வேலணை வைரவர் கோயிலடிப் பகுதியில் நேற்றையதினம் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு மனித மண்டையோடுகள் மீட்கப்பட்டன. கயிற்றால் கல்லுடன் கட்டப்பட்டு, கிணற்றுக்குள் வீசி படுகொலை செய்யப்பட்டவர்களுடைய எச்சங்களாக இவை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த கோயிலடிப் பகுதியிலுள்ள கிணற்றினை துப்பரவு செய்ய முயன்ற சமயம் மேற்படி மண்டையோடு ஒன்று இருப்பதை பொது மக்கள் அவதானித்துள்ளனர். இதுகுறித்து கிராம சேவகர் ஊடாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. இதன் பின்னர் நேற்று மதியம் குறித்த கிணற்றிலிருந்து மண்டை ஓட்டை மீட்க முயன்ற சமயம் இன்னொரு மண்டையோடும் மனித எச்சங்களும் கிணற்றுக்குள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
அதன்பின்னர் இரண்டு மனித மண்டையோடுகளும் ஏனைய எலும்புத் துண்டங்களும் கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. ஒரு மண்டையோடு ஆணுடையது என்றும் மற்றையது பெண்ணுடையது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இரு மனித எச்சங்களும் ஒரு வருடத்துக்கும் குறைவான காலப் பகுதியிலேயே கிணற்றினுள் போடப்பட்டிருக்க வேண்டும் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் மனித எச்சங்களாக மீட்கப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்று நம்பப்படும் தொப்பி மற்றும் ஆடைகளும் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மீட்கப்பட்ட மண்டையோடுகள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.