சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் நிர்க்கதியாகி உள்ள கேப்பாபிலவு மக்கள் குறித்து உடன் கவனம் செலுத்தி அவர்களுக்கான தீர்வை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்தை கேட்டுள்ளது.
'மனிக் பாம்' முகாம் மூடப்பட்டமையானது இலங்கை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கணிக்கப்படுகிறது. எனினும், இன்னும் பலர் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்லமுடியாத நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கான உடனடித் தீர்வொன்று கண்டுபிடிக்கப்படவேண்டும் என்றும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான 'மனிக்பாம்' முகாமை மூடியதை வரவேற்கும் ஐக்கிய நாடுகள் சபை, யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களைப்பற்றிய அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான மனிதாபிமான இணைப்பாளர் சுபினாய் நந்தி, வன்னியில் இடம்பெயர்ந்தவர்களில் 346 பேர் இன்னும் தங்களது சொந்த இடங்களான கேப்பாபிலவு, மந்துவில் ஆகிய பகுதிகளில் செல்லமுடியாத நிலையில் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
'இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், 'மனிக் பாம்' முகாம் மூடப்பட்டமையானது இலங்கை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கணிக்கப்படுகிறது. எனினும், இன்னும் பலர் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்லமுடியாத நிர்க்கதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதற்கான உடனடித் தீர்வொன்று கண்டுபிடிக்கப்படவேண்டும்'' என அவர் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'மனிக் பாம்' முகாமிலிருந்து வடபகுதியின் முல்லைத்தீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த 346 பேர் (110 குடும்பங்கள்) வெளியேறியுள்ள போதிலும், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அவர்களது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லமுடியாத நிலையில் உள்ளனர்.
அதற்குப் பதிலாக அவர்கள் அரச காணிகளில் குடியேற்றப்பட்டுள்ளனர். தங்களது சொந்த இடங்களுக்குச் செல்லமுடியுமா அல்லது அவ்வாறு செல்லமுடியாத பட்சத்தில் தங்களுக்கு உரிய நட்டஈடுகள் கிடைக்குமா என்ற அங்கலாய்ப்புடன் உள்ள அவர்களுக்கு எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாகியுள்ளது.
யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்காகக் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ள தீர்வுகளை இலங்கை அரசு வழங்கவேண்டும் என நந்தி மேலும் தெரிவித்தார்.
'இடம்பெயர்ந்த மக்கள் இலங்கையில் எந்தப் பாகத்திலும் குடியேற அனுமதிக்கப்படலாம். எனினும், தங்கள் சொந்த இடங்களைவிட்டு வேறு இடங்களில் குடியேற்றப்படுபவர்களுக்கு அவர்கள் குடியேறும் காணிகளின் சட்டபூர்வமான உரித்துடைமை வழங்கப்படவேண்டும் என்பதே நல்லிணக்க செயற்பாட்டின் பிரதான அம்சமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.