புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் நற்பெயரைப் பெறும் நோக்குடனே தென்னிந்திய பாடகர் உன்னி கிருஷ்ணன் மன்னிப்பு கோரியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று காலை யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளுக்கான விருந்தில் கலந்துகொண்ட சமயம் ஊடகவியலாளர்கள் மத்தியில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.
உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்ட நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இந்தியதுணைத் தூதரகம் மற்றும் வடக்கு மாகாண சபையின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பன அழைப்பு விடுத்தமையாலே தான் அந்த நிகழ்வில் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர்,
புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களிடம் தனது பிழைப்பை நடத்துவதற்காகவும் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்காகவுமே உன்னி கிருஷ்ணன் இவ்வாறு தனக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து உலகத் தமிழர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார் எனத் தெரிவித்தார்.
நல்லூர் கந்தன் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உன்னி கிருஷ்ணனை வாழ்த்தி சால்வை அணிவித்தார். இந்த சம்பவம் தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலும், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்றும், இந்த சம்பவத்திற்காக உலகத் தமிழ் மக்களிடம் தான் மன்னிப்பு கோருவதாகவும் தமிழகத்திலிருந்து வெளியாகும் இதழ் ஒன்றுக்கு உன்னி கிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
அத்துடன் டக்ளஸ் பொன்னாடை போர்த்தியமையானது என் இசை பயணத்தில் கரும்புள்ளியாகும் எனவும் உன்னி கிருஷ்ணன் குறிப்பிட்டிருந்தார்.
உன்னி கிருஷ்ணனின் இக் கூற்று தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எரிச்சலையும் மனக் கசப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.