கொழும்புப் பட விழா களையிழந்துள்ளது.
கொழும்பில் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு இஃபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட வட இந்திய திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நாம் தமிழர் இயக்கம் களத்தில் இறங்கியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து இரத்தக்கறையுடன் உள்ள ராஜபக்ச அரசு, தனது சுய லாபத்துக்காக இந்த விழாவை கொழும்பில் நடத்த அனுமதி கொடுத்துள்ளது. எனவே இதில் இந்திய திரையுலகினர் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரி போராட்டத்தில் குதித்தது நாம் தமிழர் இயக்கம்.மும்பையில் நூற்றுக்கணக்கான தமிழர்களைத் திரட்டி அமிதாப் பச்சன் வீட்டின் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதேபோல உலகெங்கும் உள்ள பல்வேறு தமிழர் அமைப்புகளும் பாலிவுட்டினர் இதில் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரி மெயில்களை அனுப்பிக் குவித்தனர். தமிழகத்திலும் திரையுலகினர் யாரும் இதில் பங்கேற்கக்கூடாது என்ற கோரிக்கை வலுத்தது.
இதையடுத்து தமிழ்த் திரையுலகினர் மொத்தமாக, இதில் நாங்கள் யாரும் பங்கேற்க மாட்டோம், யாரும் பங்கேற்கவும் கூடாது. மீறி பங்கேற்றால் அவர்களது படங்கள் எதுவும் தென்னிந்தியாவில் திரையிடப் பட மாட்டாது என்று பகிரங்கமாக அறிவித்தனர்.
இதற்கு முன்பாகவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் உள்ளிட்ட தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார்கள் அனைவரும் பங்கேற்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். தங்களுக்கு அனுப்பப்பட்ட விழா அழைப்பிதழைப் பெறக் கூட இவர்கள் மறுத்து விட்டனர்.
இதேபோல தமிழர்கள் எங்களுக்கு முக்கியம் என்று கூறி மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, மோகன்லால், தெலுங்கு சூப்பர் ஸ்டார் வெங்கடேஷ், கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் ஆகியோரும் அறிவித்து விட்டனர்.
தொடர் எதிர்ப்பால் உந்தப்பட்ட அமிதாப் பச்சன் தனது குடும்பத்தினர் யாரும் கொழும்பு செல்ல மாட்டார்கள் என்று கூறி விட்டார்.
தற்போதைய நிலவரப்படி அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான், ஆமிர் கான், காத்ரீனா கைப், தீபிகா படுகோன், ரன்பீர் கபூர், இம்ரான் கான் ஆகியோர் கொழும்பு பட விழாவுக்குச் செல்ல மாட்டார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
விவேக் ஓபராய், லாரா தத்தா ஆகியோர் உள்ளிட்ட ஒரு சில 2ம் நிலை நடிகர், நடிகையர் மட்டுமே இந்த விழாவுக்கு போயுள்ளனர்.
மொத்த சூப்பர் ஸ்டார்களும் விழாவுக்குப் போகாததால் கொழும்புப் பட விழா களையிழந்துள்ளது. இலங்கை அரசும் பெரும் தர்மசங்கடத்தில் மூழ்கியுள்ளது. என்ன கொடுமை என்றால், அமிதாப் பச்சன் வருகிறார், ஐஸ்வர்யா ராய் வருகிறார், ஷாருக் கான் வருகிறார் என்று கூறி வீதி வீதியாக போய் கூவாத குறையாக டிக்கெட்களை விற்றுள்ளனர். இதனால் பெரும் விலையாக இருந்தாலும் கூட டிக்கெட்களை கொழும்புக்காரர்கள் பெருமளவில் வாங்கியுள்ளனர். அனைவருக்கும் தற்போது பெரும் ஏமாற்றமாகியுள்ளதாம்.
தமிழ்நாட்டிலிருந்து எழுந்து சிறிய அளவிலான எதிர்ப்பு உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் பரவி, இந்தியாவின் முக்கிய திரையுலகமான பாலிவுட்டைப் புரட்டி முடக்கிப் போட்டிருப்பதைப் பார்த்து இலங்கை அரசும் அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.
ஆனால் கொழும்பு பட விழாவுக்குப் போனால், தமிழகத்தில் மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களை முழுமையாக பகைத்துக் கொள்ள நேரிடும். அது தங்களது பிசினஸுக்கு பெரும் அடியாக அமையும் என கருதியதால்தான் பாலிவுட் நடிகர், நடிகையர் கொழும்பு விழாவுக்குப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.