கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவுகள் இன்று காலை 7 மணிமுதல் ஆரம்பமாகியுள்ளது.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இங்கு இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. அத்துடன் வடமத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளுக்கும் இன்று நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் 108 உறுப்பினர் தெரிவிற்காக 3,073 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.
மூன்று மாகாண சபைகளுக்கு தேர்தல் நடைபெற்றாலும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்தே சர்வதேசநாடுகள் உட்பட அனைவரினதும் கவனமும் திரும்பியுள்ளது. இதனால் கிழக்குத் தேர்தல் ஒரு ஜனநாயகச் சமராக மாறியுள்ளது.
2011 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பின் பிரகாரம் இன்று நடைபெறுகின்ற தேர்தலில் 33 இலட்சத்து 36 ஆயிரத்து 417 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர் எனப் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் தெரிவித்தார்.
மூன்று மாகாணங்களிலும் 3 ஆயிரத்து 247 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்களிப்பு இடம்பெறுகின்றது. வாக்குகளை எண்ணுவதற்காக 236 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
3 மாகாணங்களில் 37 தொகு திகள்தொகுதிகளில் நடைபெறுகின்ற தேர்தலின் முடிவுகள் அந்தந்த தொகுதிவாரியாக அறிவிக்கப்படும். தேர்தலில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படக்கூடாது என்பதற்காக 21 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், தேர்தலைக் கண்காணிப்பதற்காக 4 ஆயிரத்திற்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படடுள்ளனர். இன்று காலை 7 மணிக்கு அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல, இரத்தினபுரி, கேகாலை ஆகிய ஏழு மாவட்டங்களிலுமுள்ள 37 தேர்தல் தொகுதிகளிலும் வாக்கெடுப்பு ஆரம்பமாகிறது.
வாக்காளர்கள் தேசிய அடையாள அட்டை உட்பட ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து அடையாள அட்டைகளையும் வாக்களிப்பதற்காகப் பயன்படுத்தலாம். தேர்தல் நடைபெறும் மாவட் டங்களின் தேர்தல் அலுவலகங்களிலிருந்து வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் பூரண பாதுகாப்புடன் நேற்று எடுத்துச்செல்லப்பட்டது.
தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தே\ப்பரியவினால் 175 மேலதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்திற்கு 25 அதிகாரிகள் வீதம் இவர்கள் மேற்பார்வை நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.
தேர்தல் கடமைகளுக்கென நியமிக்கப்பட்ட மேலதிகாரிகளும் அரச ஊழியர்களும் நேற்றுமுதல் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் வாக்குச் சாவடிகளில் அறிக்கையிடலை ஆரம்பித்துள்ளனர்.
4 ஆயிரத்துக்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள்
மூன்று மாகாண சபைக்குமுரிய தேர்தலை கண்காணிப்பதற்கென இம்முறை சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக கண்காணிப்பு வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தேர்தல்கள் திணைக்களத்தினால் 400 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பஃவ்ரல், கஃபே ஆகிய கண்காணிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல தனியார் கண்காணிப்பு நிறுவனங்கள் நீதியானதும் அமைதியானதுமான முறையில் தேர்தலை நடத்தும் பொருட்டு மிகுந்த ஆர்வத்துடன் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
பாதுகாப்புப் பணியில் 21 ஆயிரம் பொலிஸார்
நேற்றுமுன்தினம் முதல் 21 ஆயிரம் பொலிஸார் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர் என தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.
மூன்று மாகாணத்திலும் 108 பொலிஸ் நிலையங்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளன. வாக்குச்சாவடியொன்றுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸார் மூவர் வீதம் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடமையிலீடுபடுத்தப்படும் 21 ஆயிரம் பொலிஸாருள் 123 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும், ஆயிரத்து 400 பொலிஸ் இன்ஸ்பெக்டர்களும் அடங்குகின்றனர். இவர்களுள் 70 பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் வாக்குச் சாவடிகளில் மாத்திரமன்றி அதற்கு வெளியிலும் விசேட பாதுகாப்பு சேவைகளை முன்னெடுக்கின்றனர். நான்கு வாக்குச் வாடிகளுக்கு ஒரு பொலிஸ் நடமாடும் சேவையும் செயற்படுகின்றது. இவ்விசேட பொலிஸ் பாதுகாப்பு சேவை நாளைவரை தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் அமுலில் இருக்குமெனவும் அவர் சுட்டிக்காடடினார்.
மூன்று மாகாணத்திலும் இதுவரை அமைதியான சூழலே காணப்படுகின்றது எனத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், கிழக்கு மாகாணத்தில் ஓரளவு பதற்றம் காணப்பட்ட போதிலும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும், பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கென விசேட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.
