பக்கங்கள்

18 செப்டம்பர் 2012

சலுகைகளுக்காக மு.கா.அரசிடம் சோரம்போகக்கூடாது",-அஷாத் சாலி

சலுகைகளுக்காக அரசாங்கத்திடம் SLMC சோரம் போகுமானால்  கிழக்கில் போராட்டம் வெடிக்கும் - அஸாத் சாலிமுஸ்லிம் மக்கள் தமக்கு வழங்கிய ஆணையை எட்டி உதைத்து விட்டு, சலுகைகளுக்காக அரசாங்கத்திடம் முஸ்லிம் காங்கிரஸ் சோரம் போகுமானால் அக்கட்சிக்கு எதிராகக் கிழக்கில் போராட்டம் வெடிக்கும் என கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மு.காவின் பட்டியலில் போட்டியிட்ட அஸாத் சாலி எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், அமையவுள்ள வடக்கு மாகாணத்தில் வெல்லும்போது கூட்டமைப்புக்குக் கிடைக்கும் போனஸ் ஆசனமொன்றை முஸ்லிம் காங்கிரசுக்குத் தருவதாக உறுதியளித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்க வேண்டும் என்றும், இதுவே முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பு எனவும் அஸாத் சாலி கூறியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழும் முஸ்லிம் காங்கிரஸ் எந்தத் தரப்புக்குத் தனது ஆதரவை நல்கவேண்டும் என்பது குறித்து கருத்து வெளியிடும் போதே அஸாத் ஸாலி மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளாhர். அரசுக்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் முகமாகவே கிழக்குத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸூக்கு அங்கு வாழும் முஸ்லிம் மக்கள் ஆணையை வழங்கினர். மு.காவுக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகள் அரசுக்கு எதிரான வாக்குகளாகும். எனவே, மக்கள் ஆணையைப் புறந்தள்ளிவிட்டு அக்கட்சி எந்தவொரு முடிவையும் எடுக்கக்கூடாது. இந்தக் கோட்பாட்டுக்குப் புறம்பாக, சலுகைகளுக்காக அரசிடம் மு.கா. சோரம்போகுமானால் அது தமிழ் பேசும் மக்களைக் காட்டிக்கொடுக்கும் செயலாகும். எனவே, முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் மு.கா. அரசை ஆதரிக்குமானால் அக்கட்சிக்கு எதிராகக் கிழக்கில் போராட்டம் வெடிக்கும். மூன்று மாவட்டங்களிலும் மக்கள் மு.காவுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவர். அரசுக்கு எதிராகத் தேர்தல் காலத்தில் பிரசாரம் செய்த ஹக்கீமுக்கு அரசுக்கு ஆதரவை வழங்குவதற்கு எந்தவொரு அதிகாரமுமில்லை என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன். குறிப்பாக, முதல்வர் பதவி உட்பட மாகாண அமைச்சுகளை வழங்குவதற்கு முன்வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கில் மு.கா. கூட்டாட்சியொன்றை ஏற்படுத்தவேண்டும். வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் போது, அதில் போட்டியிட்டு மு.கா. தோல்வியடைந்தாலும் தாம் பெறும் போனஸ் ஆசனத்தைத் தருவதாக மு.காவிடம் கூட்டமைப்பு உறுதியளித்துள்ளது. எனவே, கூட்டமைப்புடன்தான் மு.கா. இணையவேண்டும். இதுவே முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பாகும் என அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.