|
மாலக சில்வா |
மிருகபலி இடம்பெறுகிறதா என்பதை கண்டறிய நாடு முழுக்க உள்ள இந்து கோவில்கள் தோறும் தான் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாக பொதுஜன உறவுதுறை அமைச்சர் மேர்வின் சில்வா அறிவித்துள்ளார். இவருக்கு யார் இந்த அதிகாரங்களை கொடுத்தது என்பதையும், இவரது அமைச்சுக்கு இந்து கோவில்களை விசாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும், அரசாங்கத்தில் உள்ள தமிழ் இந்து அமைச்சர்களான டக்லஸ் தேவானந்தாவும், ஆறுமுகன் தொண்டமானும் ஜனாதிபதியிடம் கேட்டு தமிழ் மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
மேர்வின் சில்வாவின் மகன், கடந்த வாரம் ஒரு இராணுவ மேஜரை தாக்கி காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிசாரால் தற்சமயம் தேடப்படுகிறார். நாட்டில் உள்ள கோவில்களை விசாரிப்பதற்கு முன்னர் இந்த அமைச்சர், பொலிஸ் விசாரணைக்கு தேடப்படும் சந்தேகநபரான தனது மகனை போலீசில் ஒப்படைத்து நாட்டில் சட்டம், ஒழுங்கு நிலை பெற ஒத்துழைக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
மிருகபலி தொடர்பில் இந்து ஆலயங்களில் விசாரணை நடத்தப்போகின்றேன் என்ற அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதிய அறிவிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
நம்நாட்டில் இந்து மத நிறுவனங்களும், மத தலைவர்களும் அரசியலில் தலையிடுவதில்லை. ஏனைய மூன்று மத தலைவர்களும் அரசியலில் பங்கு வகிக்கிறார்கள். ஊருக்கு இளைத்தவன் ஆண்டி என்பதை போல், இந்து மத தலைவர்களின் அரசியல் ஈடுபாடு இன்மை என்ற காரணத்தாலோ, என்னவோ மேர்வின் சில்வா இந்து மத விவகாரங்களில் தொடர்ந்து வரம்பு மீறி தலையிட்டு வருகிறார். இப்போது, இந்து மத ஆலயங்கள் தொடர்பில் தான் பொலிஸ்காரன் வேலை செய்ய போவதாக அவரது அறிவிப்பு புதிதாக வந்துள்ளது.
நாட்டில் தலைபோகிற விடயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. மிருகபலியைவிட, மனிதபலி நடக்கிறது. தினசரி படுகொலைகள் நடந்தேறுகின்றன. இவற்றிற்கு எதிராக, ஒரு அஹிம்சா இயக்கத்தை இவர் ஆரம்பித்து நடத்தலாம். கடந்தமுறை முன்னேஸ்வரத்தில் மிருகபலியை நிறுத்துகிறேன் என்று சொல்லி இவர் கொண்டு போன ஆடுகளுக்கும், கோழிகளுக்கும் இவர் இன்னமும் கணக்கு காட்டவில்லை என முன்னேஸ்வரம் மக்கள் சொல்கிறார்கள்.
அகில இலங்கை இந்து மாமன்றம், மிருகபலி மற்றும் மத விவகாரங்களில் அரசியல்வாதிகளை தலையிடவேண்டாம் என்று சொல்லி அறிக்கை விடுகிறது. அவர்கள் சொல்வது எங்களையா அல்லது மேர்வின் சில்வாவையா என எனக்கு தெரியவில்லை. எனக்கு மத விவகாரங்களில் தலையிடும் நோக்கம் கிடையாது. இந்த அமைச்சரின் அறிவிப்புகளால் கவலை அடைந்துள்ள பல கோவில் அறங்காவலர்கள் தமது அதிருப்திகளை என்னிடம் தெரிவித்துள்ளார்கள். மலையகத்திலும், கிழக்கிலும், வடக்கிலும் கோவில்களில் மிருகபலியிடும் முறைமை இருக்கிறது. நாளை, தாங்கள் அமைச்சர் அனுப்பிய விசாரணை அதிகாரிகள் என்று சொல்லி கோஷ்டிகள் கோவில்களுக்குள் வந்து மிரட்டி கப்பம் கேட்கலாம்.
எனவே இந்து மத நிறுவனங்கள் இந்த விவகாரம் மேலும் வளரும் முன்னர் தலையிட வேண்டும். மத விவகார அமைச்சிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தி இதற்கு முடிவு காண வேண்டும்.
அரசில் உள்ள இந்து கபினட் அமைச்சர்கள், மந்திரிசபை அமர்வின்போது ஜனாதிபதியிடம் தீர்க்கமாக, மேர்வின் சில்வாவின் நடவடிக்கைகள் தொடர்பாக கேள்வி எழுப்ப வேண்டும். இஸ்லாமிய பள்ளிகள் தொடர்பில் எந்த ஒரு முஸ்லிம் அமைச்சரும் தன்னிடம் எடுத்து முறையிடவில்லை என ஜனாதிபதி சமீபத்தில் சொன்னார். அதுபோல் என்றாவது ஒருநாள் ஜனாதிபதி, தனது இந்து அமைச்சர்களும், தன்னிடம் எதுவும் கேட்காமல், அமைச்சரவையில் எலிகள் மாதிரி அமைதியாக இருக்கிறார்கள் என்றும் சொல்லிவிடுவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.