நடத்தப்படவிருக்கும் தேர்தலில் அநீதி ஏற்படாமையை உறுதிப்படுத்தும் முகமாக கிழக்கு, வடமத்திய மாகாணங்களுக்கென தேர்தல்கள் திணைக்களத்திலிருந்து விசேட அதிகாரிகளடங்கிய குழுவொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீதியானதும் அமைதியானதுமான முறையில் நாளைய தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற வகையிலான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் திணைக்களம் முன்னெடுத்து வந்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் முடிவடைந்ததும் தபால் மூல வாக்களிப்பின் முதலாவது பெறுபேற்றினை இன்று நள்ளிரவு 12 மணியளவிலும் முழுமையான வாக்களிப்பினது முதலாவது பெறுபேற்றினை நாளை காலை 2 மணியளவிலும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என பிரதி ஆணையாளர் மொஹமட் தெரிவித்தார்.
236 வாக்கு எண்ணும் நிலையங்கள்
236 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு பவ்ரல், கபே ஆகிய கண்காணிப்பு நிறுவனங்களின் கண்காணிப்பாளர்களுக்கு, கண்காணிப்பில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் 26 நிலையங்களிலும்அம்பாறையில் 29 நிலையங்களிலும் திருகோணமலையில் 19 நிலையங்களுமாக கிழக்கு மாகாணத்தில் 74 வாக்கு எண்ணும் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அநுராதபுரத்தில் 42 நிலையங்களிலும் பொலன்னறுவையில் 23 நிலையங்களிலுமாக வடமத்திய மாகாணத்தில் 65 நிலையங்களிலும்,கேகாலையில் 47 நிலையங்களிலும் இரத்தினபுரியில் 50 நிலையங்களிலுமாக சப்ரகமுவ மாகாணத்தில் 97 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 1162 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்தப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் 414 வாக்குச் சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. இம் மாவட்டத்தில் 11 உறுப்பினர்களை தெரிவிற்காக 14 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 3 இலட்சத்து 47 ஆயிரத்து 99 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளில் 463 வாக்குச்சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. 14 உறுப்பினர்கள் தெரிவிற்காக 17 பேர் போட்டியிடுகின்றனர். இம் மாவட்டத்தில் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 287 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் சேருவில, திருகோணமலை, மூதூர் ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளில் 285 வாக்குச்சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. இம் மாவட்டத்தில் 10 பேர் தெரிவு செய்வதற்காக 13 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 2 இலட்சத்து 45 ஆயிரத்து 363 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்க ளிலும் 1189 வாக்குச் சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெறுகின்றது இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலிய கொட, இரத்தினபுரி, பெல்மதுள்ள, பலாங்கொடை, இறக்குவானை, நிவித்தி கலை, கலவானை, கொலன்ன ஆகிய எட்டு தேர்தல் தொகுதிகளிலுமுள்ள 623 வாக்குச்சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெறுகின்றது இம் மாவட்டத்தில் 24 பேர் தெரிவிற்காக 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அத்துடன், 7 இலட்சத்து 69 ஆயிரத்து 814 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் தெதிகம, கலிகமுவ, கேகாலை, இறம்புக்கனை, மாவனல்லை, அரநாயக்க, எட்டியாந் தோட்டை, ருவன்வெல்ல, தெரணியகலை ஆகிய ஒன்பது தேர்தல் தொகுதிகளிலும் 566 வாக்குச்சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெறுகின்றது.
இம் மாவட்டத்தில் 18 பேர் தெரிவிற்காற்காக 21 பேர் போட்டியிடுகின்றனர். 6 இலட்சத்து 31 ஆயிரத்து 981 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் 895 வாக்குச் சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெறுகின்றது.
அநுராதபுரம் மாவட்டத்தில் மதவாச்சி, ஹொரவப்பொத்தானை, அனுராதபுரம் கிழக்கு, அநுராதபுரம் மேற்கு, கலாவௌ, மிஹிந்தலை ஆகிய ஆறு தேர்தல் தொகுதிகளிலும் 608 வாக்குச்சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெறுகின்றது.
இம் மாவட்டத்தில் 21 பேரை தெரிவு செய்வதற்கென 24 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 6 இலட்சத்து 6 ஆயிரத்து 508 பேர்வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். பொலனறுவை மாவட்டத்தில் மின்னேரியா, மெதிரிகிரிய, பொலனறுவை ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் 287 வாக்குச்சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. இம் மாவட்டத்தில் 10 பேர் தெரிவிற்காக 13 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 2 இலட்சத்து 94 ஆயிரத்து 365 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
உத்தியோகப்பூர்வ தபால் மூல வாக்களிப்பு கடந்த மாதம் 27ஆம், 28ஆம் திகதிகளில் நடத்தப்பட்டதுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் யாவும் 05 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தமை குறிப்படத்தக்கது.
மூன்று மாகாண சபைகளும் ஜூன் 27 ஆம் திகதி கலைக்கப்பட்டன. ஜுலை 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதிவரை வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டன. ஜுலை 12 முதல் 18 வரையான காலப் பகுதிக்குள் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. ஏழு மாவட்டத்திலுமிருந்து 91 கட்சிகள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தன.
இதில் இரண்டு கட்சிகள் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுத்தாக்கல் செய்த 88 சுயேச்சைகளிலும் இரண்டு சுயேச்சைகள் நிராகரிக்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.