பக்கங்கள்

06 செப்டம்பர் 2012

இந்தியா கட்டிக்கொடுத்த வீடுகளில் வெடிப்புக்கள்,மக்கள் அச்சம்!

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய்ப் பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள உயிலங்குளத்தில் மாதிரிக் கிராமமாகத் தெரிவு செய்யப்பட்ட 50 இந்தியன் வீட்டுத் திட்டப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட வீடுகளின் சுவர்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையிலுள்ளதாகப் பயனாளிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த வீடுகள் புதிதாகக் கட்டப்பட்டுச் சில மாதங்களேயான நிலையில் அத்திபாரம் நிலத்தின் கீழ் இறங்குவதால் வெடிப்புக்கள் தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வீடுகளில் உரிமையாளர்கள் பீதியுடன் பொழுதைக் கழிப்பதைக் காண முடிகின்றது. மேலும் ஓசையெழுப்பியவாறு வீட்டுச் சுவர்களில் வெடிப்புக்கள் தோன்றுவதால் வீடு இடிந்து விழுந்து விடுமோவென்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது. மேலும் மின்சார வசதியும் இங்கு வழங்கப்படவில்லை. காட்டுப் பகுதியை அண்டிய இடத்தில் இந்த வீட்டுத் திட்டம் அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் பெரும் பயப் பீதியுடன் மக்கள் பொழுதைக் கழிக்கின்றனர். அதேசமயம் கடும் வறட்சி காரணமாகத் தண்ணீருக்குப் பெரும் தட்டுப்பாடு இங்கு நிலவி வருகின்றது. தற்போது துணுக்காய்ப் பிரதேச சபையால் பவுசர் மூலமாகக் குடிதண்ணீர் விநியோகிக்கப்படுவதால் ஓரளவு ஆறுதல் ஏற்பட்டுள்ளது. இங்கிருந்து சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள தென்னியன் குளத்திலேயே கிராம மக்கள் தமது குடிதண்ணீர் தவிர்ந்த ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தனர். ஆனால் அந்தக் குளமும் வறண்ட நிலையில் காணப்படுவதால் இவர்களின் நிலை மோசமாக மாறியுள்ளது. போக்குவரத்து வசதிகள் சீரான முறையில் அமையாததால் அதிலும் சிரமங்கள் தான் இந்த மக்களுக்கு ஏற்படுகின்றன. இவ்வாறு எல்லா வகையிலும் துன்பத்தையே எதிர்கொண்டு வரும் இந்த மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது உரியவர்களின் முக்கிய கடமையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.