பக்கங்கள்

27 செப்டம்பர் 2012

காணி சுவீகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

வட பகுதியில் தமிழர்களின் காணிகளை இராணுவத் தேவைக்காக சுவீகரிப்பதை கைவிடக்கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதன்போது, காணாமல் போனோரை மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், இரணைத்தீவு, மருதநகர், பரவிப்பாஞ்சான் ஆகிய இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பினர். அத்துடன் பரவிப்பாஞ்சானில் வாழவிடு, எங்கள் கிராமங்களில் வாழவிடு, எமது கிராமங்களில் இருந்து இராணுவமே வெளியேறு, காணாமல்போனோர் தொடர்பில் பதில்சொல் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கிய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், காணாமல் போனோரின் உறவினர்கள், மீள்குடியேற்றப்பட்டாத கிராம மக்கள் மற்றும் பொதுமக்களுடன் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சி.சிறிதரன், வினோ நோகதாரலிங்கம் ஆகியோரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் மனோ கணேசன் மற்றும் அக்கட்சியின் ஊடக செயலாளர் பாஸ்கரா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரன் வவுனியா நகரசபையின் உபதலைவர் எம்.எம்.ரதன், பாண்டியன்குளம் பிரதேச சபையின் உபதலைவர் எஸ்.செந்தூரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு வழங்குவதற்கான மகஜரொன்றினையும் மீள்குடியேற்றப்பட்டாத கிராம மக்களின் சார்பில் சிலர் கிளிநொச்சி ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய உத்தியோகஸ்தர்களிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.